Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

பியூட்டி டிப்ஸ்!

நன்றி குங்குமம் டாக்டர்

இறந்த செல்களை அகற்ற...

பப்பாளியின் சதைப் பாகத்தை நன்றாக குழைத்து முகத்தில் தடவ வேண்டும். ஐந்து நிமிடம் கழித்து மெதுவாக தேய்த்து எடுக்கவும். எந்த வகை சருமமாக இருந்தாலும் இதைச் செய்யலாம். எண்ணெய் வடியும் சருமத்தினர் அரிசி மாவு, பனீர் தலா ஒரு தேக்கரண்டி எடுத்து அதனுடன் 4 சொட்டு தேன் கலந்து கன்னங்களில் பூசி பத்து நிமிடம் கழித்து மேல் நோக்கி மசாஜ் செய்து கழுவி விட வேண்டும். பருக்களினால் ஏற்படும் தழும்புகளை நீக்கும்.

புருவங்கள் அடர்த்தியாக வளர...

புருவத்தில் முடி அடர்த்தியாக இல்லாதவர்கள். படுக்கும்போது ஐந்து சொட்டு விளக்கெண்ணெயுடன் இரண்டு சொட்டு அரோமா ரோஸ் எண்ணெய் கலந்து புருவத்தில் தேய்த்தால் முடி அடர்த்தியாகும். விளக்கெண்ணெய் தடவி வட்டவடிமாக மசாஜ் செய்தாலும் நல்ல பலன் கிடைக்கும்.

கன்னங்கள் பளபளக்க...

ஒரு தேக்கரண்டி முட்டையின் மஞ்சள் கரு, ஒரு தேக்கரண்டி வாழைப்பழம் கலந்து கன்னத்தில் தடவி 10 நிமிடம் கழித்து கழுவி விடவும். முட்டையில் புரதம் அதிகமுள்ளது. வாழைப்பழத்தில் பாஸ்பரஸ் சத்து இருப்பதால் சருமம் மேலும் பொலிவாகும்.

அழகான தோற்றம் பெற யோகாசனம்

யோகாசனம் அழகு மற்றும் ஆரோக்கியத்துக்கு உதவும். ஒவ்வொரு பிரச்னைக்கும் பிரத்யேக ஆசனம் உண்டு. முறையாகக் கற்றுக் கொண்டு செய்வது, சிறந்த ஆரோக்கியம் தரும். யோகாசனம் செய்வோருக்கு இளமையும், அழகும், தெளிவான மனநிலையும் கிட்டும். இதை யோகாசன நிபுணரின் வழிகாட்டுதலோடு கற்றுக் கொண்டு செய்வது முழுமையான பலன்களைத் தரும்.

எண்ணெய் மசாஜ்

ஆலிவ் எண்ணெய், தேங்காய் எண்ணெய் தலா 2 தேக்கரண்டி. அதனுடன் நல்லெண்ணெய், விளக்கெண்ணெய் அரை தேக்கரண்டி கலந்து லேசாக சூடுபடுத்தி தலையில் மசாஜ் செய்தால் முடி உதிர்வு நின்று நன்றாக வளரும்.

தேன் பப்பாளி தயிர்

தேன், பப்பாளி மற்றும் தயிர் அனைத்தையும் தலா ஒரு தேக்கரண்டி எடுத்து கலந்து முகத்தில் பூசி மென்மையாக சுழற்சி முறையில் பத்து முதல் பதினைந்து நிமிடங்கள் மசாஜ் செய்யவும். ஒரு வாரம் தொடர்ந்து பயன்படுத்த, இந்தக் கலவையில் உள்ள சத்துக்கள் அனைத்தும் முகத்திற்கு கிடைக்கும். வறண்ட தேகம் உடையவர்கள் இதைப் பயன்படுத்தினால், தேகம் நீர்த்துவம் பெற்று புத்துணர்ச்சி அடையும்.

மென்மையான தேகத்திற்கு...

கோடை காலம் வரப்போகிறது. எனவே, சருமத்தை பாதுகாக்க இயற்கை வழிகளை தெரிந்து கொள்ளலாம். ஆவாரம்பூ, ரோஜாப்பூ, செம்பருத்திப் பூ, எலுமிச்சைத் தோல், ஆரஞ்சுப் பழத்தோல், அதிமதுரம், ஜாதிக்காய், கிச்சிலிக் கிழங்கு, வெட்டிவேர் இவற்றை சம அளவு எடுத்து உலர்த்தி பொடி செய்து வைத்துக்கொண்டு நீரில் குழைத்து, குளியலுக்குப் பயன்படுத்தலாம். மென்மையான தேகத்தைப் பெற ஆசைப்படுபவர்கள் இந்த கலவையை முயன்று பார்க்கலாம்.

முகத்தை மெருகேற்ற...

முகத்தை மெருகேற்ற மஞ்சள் மற்றும் தக்காளியை சேர்த்து அரைத்து தடவி வரலாம். கடலை மாவோடு மஞ்சள் சேர்த்து, பாலில் கலந்து முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தடவி வர, சருமத்தை பளிச்சென்று காட்டும். எண்ணெய்ப் பசையைப் போக்க, மஞ்சளோடு முல்தானிமட்டி கலந்த ஃபேஸ்பேக் உடனடி பலன் கொடுக்கும். மஞ்சளோடு சேர்த்து, உடலுக்கு மணமூட்டும் குளியல் பொடியாக கஸ்தூரி மஞ்சளைப் பயன்படுத்தலாம். இக்காலத்தில் மாசு காரணமாக தேகத்தில் தோன்றும் ஒவ்வாமை சார்ந்த நோய்களுக்கு, மருத்துவ குணம் மிக்க கஸ்தூரி மஞ்சளை அரைத்துப் பூசுவது அற்புதமான பலனளிக்கும். மஞ்சளோடு சேர்த்து, கஸ்தூரி மஞ்சளையும் அரைத்து முகத்தில் தடவ அழகு பளிச்சிடும்.

அழகு தரும் தேன்

இரண்டு தேக்கரண்டி தேனோடு ஒரு தேக்கரண்டி குங்குமப்பூ, அரை தேக்கரண்டி அதிமதுரம் பொடி கலந்து எட்டுமணி நேரம் ஊற வைக்க வேண்டும். அடுத்த நாள் அவற்றை எடுத்து கருமை நிறம் உள்ள இடங்களில் தடவி, பதினைந்து நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரினால் கழுவ வேண்டும். இதனால் முகம் வெளுப்பாகி சிவப்பு நிறம் பெறும்.

நகம் உடையாமல் இருக்க...

ஆலிவ் எண்ணெயை லேசாக சூடாக்கி சிறிது நேரம் விரல்களை அதில் ஊறவிடலாம். கடையில் வெள்ளை ஜெலட்டின் பவுடர் (கால்சியம் சத்துள்ளது) கிடைக்கும். அதை வாங்கி இரண்டு தேக்கரண்டி எடுத்து, நான்கு தேக்கரண்டி இளஞ்சூடான நீரில் கரைத்து 10 நிமிடம் விரல்களை ஊற வைக்கவும்.

தொகுப்பு: ஸ்ரீ தேவி குமரேசன்