Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பண்ணைக் கீரை பலன்கள்!

நன்றி குங்குமம் டாக்டர்

உயிர்தொழில்நுட்பத் துறை முனைவர் ஆர். சர்மிளா

கீரைகள் நமது ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஒரு அற்புத மூலிகை ஆகும். இவற்றில் பல வகைகள் இருந்தாலும் நடைமுறையில் ஒரு சில கீரை வகைகளே அனைவராலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் பலராலும் அறியப்படாத கீரை வகைகளில் ஒன்று பண்ணைக் கீரை. பண்ணைக்கீரையின் அறிவியல் பெயர் செலோசியா அர்ஜென்டியா ஆகும். இது அமராந்திசியே எனும் தாவரக்குடும்பத்தைச் சார்ந்தது, இக்கீரை இந்தியா, இலங்கை, சீனா மற்றும் ஆப்பிரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் காணப்படுகிறது. இருப்பினும் தமிழகத்தில் வயல்வெளிகளில் சாதாரணமாக வளர்ந்து காணப்படுகின்றது.

பண்ணைக்கீரையில் சிறுபண்ணை, நறும் பண்ணை, புறப்பண்ணை, புனல் பண்ணை எனப் பல வகைகள் உண்டு. அதில் ஒன்றுதான் கோழிக்கொண்டை ஆகும். பண்ணைக் கீரைக்கு மயிலிகீரை, மகிலிக்கீரை, மெளலிக்கீரை, மசிலிக் கீரை எனப் பல பெயர்கள் உண்டு. இக்கீரையில் பல்வேறு நன்மையளிக்கும் வேதிப் பொருட்களும், ஊட்டச்சத்துகளும் நிறைந்துள்ளதால் இதனை நமது முன்னோர்கள் மூலிகைக் கீரையாக பயன்படுத்தி வந்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. பண்ணைக்கீரையின் பூக்கள் வெள்ளை மற்றும் இளம் சிவப்பு கலந்த நிறத்திலும் காணப்படும்.

பண்ணைக் கீரையின் ஊட்டச்சத்துகள்

தாதுக்கள் - இரும்பு, கால்சியம், பாஸ்பரஸ், மெக்னீசியம் உள்ளிட்ட பல்வேறு நன்மை தரும் தாதுக்கள் பண்ணைக் கீரையில் உள்ளன.

வைட்டமின்கள் - வைட்டமின்கள் ஏ, பி மற்றும் சி ஆகியவை பண்ணைக் கீரையில் நிறைந்து உள்ளன.

பண்ணைக்கீரையில் உள்ளடங்கிய தாவர மூலக்கூறுகள்

பிளேவோனாய்டுகள்: கேம்ப்பெரால், குயிர்சிடின் போன்ற சக்தி வாய்ந்த ஆன்டி ஆக்ஸிடென்டுகள் உள்ளன.பீட்டா சயனின் மற்றும் பீட்டாசாந்தைன் உள்ளன. இது ஆக்ஸிடேட்டிவ் ஸ்டிரஸை குறைத்து கல்லீரல் பாதுகாப்பினை உறுதி செய்ய உதவுகிறது.

ஸ்டிராய்டுகள் உடல் திசுக்களை பாதுகாக்க உதவுகிறது. பீனாலிக் அமிலங்கள் செல்கள் சேதமடைவதை தடுக்க உதவுகிறது.சாப்போனின்கள், கொலஸ்டிரால் அளவினை குறைத்து இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. அமராந்தைன், ஆக்சாலிக் அமிலம் உள்ளிட்ட பல்வேறு தாவர மூலக்கூறுகள் பண்ணைக் கீரையில் உள்ளன.

மருத்துவ குணங்கள்

*மூட்டுவலி, இடுப்பு வலி போன்ற பிரச்னைகளுக்கு சிறந்ததாக விளங்குகிறது.

*வயிற்றுக்கோளாறு, குடல்புண், சருமவியாதி போன்றவற்றிற்கு தீர்வளிக்கிறது.

*சிறுநீரகக் கற்களை கரைக்க உதவுகிறது. வயிற்றில் உள்ள புழுக்களை அழிக்க உதவுகிறது.

*ரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கிறது. அனிமியாவை தடுக்கிறது.

*தோல் மற்றும் முடி ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. உடல் வெப்பத்தை குறைக்கிறது. வலி நிவாரணியாக செயல்படுகிறது. நரம்பு மண்டல செயல்பாட்டினை மேம்படுத்துகிறது.

*பண்ணைக் கீரை கல்லீரல் செயல்பாட்டினை மேம்படுத்தி உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி கல்லீரலை பாதுகாக்கிறது.

*பெண்களுக்கு ஏற்படும் ஹார்மோன் சமநிலை மாற்றத்தை சரிசெய்ய உதவுகிறது.

*இந்த கீரை உடலில் உள்ள நுண்கிருமிகளை அழிக்கும் தன்மை கொண்டது, மேலும் ரத்தத்தை உறைய வைக்கும் தன்மையும் கொண்டது.

*புற்று செல்களின் வளர்ச்சியை தடுத்து புற்றுநோயைக் குணப்படுத்த உதவுகிறது.

பயன்படுத்தும் முறை

இந்த கீரையை பருப்புடன் சேர்த்து கடைந்து சாப்பிடலாம் அல்லது சாறு எடுத்து மற்ற மருந்துகளுடன் கலந்து குடிக்கலாம்.பண்ணைக் கீரையின் இலைகளை சாம்பார், கூட்டு, பொரியல், மசாலா, அடை, சூப் மற்றும் பச்சடி போன்றவற்றை தயாரித்து அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வது நலம் தரும். மேலும், இது ஒரு சத்து நிறைந்த இயற்கை மருந்து எனக் கூறலாம்.

இதன் நன்மைகள் அறிவியல் ரீதியாகவும் உறுதிப்படுத்தப்பட்டிருப்பதால் சமநிலையான உணவு முறையில் இதனைச் சேர்ப்பது நிச்சயமாக ஆரோக்கியமான வாழ்க்கை முறையை நிலை நிறுத்த உதவும் என்பதில் எந்தவொரு சந்தேகமும் இல்லை. பண்ணைக் கீரையைப் பற்றி அகத்தியர் குணவாகடம் என்னும் நூலில் கீழ்வருமாறு கூறுகிறார்.

பண்ணையிளம் கீரையது பற்று

மலமிளக்கும்

எண்ணூங் குடலுக்கிதங்

கொடுக்கும் - பெண்ணேகேள்!

சீதங் கரப்பான் சிரங்குபுண்

மாற்றிவிடும்

கோதங் கிலையதனைக் கொள்.