நன்றி குங்குமம் டாக்டர்
காலையில் படுக்கையை விட்டு எழும்போது மூட்டுகளில் ஒருவித இறுக்கம், மாடிப்படிகளில் ஏறும்போது கால்களில் பிடிப்பு அல்லது வலி, கீழே சம்மணம் போட்டு உட்கார்ந்து எழுவதில் சிரமம், தண்ணீர் பாட்டிலின் மூடியைத் திறக்கும்போது கூட கை விரல்களில் சுளீரென்ற வேதனை... இந்த அறிகுறிகள் உங்களுக்கும் இருக்கிறதா?
அப்படியானால் நீங்கள் இதை நிச்சயம் தெரிந்துகொள்ளவேண்டும் என்கிறார் முதியோர் நல மருத்துவ நிபுணர் எஸ்.லாவண்யா.‘‘உங்களுக்கு இருக்கும் இந்த அறிகுறிகள் எல்லாமே நம் வீடுகளில் பலரும் அன்றாடம் சந்திக்கும், அதேநேரம் மிகச் சாதாரணமாகக் கடந்துபோகும் அறிகுறிகள்தான். இதற்கு நாம் உடனடியாகச் சொல்லும் சமாதானம் ‘எனக்கென்ன வயசா ஆகுது... இதெல்லாம் வயசான காலத்துலதானே வரும்’ என்று!ஆனால், ஆர்த்ரைடிஸ் எனப்படும் மூட்டு அழற்சி நோய் வாழ்வின் எந்தக் கட்டத்திலும், எந்த வயதினரையும் பாதிக்கலாம்.
இதன் எச்சரிக்கை மணிகளை ஆரம்பத்திலேயே கண்டறிந்தால் மட்டுமே, நம் உடலின் இயங்குதிறனையும், பிறரை எதிர்பார்க்காத தற்சார்பு வாழ்க்கையையும் நம்மால் பாதுகாக்க முடியும்...’’ என்றபடி விரிவாக விளக்கத் தொடங்கினார் டாக்டர் எஸ்.லாவண்யா.
சின்னஞ்சிறு வலி... தலைகீழாக மாறும் வாழ்க்கை முறை!
மூட்டுகளைப் பாதிக்கும் வலி, விறைப்புத் தன்மையை உண்டாக்கும் இறுக்கமான உணர்வு, வீக்கம் மற்றும் அசைவுகளில் சிரமத்தை ஏற்படுத்தும் நிலைகளையே நாம் பொதுவாக ‘ஆர்த்ரைடிஸ்’ (Arthritis) என்கிறோம். வயது கூடும்போது சில வகையான ஆர்த்ரைடிஸ் பாதிப்புகள் ஏற்படும் ஆபத்து அதிகரிக்கிறது என்பது உண்மைதான் என்றாலும், இது இளைஞர்களுக்கும் வரக்கூடியது என்பது பலருக்கும் தெரியவில்லை என்பது கவலைக்குரிய விஷயம்.
முன்பு ஏற்பட்ட காயங்கள் அல்லது விபத்துகள், உடல் பருமன், ஒரே இடத்தில் மணிக்கணக்கில் உட்கார்ந்து கொண்டு வேலை பார்க்கும் சோம்பலான வாழ்க்கை முறை, பரம்பரை பரம்பரையாக இருக்கும் உடல்நலப் பிரச்னை (குடும்ப வரலாறு) மற்றும் சில இணை நோய்கள் ஆகியவையும் மூட்டு பாதிப்புகளுக்கு முக்கியக் காரணங்களாக அமைகின்றன.
இவற்றில் மிகவும் பொதுவான வகை ஆஸ்டியோஆர்த்ரைடிஸ் (Osteoarthritis). எளிமையாகச் சொல்வதென்றால், நமது எலும்புகள் ஒன்றுடன் ஒன்று உராய்ந்து விடாமல் மென்மையாக இயங்குவதற்காக மூட்டுகளுக்கு இடையே ஒரு பாதுகாப்பு மெத்தை (Cushioning - குருத்தெலும்பு) உள்ளது. காலப்போக்கில் இந்த மெத்தை போன்ற பகுதி தேய்ந்து போகும்போது வலி மற்றும் மூட்டு இறுக்கம் உருவாகிறது. முழங்கால், இடுப்பு, கைகள் மற்றும் முதுகுத்தண்டு போன்ற பகுதிகளே இதனால் பொதுவாகப் பாதிக்கப்படுகின்றன.
இந்தத் தேய்மானம் நம் அன்றாட வாழ்க்கையில் ஏற்படுத்தும் மாற்றங்கள் மிக நுட்பமானவை. குறிப்பாக, மாலையில் உற்சாகமாக நீண்ட தூரம் வாக்கிங் சென்று வரும் ஒருவர், முழங்கால் வலி காரணமாகத் தனது நடைப்பயணத் தூரத்தைக் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைத்துக் கொள்வதை நீங்கள் பார்த்திருப்பீர்கள்.சிலர் படிகளில் ஏறுவதைத் தவிர்த்து லிஃப்ட்டை மட்டுமே ஏற ஆரம்பித்திருப்பதையும் நாம் பார்த்திருப்போம்; நாற்காலியிலிருந்து எழும்புவதற்கு அதிகநேரம் எடுத்துக் கொள்வதையும் நாம் கவனித்திருப்போம்.
இன்னும் சிலர் நீண்ட நேரம் ஒரே இடத்தில் உட்கார்ந்திருக்க முடியாது என்ற அசௌகரியத்தால் பயணங்களையே முற்றிலுமாக நிறுத்தி விடுவதையும் கேட்டிருப்போம். இவை நமக்கு வெறும் பழக்கவழக்க மாற்றங்கள் போலத் தோன்றலாம்; ஆனால், மூட்டுவலி உங்களின் வாழ்க்கைத் தரத்தைப் படிப்படியாகக் குறைக்கத் தொடங்கிவிட்டது என்பதற்கான ஆரம்பக்கட்ட எச்சரிக்கை மணிகள் இவை என்பது உங்களுக்குத் தெரியுமா?
எல்லா மூட்டுவலியும் ‘வயதானதால்’ மட்டுமே வருவது அல்ல!
அனைத்து மூட்டுவலியுமே ஆர்த்ரைடிஸ் ஆகிவிடாது. வழக்கத்திற்கு மாறாகக் கடுமையான உடல் உழைப்பை மேற்கொண்ட பிறகு ஏற்படும் தற்காலிக வலி, போதிய ஓய்வு எடுத்தாலே சரியாகிவிடக்கூடும். ஆனால், பல வாரங்களாகத் தொடரும் வலி, அடிக்கடி வந்துபோகும் வலி அல்லது நாளுக்கு நாள் தீவிரமடையும் வலியை ஒருபோதும் அலட்சியப்படுத்தக் கூடாது.காலையில் எழும்போது மூட்டுகளில் ஏற்படும் இறுக்கம் (Morning stiffness), மூட்டுகளைச் சுற்றி வீக்கம், மூட்டுகளை இயல்பாக அசைக்க முடியாத நிலை அல்லது அன்றாடக் கடமைகளைச் செய்வதில் ஏற்படும் சிரமம்... ஆகியவை உடனடியாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டிய அறிகுறிகள் என்பதை இனியாவது கவனத்தில் கொள்ளுங்கள்.
குறிப்பாக, ஏதேனும் ஒரு மூட்டில் திடீரெனக் கடுமையான வலி, வீக்கம், தொட்டால் சூடாக இருத்தல் அல்லது சிவந்து போதல் ஆகியவற்றுடன் காய்ச்சலும் சேர்ந்திருந்தால், துளியும் தாமதிக்காமல் நீங்கள் உடனடியாக அவசர மருத்துவச் சிகிச்சையை நாட வேண்டும்.மூட்டுப் பிரச்னைக்கான உண்மையான காரணத்தை எவ்வளவு விரைவாகக் கண்டறிகிறோமோ, அவ்வளவுக்கு அவ்வளவு எளிதாக அதைக் கட்டுப்படுத்தி, மூட்டுகளின் உறுதித்தன்மையை நீண்ட காலத்திற்குத் தக்கவைத்துக் கொள்ள முடியும்.
வலி நிவாரணிகள் உங்கள் அன்றாடப் பழக்கமாகிவிட வேண்டாம்!
மூட்டுவலி தலைதூக்கும் போதெல்லாம் பலரும் செய்யும் உடனடி வேலை, மருந்துக் கடைகளில் கைவசம் உள்ள ஏதேனும் ஒரு பெயின் கில்லரை கேட்டு வாங்கி விழுங்குவதுதான்.
இது தற்காலிகமாக வலியிலிருந்து விடுபட உதவலாமே தவிர, மூட்டின் உள்ளே வலிக்குக் காரணமான உண்மையான பிரச்னையை ஒருபோதும் சரிசெய்யாது.குறிப்பாக, நீரிழிவு (Diabetes), ரத்தக் கொதிப்பு (BP), இதய நோய்கள் போன்றவற்றுக்கு ஏற்கெனவே மருந்துகளை உட்கொண்டு வரும் முதியவர்கள் இதில் அதீத எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
மருத்துவரின் பரிந்துரையின்றித் தொடர்ந்து வலி நிவாரணிகளை எடுத்துக்கொள்வது அனைவருக்கும் பாதுகாப்பானது அல்ல; அது உள் உறுப்புகளுக்குப் பக்கவிளைவுகளை உண்டாக்கலாம். வலியைத் தற்காலிகமாக மறைப்பதை விடுத்து, வலி உருவாவதற்கான அடிப்படைக் காரணத்தைக் கண்டறிந்து தகுந்த மருத்துவச் சிகிச்சையைப் பெறுவதே விவேகமானது.
உடற்பயிற்சியும் ஒரு மருந்துதான்!
மூட்டுவலியால் அவதிப்படுபவர்கள் மத்தியில் உள்ள மிகப்பெரிய தவறான கருத்து, ‘வலி இருக்கும் மூட்டுகளுக்குப் பூரண ஓய்வுதான் தேவை’ என்பது. ஆனால், பெரும்பாலான நிலைகளில், மூட்டுகளின் ஆரோக்கியத்தைப் பராமரிக்கத் தகுந்த உடற்பயிற்சிகள் மிக மிக அவசியமானவை.மருத்துவர் அல்லது பிசியோதெரபிஸ்ட்டின் வழிகாட்டுதலோடு நோயாளியின் உடல்தகுதிக்கு ஏற்ப நடைப்பயிற்சி, மூட்டுகளைத் தளர்த்தும் பயிற்சிகள், நீச்சல் போன்ற மூட்டுகளுக்கு அதிக அழுத்தம் தராத மிதமான உடற்பயிற்சிகளை மேற்கொள்ளலாம். இவை மூட்டுகளின் நெகிழ்வுத்தன்மையை அதிகரிப்பதுடன், மூட்டுகளைத் தாங்கிப் பிடிக்கும் தசைகளையும் பலப்படுத்துகின்றன.
அடுத்ததாக, உடல் எடையைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதும் சம அளவில் முக்கியமானது; குறிப்பாக முழங்கால் மற்றும் இடுப்புப் பகுதி மூட்டுகளில் பிரச்னை இருப்பவர்களுக்கு இது மிக அவசியம். நாம் அன்றாடம் செய்யும் ஆயிரக்கணக்கான அசைவுகளையும் நடவடிக்கைகளையும் நம் மூட்டுகள்தான் தாங்குகின்றன. எனவே, கூடும் ஒவ்வொரு கூடுதல் கிலோ எடையும் மூட்டுகளின் மீது அதிகப்படியான அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. உணவுக் கட்டுப்பாட்டிலும், உடற்பயிற்சியிலும் நாம் கொண்டுவரும் சிறிய ஆனால் நிலையான மாற்றங்கள், மூட்டுகளின் இயக்கத்தை எளிதாக்கும்.
மூட்டுகளைப் பாதுகாப்பது சுதந்திரமான வாழ்க்கையைப் பாதுகாப்பதாகும்!
முதியவர்களைப் பொறுத்தவரை மூட்டுப் பிரச்னைகள் என்பது வெறும் உடல் வலியைத் தாண்டிய உளவியல் பாதிப்புகளையும் ஏற்படுத்துகின்றன. நாம் நடப்பது கடினமாகும்போது, அவர்களின் இயக்கம் குறைகிறது; தசைகளின் வலிமை குறைகிறது; இறுதியாகச் சின்னசின்ன வேலைகளுக்கும் நாம் அடுத்தவர்களைச் சார்ந்திருக்க வேண்டிய சூழல் உருவாகிறது.வலிக்கும், இயங்க முடியாது என்ற அச்சத்தினாலும் பலர் பயணங்களைத் தவிர்ப்பது, நண்பர்களைச் சந்திப்பது மற்றும் தாங்கள் ரசித்துச் செய்துவந்த மனதிற்குப் பிடித்த பொழுதுபோக்குகளில் இருந்து ஒதுங்கிக்கொள்வது எனத் தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்கின்றனர்.
அதனால்தான் சொல்கிறோம் - நீண்ட நாட்களாக இருக்கும் மூட்டுவலியை ஒருபோதும் ‘வயதாகிவிட்டது’ என்று சாதாரணமாக ஏற்றுக்கொண்டு அமைதியாக இருந்து விடாதீர்கள்.
வயது கூடும்போது ஆர்த்ரைடிஸ் வருவதற்கான வாய்ப்பு அதிகரிக்கலாம்; ஆனால், உங்கள் அன்றாட வாழ்க்கையையே முடக்கும் வலியை முறையாகப் பரிசோதித்துச் சரிசெய்ய வேண்டியது கட்டாயம். வயது என்பது வெறும் எண்தான்; நாமாகவே வழக்கம் போல் உற்சாகமாக இயங்குவதுதான் சுதந்திரம்!
நாம் நடக்கவும், பணியாற்றவும், புதிய இடங்களுக்குப் பயணிக்கவும், உடற்பயிற்சி செய்யவும், குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக நேரம் செலவிடவும், தற்சார்புடன் தலைநிமிர்ந்து வாழவும்
உதவுவது நம் மூட்டுகள்தான்.மூட்டுகளைப் பராமரிப்பது என்பது முதுமையைத் தடுத்து நிறுத்துவதற்காக அல்ல; வயது கூடிக்கொண்டே போனாலும் வாழ்நாளின் ஒவ்வொரு தருணத்தையும் முழுமையாகவும் கம்பீரமாகவும் வாழ்வதற்காகத்தான்!
மூட்டுவலி பொதுவான ஒன்றாக இருக்கலாம்; ஆனால், தேவையில்லாத வலியோடுதான் வாழ வேண்டும் என்ற கட்டாயம் யாருக்கும் இல்லை. சரியான நேரத்தில் மருத்துவ ஆலோசனை, தகுந்த சிகிச்சை மற்றும் ஆரோக்கியமான வாழ்வியல் பழக்கவழக்கங்கள் மூலம் எவராலும் தொடர்ந்து சுறுசுறுப்பாகவும் தற்சார்புடனும் வாழ முடியும்.
தொகுப்பு: முதியோர் நல மருத்துவர் எஸ்.லாவண்யா


