Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement Tafe

ஆல்யா மானசா ஃபிட்னெஸ் ரகசியங்கள்!

நன்றி குங்குமம் டாக்டர்

தமிழ் சின்னத்திரை ரசிகர்களின் உள்ளத்தை கொள்ளைக் கொண்ட நடிகைகளில் தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்திருப்பவர் ஆல்யா மானசா. தனது இயல்பான நடிப்பு, புன்னகை மற்றும் எளிமையான குணத்தால் ஏராளமான ரசிகர்களின் மனதை கவர்ந்துள்ளார். நடிப்பில் மட்டுமல்லாமல், உடல்தகுதியிலும் அவர் காட்டும் அர்ப்பணிப்பு பல பெண்களுக்கு முன்மாதிரியாக உள்ளது. குறிப்பாக திருமணம் மற்றும் இரண்டு குழந்தைகள் பிறந்த பிறகும், தனது உடல்நலத்தையும் உடற்கட்டையும் சிறப்பாக பராமரித்து வருவது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

கர்ப்ப காலத்தில் உடல் எடை அதிகரிப்பது இயற்கையான மாற்றம். ஆனால் குழந்தை பிறந்த பிறகு உடலை பழைய நிலைக்குக் கொண்டு வருவது பொறுமையும் விடாமுயற்சியும் தேவைப்படும் செயலாகும். இதை ஆல்யா மானசா மிகவும் நிதானமாக அணுகினார். திடீர் டயட் அல்லது கடுமையான உடற்பயிற்சியைத் தேர்வு செய்யாமல், மருத்துவர் மற்றும் பயிற்சியாளர்களின் ஆலோசனையுடன் படிப்படியாக உடலை மீண்டும் வலுப்படுத்தும் பயிற்சிகளை மேற்கொண்டார்.

இதன் விளைவாக, கணிசமான அளவில் உடல் எடையைக் குறைத்து, ஆரோக்கியமான உடற்கட்டைப் பெற்றார். சமூக வலைதளங்களில் அவர் பகிர்ந்த மாற்றப் புகைப்படங்கள் பல பெண்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தின. அவரது ஃபிட்னெஸ் ரகசியங்களை தெரிந்து கொள்வோம்.

வொர்க்கவுட்ஸ்

நான் தினசரி ஒரே மாதிரியான உடற்பயிற்சிகளை மேற்கொள்ளாமல் பல்வேறு அம்சங்கள் இடம்பெறும் வகையில் உடற்பயிற்சியை மேற்கொள்கிறேன். அந்தவகையில், உடலின் அனைத்து தசைகளும் செயல்படும் வகையில் திட்டமிட்டு பயிற்சி செய்கிறேன்.

எனது பயிற்சிகளில் இடம்பெறும் முக்கிய அம்சங்கள் என்னவென்றால்

*வேக நடை மற்றும் டிரெட்மில் ஓட்டம்

*சைக்கிள் பயிற்சி

*ஸ்குவாட்ஸ், லஞ்சஸ் போன்ற கால்தசை பயிற்சிகள்

*எடைத் தூக்கும் பயிற்சிகள்

*கோர் (Core) தசைகளை வலுப்படுத்தும் பயிற்சிகள்

*ஸ்ட்ரெச்சிங் மற்றும் உடல் நெகிழ்வுத் திறன் பயிற்சிகள்

இந்தப் பயிற்சிகள் உடலில் இருக்கும் அதிகப்படியான கொழுப்பைக் குறைப்பதோடு மட்டுமல்லாமல், உடல் வலிமை, சமநிலை மற்றும் சகிப்புத் தன்மையையும் அதிகரிக்கின்றன.

டயட்

ஒருவர் உடலை ஆரோக்கியமாகவும், கட்டுகோப்பாகவும் பராமரிக்க உடற்பயிற்சி மட்டும் போதாது; சரியான உணவு முறையும் அவசியமாகும். அந்தவகையில் எனது உணவுப் பழக்கங்களில் இடம்பெறும் முக்கிய அம்சங்கள் என்னவென்றால்

*புரதச்சத்து நிறைந்த முட்டை, பருப்பு மற்றும் பயறு வகைகள்

*பச்சைக் காய்கறிகள் மற்றும் கீரைகள்

*பருவத்திற்கேற்ற பழங்கள்

*போதுமான அளவு தண்ணீர்

*வீட்டில் தயாரிக்கப்பட்ட சத்தான உணவுகள்

*சர்க்கரை மற்றும் அதிக எண்ணெய் உணவுகளைத் தவிர்த்தல்

*ஜங்க் ஃபுட் மற்றும் குளிர்பானங்களை குறைத்தல்

அளவான உணவு, சரியான நேரத்தில் உண்பது மற்றும் அதிகமாக பசியடையாமல் இருப்பது போன்ற எளிய பழக்கங்களை கடைபிடித்து வருகிறேன்.

மன நலமும் முக்கியம்

உடல்தகுதி என்பது உடல் மட்டும் சார்ந்ததல்ல; மனநலமும் அதில் முக்கிய பங்கு வகிக்கிறது. குடும்பம், குழந்தைகள், படப்பிடிப்பு என பிஸியான அட்டவணை இருந்தாலும், மனஅழுத்தத்தை கட்டுப்படுத்த முயற்சிக்கிறேன். குடும்பத்துடன் செலவிடும் நேரம், போதுமான தூக்கம் மற்றும் நேர்மறையான எண்ணங்கள் ஆகியவை என்னை எப்போதும் உற்சாகமாக வைத்திருக்கின்றன. உடல் எடையைக் குறைப்பது ஒரு போட்டி அல்ல; அது ஆரோக்கியமான வாழ்க்கையை நோக்கிய பயணம்.

பிறருடன் ஒப்பிடாமல், தன்னுடைய உடல்நிலைக்கு ஏற்ற இலக்கை நிர்ணயித்து தொடர்ந்து முயற்சி செய்தால் ஆரோக்கியமாகவும் கட்டுகோப்பான உடல் அமைப்புடன் யாரும் வாழலாம். அதேசமயம். ஒரே நாளில் பெரிய மாற்றத்தை எதிர்பார்க்காதீர்கள்; தினமும் செய்யும் சிறிய முயற்சிகளே நாளைய பெரிய வெற்றியை உருவாக்கும்.