நன்றி குங்குமம் டாக்டர்
சிறுநீரகம்: கழிவுத் தொழிற்சாலை
டயாலிசிஸ் என்பது நோயை முற்றிலும் குணப்படுத்தும் மருந்து அல்ல, அது மாற்று ஏற்பாடு. எனினும், இது அளிக்கும் நன்மைகள் அளப்பரியவை. டயாலிசிஸ் இல்லாவிடில் சில வாரங்களில் மரணத்தைச் சந்திக்க வேண்டிய நோயாளிகள், இதன் மூலம் பல ஆண்டுகள் உயிர் வாழ முடிகிறது. மூச்சுத்திணறல், வாந்தி மற்றும் வீக்கங்கள் குறைவதால் நோயாளியின் அன்றாடத் துயரம் நீங்குகிறது. சரியான முறையில் டயாலிசிஸ் செய்துகொள்ளும் பலர் தங்களின் அலுவலகப் பணிகளைத் தொடரவும், குடும்பப் பொறுப்புகளைக் கவனிக்கவும், சமூக நிகழ்வுகளில் பங்கேற்கவும் முடிகிறது.
டயாலிசிஸ் நோயாளிகளுக்கான உணவு மற்றும் வாழ்க்கை முறை விதிகள்
டயாலிசிஸ் இயந்திரம் 4 மணி நேரத்தில் நச்சுகளை மட்டுமே பிரிக்கும். ஆனால், நாம் 24 மணி நேரமும் உண்ணும் உணவுதான் ரத்தத்தின் தரத்தைத் தீர்மானிக்கிறது. எனவே, டயாலிசிஸ் நோயாளி உணவுக் கட்டுப்பாட்டை ஒரு தவம் போலக் கடைபிடிக்க வேண்டும்.
சோடியம் மற்றும் நீர் மேலாண்மை
ஊறுகாய், அப்பளம், கருவாடு, பதப்படுத்தப்பட்ட உணவுகளைத் தவிர்க்க வேண்டும். சமையலில் மிகக் குறைந்த அளவு உப்பு மட்டுமே சேர்க்க வேண்டும். ஒரு நாளுக்கு மருத்துவர் பரிந்துரைத்த அளவு மட்டுமே, பொதுவாக 1 லிட்டர் அளவு நீர் அருந்த வேண்டும். தாகம் அதிகமாக இருக்கும் போது ஐஸ் கட்டிகளை வாயில் அடக்கிக் கொள்ளலாம்.
பொட்டாசியம் மற்றும் பாஸ்பரஸ் கட்டுப்பாடு
இளநீர், வாழைப்பழம், மாம்பழம், உருளைக்கிழங்கு, கீரைகள், தக்காளி, நட்ஸ் போன்ற பொட்டாசியம் அதிகமுள்ள உணவுகளைக் குறைக்க வேண்டும். பால் பொருட்கள், முட்டையின் மஞ்சள் கரு, கோலா பானங்களைத் தவிர்க்க வேண்டும்.
புரதம் அல்லது புரோட்டீன் மேலாண்மை
டயாலிசிஸ் சிகிச்சையைத் தொடங்குவதற்கு முன்பு உடலில் புரதம் குறைக்கப்பட வேண்டும். ஆனால் டயாலிசிஸ் தொடங்கிய பின் புரதத்தின் அளவு அதிகரிக்கப்பட வேண்டும். ஏனெனில் டயாலிசிஸ் நடக்கும் போது உடலில் இருந்து அமினோ அமிலங்கள் இழக்கப்படும். எனவே கோழி இறைச்சி, மீன், முட்டையின் வெள்ளைக்கரு ஆகியவற்றை மருத்துவர் கூறும் அளவில் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
டயாலிசிஸ் பற்றிய தவறான நம்பிக்கைகளும் உண்மைகளும்
முதலாவது தவறான நம்பிக்கை: ஒருமுறை டயாலிசிஸ் ஆரம்பித்தால் நோயாளி சில நாட்களிலோ அல்லது மாதங்களிலோ இறந்துவிடுவார்.
உண்மை: இது முற்றிலும் தவறான வதந்தி. டயாலிசிஸ் செய்வதால் யாரும் இறப்பதில்லை, மாறாகச் செய்யாமல் விடுவதால்தான் நச்சு கூடி இறக்கிறார்கள். டயாலிசிஸ் செய்துகொண்டே 15, 20 ஆண்டுகளுக்கும் மேலாகச் ஆரோக்கியமாக வாழும் மனிதர்கள் உலகில் அநேகம் பேர் உள்ளனர்.
இரண்டாவது தவறான நம்பிக்கை: டயாலிசிஸ் நோயாளி எப்போதும் படுக்கையிலேயே கிடக்க வேண்டும். அவரால் எந்த வேலையும் செய்ய முடியாது.
உண்மை: டயாலிசிஸ் என்பது படுக்கையில் தள்ளும் சிகிச்சை அல்ல, படுக்கையில் கிடப்பவரை எழுந்து நடக்க வைக்கும் சிகிச்சை. முறையான உணவு, மருத்துவர் பரிந்துரைக்கும் மருந்துகள் மற்றும் சரியான டயாலிசிஸ் சுழற்சியைப் பின்பற்றுபவர்கள் தங்களின் பணிகளைத் தடையின்றிச் செய்கிறார்கள்.
மூன்றாவது தவறான நம்பிக்கை: டயாலிசிஸ் செய்தால் சிறுநீரகம் முற்றிலும் குணமாகிவிடும்.
உண்மை: அக்யூட் எனப்படும் தற்காலிகப் பாதிப்பில் சிறுநீரகம் குணமாகும். ஆனால், குரோனிக் எனப்படும் முற்றிய நிலையில் டயாலிசிஸ் சிறுநீரகத்தை எக்காலத்திலும் குணப்படுத்தாது. அது சிறுநீரகம் செய்ய வேண்டிய வேலையைத் தான் செய்யும். நிரந்தரத் தீர்வு சிறுநீரக மாற்று அறுவைசிகிச்சை மட்டுமே.
வருமுன் காப்போம்: சிறுநீரகத்தைப் பாதுகாக்கும் பொன்னான வழிகள்!
சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும். டயாலிசிஸ் என்ற நிலைக்குச் செல்லாமல் நமது விலைமதிப்பற்ற இயற்கைச் சிறுநீரகங்களை வாழ்நாள் முழுவதும் ஆரோக்கியமாகப் பாதுகாக்க நாம் செய்ய வேண்டியவை:
உங்களுக்குச் சர்க்கரை நோயோ அல்லது உயர் ரத்த அழுத்தமோ இருந்தால், அவற்றை வெறும் மாத்திரைகளோடு நிறுத்தாமல், உணவுக் கட்டுப்பாடு மற்றும் உடற்பயிற்சி மூலம் எப்போதும் சரியான எல்லையில் வைத்திருங்கள். சாதாரண ஆரோக்கியமான மனிதர்கள் ஒரு நாளைக்குச் சுமார் 2.5 முதல் 3 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். லேசான உடல்வலி, காய்ச்சல், தலைவலிக்கு, மருத்துவர் ஆலோசனை இல்லாமல் மாத்திரைகளை மருந்துக் கடைகளில் வாங்கி விழுங்குவதை முற்றிலும் தவிருங்கள்.
புகை மற்றும் மதுப்பழக்கத்தைத் துறப்போம். 40 வயதைக் கடந்தவர்கள், வருடத்திற்கு ஒருமுறை எளிய ரத்தப் பரிசோதனையான சீரம் கிரியாட்டினின் மற்றும் சிறுநீர்ப் பரிசோதனையான யூரினரி அல்புமின் ஆகியவற்றைச் செய்து கொள்ள வேண்டும். இதன் மூலம் சிறுநீரகப் பாதிப்பை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து டயாலிசிஸ் நிலைக்குச் செல்லாமல் தடுத்துவிடலாம்.
நிறைவுரை
டயாலிசிஸ் என்பது வாழ்க்கையின் முடிவு அல்ல, அது நவீன மருத்துவ அறிவியல் நமக்கு வழங்கியிருக்கும் ஒரு மறுபிறவி. சிறுநீரகம் செயலிழந்த நிலையிலும் ஒரு மனிதனை வாழ வைக்கும் இந்தத் தொழில்நுட்பம் மருத்துவ உலகின் ஆகச்சிறந்த மைல்கல். ஆரம்ப நிலையிலேயே சிறுநீரக நோய்களைக் கண்டறிந்து விழிப்புணர்வுடன் செயல்படுவதே புத்திசாலித்தனம். ஒருவேளை காலம் கடந்து டயாலிசிஸ் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டாலும், அச்சப்படாமல் முறையான மருத்துவ வழிகாட்டுதல், உணவு ஒழுக்கம் மற்றும் நேர்மறை எண்ணங்களோடு அதனை எதிர்கொண்டால், டயாலிசிஸுடன் கூடிய வாழ்வையும் ஒரு வசந்த காலமாக மாற்ற முடியும் என்பதே நிதர்சனமான உண்மை! உடல் நலம் பேணுவோம்; சிறுநீரகம் காப்போம்!
(தொடரும்)
தொகுப்பு: பொதுநல மருத்துவர் சுதர்சன் சக்திவேல்


