Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கீரைகளின் பயன்கள்

நன்றி குங்குமம் டாக்டர்

பொன்னாங்கண்ணி - நாட்டுப் பொன்னாங்கண்ணி, சீமைப் பொன்னாங்கண்ணி என இரண்டு வகைகள் உள்ளன. இந்தக் கீரை உடலை பொன் போல மின்னச் செய்யும். என்பதாலேயே இதற்கு இந்த பெயர் அமைந்ததாகச் சொல்லப்படுகிறது. இந்தக் கீரையில் இரும்புச்சத்து மற்றும் வைட்டமின்கள் நிறைந்து காணப்படுகின்றன. இந்த கீரையைக் கருவுற்றிருக்கும் பெண்கள் சாப்பிட்டு வந்தால் உடல் உறுதி பெறும். பிறக்கும் குழந்தையின் தோல் பொன் போன்று இருக்கும். இதில் நிறைய ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் இருக்கிறது இதனால், சர்க்கரைநோய் மற்றும் உயர் ரத்த அழுத்தத்தையும் கட்டுப்படுத்தும். பொன்னாங்கண்ணிக்கு இயல்பாகவே குளிர்ச்சியூட்டும் தன்மை உண்டு என்பதால், உடலின் உள்சூட்டை தணிக்கும். அதீத சூட்டினால் பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்படுதலைக் குணப்படுத்த இந்தக்கீரை பயன்படும். அத்துடன் கண்களுக்குக் குளிர்ச்சி தரும்.

முடக்கற்றான் - இதனை முடக்கு அறுத்தான் என்றும் கூறுவர். உடலில் தோன்றும் முடக்குகளை நீக்கக்கூடியது. வயதானவர்களைப் பாதிக்கும் மூட்டு சம்பந்தப்பட்ட உபாதைகளுக்கு நல்ல தீர்வு தரும். மழைக்காலங்களில் காலியிடங்கள், வேலிகள் என எங்கும் படர்ந்திருக்கும் கொடி வகை இது. கிராமங்களில் மிகச் சாதாரணமாகக் கிடைக்கும் இந்தக் கீரை பெருநகரங்களில் விலைக்கு விற்கப்படுகிறது. முடக்கற்றானை தோசை மாவுடன் கலந்தோ, ரசம் வைக்கும்போது சேர்த்தோ பயன்படுத்தலாம். குழம்பு வகைகளில் இதைச் சேர்த்தும் சாப்பிடலாம். இதைச் சாப்பிடுவதால் எலும்புகள் பலம்பெறுவதுடன் மூட்டு வலிகள் நீங்கும்.

பசலை - சதுப்பு நிலங்களில் வளரும் பசலைக்கீரை, நீர்ச்சத்து நிறைந்தது. இதில் கொடிப்பசலை, செடிப்பசலை, தரைப்பசலை போன்ற பல வகைகள் உண்டு. இதை சாப்பிடுவதால் இரும்புச்சத்துக் குறைபாடு அகலும். இது குறைந்த கலோரி உள்ள கீரை என்பதால் அனைத்து வயதினரும் இதைத் தாராளமாகச் சாப்பிடலாம். வைட்டமின் சத்துகள் அதிகமாகக் காணப்படுகிறது. இதனை பருப்பு சேர்த்து சமையல் செய்து உண்ண நீர் எரிச்சல், வாந்தி தீரும். இதை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோன் சீராகும். இதன் மூலம் ஆண்மைக் குறைபாடுகள் நீங்கும்.

வல்லாரை - இது நீரோட்டம் நிறைந்த பகுதிகளின் அருகே படர்ந்து வளரும். இதற்கு யோசனவல்லி என்ற பெயரும் உண்டு. இது நரம்புகள் வலுவாக்கி ஞாபக சக்தியைப் பெருக்கும். இதனை பருப்புகளுடன் சேர்த்துச் சமைத்துக் கொடுக்கலாம். சித்த மருத்துவத்தில் வல்லாரை நெய் முக்கியமானதாக உள்ளது. இதனை பாலில் கலந்து கொடுக்க குழந்தைகளுக்கு ஏற்படும் கணைச்சூடு, மாந்தம் ஆகியவற்றுக்கு தீர்வு கிடைக்கும். வல்லாரை சாப்பிடுவதால் உடலுக்கு வன்மை அதிகரித்து நோய் அணுகாமல் காக்கும். இன்றைய சூழலில் பலரும் உடல் நலத்துடன் வாழவும், உறுதியான உடல்வாகு பெறவும் இணை உணவுகள் (டயட்டெரி சப்ளிமெண்ட்) என்று விற்கப்படும் மருந்துகளை வாங்கிச் சாப்பிடுகிறார்கள். அதை தவிர்த்துவிட்டு, இயற்கையாக விளையும் கீரைகளை உணவில் அதிகம் சேர்த்துக் கொண்டால் அதற்கு இணையான வேறு இணை உணவுகள் எதுவும் தேவையில்லை.

தொகுப்பு: பொ. பாலாஜிகணேஷ்