Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

சந்தனத்தின் பயன்கள்!

நன்றி குங்குமம் டாக்டர்

மிகவும் விலை உயர்ந்த மர வகை சந்தன மரம்தான். குளிர்ச்சியை இலைகள் மூலம் வெளியிடுபவை. இதன் காரணமாக சந்தன மரங்கள் அடர்ந்து வளரும் இடங்களில் அடிக்கடி மழைப் பொழிவு ஏற்பட்டு, மண் குளிரும். சந்தன மரத்தில் அதிகம் பயன் தருபவை அதன் மரக்கட்டைகள்தான். சந்தன விதைகள் மருத்துவத்தில் பயன்படுகின்றன. வெள்ளை சந்தன மரக்கட்டைகள் சரும பராமரிப்பு மற்றும் உடல் உள்ளுறுப்புகளின் சீரான இயக்கத்திற்கு துணைபுரிகின்றன.

அரோமாதெரபி எனும் மருத்துவத்தில் சந்தன எண்ணெய் மன அமைதிக்கும், மன அழுத்த பாதிப்புகளைப் போக்கவும், சரும வியாதிகளை குணப்படுத்தவும் உபயோகப் படுத்தப்படுகிறது. உடல் சூட்டை தணிக்கும் சித்த வைத்தியத்தில் அநேக மருந்துகள் சந்தன எண்ணெய் பயன்படுத்தி செய்யப்படுகின்றன. உடலில் பூசும் கிரீம்கள் வெயிலில் தோல் கருத்த சரும பாதிப்புகளை சரி செய்யவும். தோலுக்கு இறுக்கத்தை தரவும் பயன்படுகிறது.

சந்தனக் கட்டைகளை அரைத்து தலையில் தடவி வர கோடை வெயிலால் தலையில் ஏற்படும் கொப்புளங்கள் குணமாகும். மேலும் தலைவலி, மூளை, இதய பாதிப்புகளை சரிசெய்து, உடல்நிலையை சமநிலையில் வைக்கும்.சுத்தமான சந்தனத்தை நீரில் கரைத்து அருந்தி வர ரத்தத்தை தூய்மை செய்து உடலை குளுமையாக்கி மனதை ஊக்கப்படுத்தி, சுறுசுறுப்பாக வைத்திருக்கும். சந்தனக்கட்டையை எலுமிச்சை சாறு சேர்ந்து அரைத்து உடலில் உள்ள அரிப்பு, நமைச்சல், சொறி, சிரங்கு, தேமல் மற்றும் வீக்கம் போன்ற சரும வியாதிகளை குணப்படுத்தும்.

சந்தனத்தூளை தண்ணீரில் கொதிக்க வைத்து பருகிட, சிறுநீர் எரிச்சல் குணமாகும். சூட்டினால் ஏற்படும் கண் கட்டிகளை சந்தனம் பூச, குணமாகும். வெள்ளை சந்தனத்தூளை நீரில் இட்டு பாதியாக சுண்டியதும் அருந்த, இதய படபடப்பு, ஜுரம், உடல் மந்தம் குணமாகும்.சந்தனத்தை மருதாணி விதையோடு கலந்து, சாம்பிராணி போட்டு வர வீடுகளில் காற்று தூய்மையாகி மனம் புத்துணர்வு பெறும். சந்தன எண்ணெய் பக்கவாதம் மற்றும் முடக்கு வாதத்திற்கு வெளிபூச்சாக பூச நல்ல குணம் கிடைக்கும்.

தொகுப்பு:  - மகாலட்சுமி சுப்ரமணியன்