நன்றி குங்குமம் டாக்டர்
எத்தகைய பராமரிப்பு அவசியம்?
ஒரு அறுவைசிகிச்சை முடிந்துவிட்டால், அதோடு சிகிச்சை செயல்முறைகள் முடிவுக்கு வந்துவிட்டன என்பதே பொதுவான கண்ணோட்டம். ஆனால், கர்ப்பப்பை நீக்க அறுவைசிகிச்சையை பொறுத்தவரை அதன் பின்னரும் பெண்களின் உடலில் பல மாற்றங்கள் நிகழும். 40-50 வயதுக்குட்பட்ட பெண்களுக்கு நார்த்திசுக்கட்டிகள், கருப்பை அழற்சி, உதிரப்போக்கு, புற்றுநோய் போன்ற பிரச்னைகளால் கர்ப்பப்பையை அகற்றும் சிகிச்சை பரவலாக இப்போது நடைபெறுகிறது.
இந்த அறுவைசிகிச்சை, பிரச்னைகளுக்கு தீர்வாக அமைந்தாலும், குணமடைவது நோயாளியின் வயது, உடல்நிலைமை மற்றும் அறுவைசிகிச்சையின் வகையைப் பொறுத்து மாறுபடும் என்கிறார் மகப்பேறியல் மற்றும் மகளிர் நோயியல் நிபுணர் திவ்யா ஷரோனா.
ஆரம்பகட்ட மாற்றங்கள் மற்றும் ஓய்வு
அறுவைசிகிச்சை முடிந்த முதல் சில வாரங்களில், அடிவயிறு அல்லது இடுப்புப் பகுதியில் லேசான வலி, வயிறு உப்புசம், உடல் சோர்வு, பிறப்புறுப்பில் லேசான ரத்தப்போக்கு போன்ற அறிகுறிகள் இருக்கலாம். வெளியே உள்ள தழும்புகள் ஆறியது போல் தோன்றினாலும், உள்ளே இருக்கும் காயங்கள் குணமடையச் சிறிது காலம் பிடிக்கும். எனவே, வேகமாக நடப்பது, அதிக எடை தூக்குவது, கடுமையான உடற்பயிற்சிகள், மற்றும் தாம்பத்திய உறவு ஆகியவற்றை முழுமையாக குணமடைந்துவிட்டீர்கள் என்று மருத்துவர் அறிவுறுத்தும் வரை தவிர்க்க வேண்டும்.
நல்ல ஓய்வு, சரியான நேரத்தில் புரதம் நிறைந்த உணவுகளை உண்பது, போதிய அளவு தண்ணீர் குடிப்பது ஆகியவை விரைவாகக் குணமடைய உதவும். இந்த அறுவை சிகிச்சையின் போது சிறிது ரத்த இழப்பு ஏற்படும் என்பதால், பெண்கள் தங்களது இரும்புச்சத்து அளவை பரிசோதித்துக் கொள்வது மிகவும் நல்லது.
சினைப்பைகளை அகற்றுவதால் ஏற்படும் விளைவுகள்
கருப்பையுடன் சினைப்பைகளையும் அகற்றுவது குணமடையும் காலத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். சினைப்பைகள் அகற்றப்படாவிட்டால், அவை ஹார்மோன்களை தொடர்ந்து உற்பத்தி செய்யும் என்பதால் உடனடியாக மெனோபாஸ் வராது. இருப்பினும், சில நேரங்களில் இது முன்கூட்டியே (மாதவிடாய் நிற்றல்) மெனோபாஸ் வரக் காரணமாகலாம். குறிப்பாக 40-50 வயதுடைய பெண்களுக்கு, திடீரென உடல் சூடாவது, இரவில் வியர்ப்பது, தூக்கமின்மை, மனநிலை மாற்றங்கள் போன்ற அறிகுறிகள் ஏற்படலாம்.
கர்ப்பப்பையோடு சினைப்பைகளும் அகற்றப்படும்போது ‘சர்ஜிக்கல் மெனோபாஸ்’ ஏற்படுகிறது. இதனால் மிகக் குறுகிய காலத்திலேயே பிறப்புறுப்பு வறட்சி மற்றும் தாம்பத்தியத்தில் ஈடுபாடு குறைதல் போன்ற அறிகுறிகள் தோன்றக்கூடும். இளவயதுப் பெண்களுக்கு இந்த நிகழ்வுகளை ஏற்றுக்கொள்வதும் சமாளிப்பதும் மிகவும் கடினமாக இருக்கும். எனவே, பெண்கள் தங்களுக்கு ஹார்மோன் மாற்று சிகிச்சை தேவையா என்பது குறித்தும், எலும்பு, இதயநாள ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் வழிகள் குறித்தும் மருத்துவரிடம் ஆலோசிப்பது அவசியம்.
தாம்பத்திய உறவு மற்றும் இடுப்புப் பகுதி ஆரோக்கியம்
ஹார்மோன்களின் அளவு குறைவதால், அறுவைசிகிச்சைக்குப் பிறகு பிறப்புறுப்பில் வறட்சி மற்றும் தாம்பத்திய உறவின்போது வலி ஏற்படலாம். எனினும், இவை தீர்க்க முடியாத பிரச்சனைகள் என பெண்கள் கவலைப்படத் தேவையில்லை. லூப்ரிகண்டுகள், மாய்ஸ்சரைசர்கள் அல்லது மருத்துவர் பரிந்துரைக்கும் மருத்துவ சிகிச்சைகள் மூலம் இதனை சுலபமாக சரிசெய்ய முடியும். முழுமையாகக் குணமடைந்து, சௌகரியமாக உணரும்போது பெண்கள் தங்களது தாம்பத்திய வாழ்க்கையைத் தொடங்கலாம்.
மேலும், குடல், சிறுநீரகச் செயல்பாடுகளில் சில மாற்றங்களை பெண்கள் உணரலாம். இடுப்புப் பகுதியில் பாரமாகவோ, அழுத்தம் இருப்பது போலவோ தோன்றலாம். இந்த அறிகுறிகள் இருந்தால், அது வேறு ஏதேனும் சிக்கலின் வெளிப்பாடாக இருக்கலாம் என்பதால் உடனடியாக மருத்துவரிடம் பரிசோதித்துக் கொள்ள வேண்டும். மருத்துவரின் ஆலோசனையோடு உடற்பயிற்சி செய்வது, மலச்சிக்கலைத் தவிர்ப்பது, உடல் எடையைப் பராமரிப்பது, இடுப்புத் தசைகளுக்கான பயிற்சிகளைச் செய்வது இடுப்புப் பகுதியின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க உதவும்.
அவசர மருத்துவ உதவி தேவைப்படும் அறிகுறிகள்
பிறப்புறுப்பில் அதிக ரத்தப்போக்கு, காய்ச்சல், துர்நாற்றத்துடன் கூடிய வெள்ளைப்படுதல், அடிவயிறு அல்லது இடுப்பில் வலி, சிறுநீர் கழிப்பதில் சிரமம், வாந்தி, மூச்சுத் திணறல், மற்றும் காலில் வலி, வீக்கம் போன்ற அறிகுறிகள் இருந்தால் சிறிதும் தாமதிக்காமல் மருத்துவரை அணுக வேண்டும்.
விரைவாகக் குணமடைவதை சாத்தியமாக்கும் சில எளிய பரிந்துரைகள்
ஆரம்ப காலத்தில்: மெதுவாக உங்கள் அன்றாட வேலைகளைச் செய்யத் தொடங்குங்கள். மருத்துவர் அனுமதிக்கும் வரை அதிக எடை கொண்ட பொருட்களைத் தூக்க வேண்டாம். சினைப்பைகள் அகற்றப்பட்டிருந்தால் மெனோபாஸ் அறிகுறிகள் மற்றும் ஹார்மோன் மாற்று சிகிச்சை குறித்து மருத்துவரிடம் ஆலோசியுங்கள்.
பிறப்புறுப்பு அசௌகரியங்களுக்கு வறட்சி மற்றும் வலியுடன் கூடிய உடலுறவு போன்ற பிரச்சனைகளை சிரமத்துடன் சகித்துக் கொள்ளத் தேவையில்லை; அதற்கான தகுந்த மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள்.
இடுப்புப்பகுதி ஆரோக்கியத்திற்கு: மலச்சிக்கலைத் தவிர்க்கவும், சரியான உடல் எடையைப் பராமரிக்கவும். மருத்துவர் பரிந்துரைத்தால் இடுப்புத் தசைப் பயிற்சிகளைச் செய்யவும்.
நீண்ட கால ஆரோக்கியத்திற்கு: முறையான மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொள்வதோடு, எலும்பு மற்றும் இதயத்தின் ஆரோக்கியத்தையும் தொடர்ந்து கண்காணியுங்கள்.
கர்ப்பப்பை நீக்கம் என்பது மாதவிடாய் சுழற்சியையும், கருத்தரிக்கும் திறனையும் முடிவுக்கு கொண்டு வரும் என்பது, உண்மையே; ஆனால், பெண்களின் உடல்நலப் பராமரிப்பு இதோடு முடிந்துவிடுவதில்லை. எந்தெந்த உறுப்புகள் அகற்றப்பட்டுள்ளன, அவற்றால் உடலில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும், மற்றும் எந்தெந்த அறிகுறிகளைக் கவனமாக கண்காணிக்க வேண்டும் என்ற விழிப்புணர்வு இருந்தால், சிகிச்சைக்குப் பிந்தைய இந்த சவாலான காலகட்டத்தை வெற்றிகரமாக சமாளித்து மகிழ்ச்சியுடன் வாழ்வது நிச்சயம் சாத்தியமே.
தொகுப்பு: - ஸ்ரீ தேவி குமரேசன்


