Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

அத்தி மற்றும் வில்வத்தின் பயன்கள்!

நன்றி குங்குமம் டாக்டர்

அத்திமரம் தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் வளரக்கூடியது. அத்திமரத்தின் இலை, பால், பழம், பிஞ்சு, காய், பட்டை என அனைத்துமே மருந்தாகப் பயன்படுகிறது. அத்திமரம் நாட்டு அத்தி, வெள்ளை அத்தி, நல்ல அத்தி என பல வகைப்படும். இம்மரத்தின் பட்டை சாம்பல் மற்றும் சிவப்பு நிறத்தில் காணப்படும். இவற்றில் காணப்படும் காய்கள் முட்டை வடிவத்தில் இருக்கும். இவை மரத்தின் தண்டிலும் கிளைகளிலும் மற்றும் அடி மரத்திலும் கொத்துக் கொத்தாகக் காணப்படும். அத்திப்பழம் வெளிறிய மஞ்சள் நிறத்தில் காணப்படும்.

அத்தி மரத்தின் மருத்துவ குணங்கள்

அத்தி மரத்தின் வேரினால் வெள்ளை, வெட்டை, உள்ளங்கை, இனப்பெருக்க உறுப்புகளில் ஏற்படும் நோய்கள் குணமாகும்.

அத்திப்பட்டை

அத்தி மரத்தின் பட்டைக்கு ஆசனக்கடுப்பு, உதிரப்போக்கு, புண், ரத்தப்போக்கு ஆகியவை குணமாகும்.

அத்திப் பிஞ்சு

அத்திப் பிஞ்சானது மூல வாயு, மூல கிராணி, ரத்த மூலம், வயிற்றுக் கடுப்பு ஆகிய நோய்களைக் குணமாக்கும்.

அத்திக் காயின் குணம்

அத்திக் காயினால் பிரமோகம், வாத நோய், சூலை, சரீர வெப்பம், ரணம் ஆகிய வைகள் போகும். மலம் கழியச் செய்யும்.

அத்தி மரத்தின் பயன்கள்

குடல் நோய், உள்மூலம், வெளிமூலம், குடல் தள்ளல், நீரிழிவு நோய், மூட்டு வீக்கம், பித்த நோய், ஆஸ்துமா, சிறுநீரகக் கல், மலச்சிக்கல், இதயநோய், சீதபேதி, ரத்தபேதி போன்றவை குணமாகும்.

அத்திப்பழத்தில் பல வகைகள் உள்ளன. அவை சீமை அத்திப்பழம், நாட்டு அத்திப்பழம், இவற்றில் சீமை அத்திப்பழம் வெளி நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.

ஆனால் நாட்டு அத்திப்பழத்தில்தான் அதிகளவு மருத்துவப் பண்புகள் நிறைந்து காணப்படுகிறது. இவை மிகச்சிறியதாக காணப்படும். அத்திப்பழத்தில் புரோட்டின், சர்க்கரை, கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் இரும்புச்சத்து மிகுதியாகக் காணப்படுகிறது. மேலும் வைட்டமின் ஏ மற்றும் சி அதிகளவில் காணப்படுகிறது.

அத்தியின் தாவரவியல் பெயர்: பைகஸ் ரெஸிமோசா (Ficos racemosa)

தாவரக் குடும்பம் - (Moraceae)வாழிடம் சீனா, இந்தோனேஷியா, மலேசியா, ஆஸ்திரேலியா, இந்தியா.

அத்தியில் காணப்படும் தாவர வேதிப் பொருட்கள்

லீயுபால், லீயுபால் அசிட்டேட், அமைரின், பீட்டாசைட்டோஸ்டீரால், ஸ்டிக்மாஸ்டிரால், க்குமாரின், சொரியேன், காம்ப்பெரால், பெர்ஜினின், பெர்காப்டன், பிரைடுலின், காலிக் அமிலம், ரூட்டின், ரெஸிமேஸிக் அமிலம், எலாஜிக் அமிலம், அராபினேஸ் போன்றவை காணப்படுகின்றன.

ஆய்வின் மூலம் உறுதி செய்யப்பட்ட மருத்துவ பண்புகள்

சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்த, கல்லீரலை பாதுகாக்க, வயிற்றுப் போக்கை கட்டுப்படுத்த, குடற்புண் தடுக்க, புண்களை குணமாக்க, காய்ச்சலுக்கு மருந்தாக, காலாராவைத் தடுக்க, மலச்சிக்கலைத் தடுக்க, இதயநோய், மலேரியாவைத் தடுக்க என பல்வேறு நோய்களைக் குணப்படுத்த உதவுகிறது. இவை பெரும்பாலும் பதார்த்த குணபாடத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விளக்கங்களோடு ஒத்துப் போகின்றது.

வில்வத்தின் பயன்கள்

வில்வமரம், தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் வளரக் கூடிய மரமாகும். இவற்றின் வேர், இலை, பூ, பழம் என அனைத்துமே மருத்துவத் தன்மை கொண்டது. வில்வ மரத்தில் பல வகைகள் உள்ளன. அவை மகா வில்வம், கொடி வில்வம், கற்பூர வில்வம், சித்த வில்வம் ஆகும். வில்வ மரம் கண்வலி, கண் சிவப்பு, கண்ணில் ஏற்படும் அரிப்பு, காய்ச்சல், நீர்க் கோவை, தலைவலி, வயிற்றுப்புண், மலச்சிக்கல், வயிற்றுவலி, பசியின்மை எனப் பலவகை நோய்களைக் குணப்படுத்தக் கூடியதாகத் திகழ்கிறது.

வில்வ மரத்தின் நற்குணம்

வில்வ மரத்தின் தளிர் நீர்மேகத்தையும் பூ மந்தத்தையும் பிஞ்சு குன்மத்தையும் பழம் கண் இருளையும் போக்கும். வில்வத்தின் தாவரவியல் பெயர்: ஏகில் மர்மலஸ் (Aegel marmelos)

தாவரக் குடும்பம் ரூட்டேஷியே (Rutaceae)

வாழிடம் - ஆப்பிரிக்கா, இந்தியா. குறிப்பாக, இந்தியாவில் இமயமலை, உத்திரப் பிரதேசம், மேற்குவங்கம், திரிபுரா, மகாராஷ்டிரா, ஆந்திரா, கர்நாடகா, கேரளா மற்றும் தமிழ்நாடு. வில்வ மரத்தில் விட்டமின் ஏ, விட்டமின் பி, விட்டமின் சி, ரைபோ பிளேவின், நார்ச்சத்து, கார்போஹைட்ரேட்டுகள், கால்சியம், பாஸ்பேட், பொட்டாசியம், இரும்புச்சத்து போன்றவை நிறைந்து காணப்படுகின்றன.

வில்வ மரத்தில் காணப்படும் வேதிப்பொருட்கள்

கூமாரின், ஆல்கலாய்டுகள், ஸ்டீராய்டுகள், மர்மெலசின், சிக்சிமியானைன், அம்பல்லிபெரோன், ஆராப்டின், ஏஜிலின், லியூபால், சினியால், சிட்ரால், சிட்ரோநேலால், யூஜினால், மர்மிசினின், சோரிலன், மர்மின், மர்மிலைடு, லூவான்ஸிடைன், ஸ்கோபொலிடின் போன்ற நூற்றுக்கும் மேற்பட்ட வேதிப் பொருட்கள் இத்தாவரத்தில் கண்டறியப்பட்டுள்ளன.

ஆய்வின் மூலம் உறுதிசெய்யப்பட்ட மருத்துவப் பண்புகள்

கழிச்சல் மற்றும் வயிற்றுப்போக்கினைக் கட்டுப்படுத்த, புற்றுநோயைக் குணப்படுத்த, இதயத்தைப் பாதுகாக்க, வயிற்றுப்புண் வராமல் தடுக்க மற்றும் அழிக்க, காய்ச்சலைத் தடுக்க, மலச்சிக்கலைத் தடுக்க, சுவாசக் கோளாறு பிரச்னையை தடுக்க, கல்லீரலைப் பாதுகாக்க, புண்களை குணப்படுத்த, மூளைக்காய்ச்சல், ரத்த செல்களை அதிகரிக்க, கண் நோய்க்கு காரணமான கிருமிகளை அழிக்க என வில்வம் பயன்படுகிறது.

தொகுப்பு:- இரா.சர்மிளா