Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மரபணுவில் நோய்களைக் கண்டறியும் பரிசோதனை!

நன்றி குங்குமம் டாக்டர்

தலைமை கதிரியக்க நிபுணர் ஆர்த்தி கோவிந்தராஜன்

மருத்துவ உலகில் இன்று புரட்சிகரமான மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. ஆச்சர்யப்பட வைக்கும் கண்டுபிடிப்புகள், துல்லியமான பரிசோதனைகள், நவீன கருவிகள் என சில வருடங்களுக்கு முன்பு நாம் நினைத்துப் பார்க்க முடியாதவை எல்லாம் இப்போது சாத்தியமாகி வருகின்றன.

அந்த வகையில் மரபணு மூலக்கூறு அடிப்படையில் நோயைக் கண்டறியும் பரிசோதனை [Molecular Diagnostics], நாம் இதுவரை பார்த்திராத பலன்களை அளிக்கும் ஒன்றாக முக்கியத்துவம் பெற்றிருக்கிறது. மரபணு மூலக்கூறு பரிசோதனை இனி நம்முடைய உடல்நலத்தைப் பராமரிப்பதில் தவிர்க்க முடியாத ஒன்றாக உருவெடுக்கும். ஏன்? எப்படி? என்பதை இக்கட்டுரையில் நாம் பார்க்கலாம்.

மாதிரியிலிருந்து நோய் கண்டறிதல் வரை: நோய் அறிகுறிகளைத் திறம்பட ஆராய உதவும் நவீன பரிசோதனை மரபணு மூலக்கூறு நோயறியும் பரிசோதனை.மரபணு மூலக்கூறு பரிசோதனை (Molecular diagnostics), நோயாளியின் மாதிரியை ஒரு விரிவான சுகாதார தகவலறிக்கையாக மாற்றுகிறது. அறிகுறிகளை ஆராய்வதற்குப் பதிலாக நோய்கள் பற்றிய தடயங்களை கண்டறிய, மருத்துவர்கள் மரபணு (டிஎன்ஏ, ஆர்என்ஏ) அல்லது புரதங்களை பகுப்பாய்வு செய்கிறார்கள். எடுத்துக்காட்டாக, பிசிஆர் [PCR] ஒரு ஸ்வாப்-பில் இருந்து வைரஸ் மரபணு துகள்களைப் பெருக்குகிறது. எனவே அதன் மூலம் அறிகுறிகள் தோன்றுவதற்கு முன்பே கோவிட்-19-ஐக் கண்டறிய முடியும்.

ஒரு நபரின் அனைத்து மரபணுக்களையும் வரிசைப்படுத்தி (NGS), பின்னர் புற்றுநோய் பிறழ்வு அல்லது ஒரு பரம்பரை நோயை அடையாளம் காண முடியும். மனித மரபணு வரிசைப்படுத்தப்பட்டுள்ளதால், இந்தத் துறை துரிதமாக வளர்ச்சி கண்டுவரும் துறையாக இருந்து வருகிறது. இது மிக விரைவான நோய் கண்டறிதலுக்கு வழி வகுக்கிறது. பலவிதமான மரபணு நிலைகளில் பிறந்த குழந்தைகளைக் கூட ஒரே நேரத்தில் பரிசோதிக்கும் வகையிலான சோதனைகள் உள்ளன.

அவை கண்ணுக்குத் தெரியாத நோய் அபாயங்களை அடையாளம் கண்டறியும்.இன்றைய நவீன மருத்துவத்தில் இருக்கும் துல்லியம், தேவையில்லாத யூகங்களைத் தகர்த்தெறியும் சிகிச்சைகள் எல்லோருக்கும் ஒரே மாதிரி பொருந்தக்கூடியதாக இருப்பது இல்லை. மரபணு மூலக்கூறு சோதனைகள் ஒரு நோய்க்கான காரணத்தை அடையாளம் காண உதவுகின்றன. இதனால் சிகிச்சையை ஒவ்வொரு நோயாளிக்கும் ஏற்றவாறு தேவையான சிகிசைகளுடன் தனித்துவமிக்கதாக மேற்கொள்ளலாம்.

புற்றுநோய் சிகிச்சையில் மரபணு விவரம் பயன்படுத்தப்படுகிறது. இது கட்டியில் உள்ள தனித்துவமான பிறழ்வுகளை அடையாளம் காணவும் மருந்தைத் தேர்ந்தெடுப்பதற்கு வழிகாட்டவும் பயன்படுகிறது. தேசிய புற்றுநோய் நிறுவனத்தின் தகவல்படி, புற்றுநோய் பற்றிய மரபணு தகவல், புற்றுநோய் சார்ந்த மேம்பட்ட நோயறிதல் மற்றும் சிகிச்சை உத்திகளுக்கு உதவுகிறது. இவை புற்றுநோய் செல்களைத் துல்லியமாகத் தாக்கும் குறிப்பிட்ட சிகிச்சைகளை வழங்க வகை செய்கிறது.

இந்த சிகிச்சைகள் பெரும்பாலும் பழைய முறையான கீமோதெரபி சிகிச்சை முறையை விட மிகக் குறைவான நச்சுத்தன்மை கொண்டவை. தொற்று பாதிப்புகளுக்கும் அதே துல்லியமான மரபணு மூலக்கூறு பரிசோதனை பயன்படுத்தப்படுகிறது. சில மணிநேரங்களில் காசநோய் அல்லது இன்ஃப்ளூயன்ஸா அல்லது பிற நோய்க்கிருமிகளை துரித மரபணு மூலக்கூறு சோதனை [rapid molecular test] மூலம் கண்டறிய முடியும். நுண்ணுயிரிகளையும் அதன் மருந்து-எதிர்ப்பு மரபணுக்களையும் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுவதால் தேவையற்ற மருந்துகள் கொடுக்கப்படுவது தவிர்க்கப்பட்டு, அதன் விளைவுகளில் இருந்து நோயாளிகள் காப்பாற்றப்படுகின்றனர். இதன் விளைவாக நோயாளிகள் விரைவில் குணமடைகிறார்கள்.

புதிய எல்லைகள்: ரத்தத்தை ஸ்கேன் செய்யும் நவீன முறை மற்றும் தோல் பகுதியை கீறல் இல்லாமல், சேதப்படுத்தாமல் சிகிச்சை அளிக்கும் மேம்பட்ட மருத்துவம்.புதுமை என்பது இப்போது குறைவான ஊடுருவும் சிகிச்சை முறைகளைக் குறிக்கிறது. திரவ நிலையில் மேற்கொள்ளும் லிக்விட் பயாப்ஸி என்பது மருத்துவத்தில் ஒரு திருப்புமுனையாக உள்ளது. ஒரு எளிய ரத்தப் பரிசோதனை, கட்டியால் ஏற்பட்ட மரபணுவை (டிஎன்ஏ) வெளிப்படுத்தும்.

இந்த திரவ பயாப்ஸி, திசு பயாப்ஸிக்கு மாற்றாக அமைந்து, அறுவைசிகிச்சை இல்லாமல் நிகழ்நேரத்தில் புற்றுநோயை துல்லியமாக கண்காணிக்க அனுமதிக்கிறது. அதிநவீன கருவிகளும் இப்போது பயன்பாட்டுக்கு வந்துள்ளன. சிஆர்ஐஎஸ்பிஆர் (CRISPR) அடிப்படையிலான சோதனைகள், எப்படி செயல்பட வேண்டும், என்னென்ன தகவல்களைச் சேகரிக்க வேண்டும் என்று கோடிங் செய்த ஒரு கம்ப்யூட்டர் ப்ரோக்ராமை போல செயல்படுகின்றன.

ஒரு குறிப்பிட்ட மரபணு வரிசையைக் கண்டறியும்போது, ஆம் அல்லது இல்லை என்பதை மிக ​​விரைவாகவும் துல்லியமாகவும் தெரிவிக்கின்றன. நிரல்படுத்தக்கூடிய டிஎன்ஏ, ஸ்னிப்பர்களைப் போல செயல்படுகின்றன. பயன்பாட்டுக்கு எளிதாக இருக்கும் வகையில் வடிவத்தை சிறியதாக்கி உருவாக்கப்பட்டிருக்கும் பிசிஆர் இயந்திரங்கள் மற்றும் கார்ட்ரிட்ஜ் அடிப்படையிலான சாதனங்கள், மருத்துவமனைகள் மற்றும் நடமாடும் சுகாதார மையங்களுக்குக் கூட ஆய்வக அளவிலான சோதனை வசதிகளை வழங்குகின்றன.

செயற்கை நுண்ணறிவால் இயக்கப்படும் மென்பொருள், மரபணுத் தரவை உடனடியாக பகுப்பாய்வு செய்து, ஏதேனும் பிறழ்வுககள் இருந்தால் அவற்றை சுட்டிக்காட்டுகிறது. இந்த முன்னேற்றங்கள் சக்திவாய்ந்த மரபணு மூலக்கூறு சோதனைகளை பெரிய ஆய்வகங்களில் மட்டுமே மேற்கொள்ளமுடியும் என்ற நிலையை மாற்றியிருக்கிறது. இன்று உள்ளூர் மருத்துவர்களும் இந்த பரிசோதனைகளை எளிதில் மேற்கொள்ள மருத்துவ முன்னேற்றங்கள் கைக்கொடுத்திருக்கின்றன என்பது மகிழ்ச்சியான விஷயம்.

இந்தியாவில் நிகழ்ந்து வரும் புரட்சிகரமான மாற்றம்: மரபணு மூலக்கூறு பரிசோதனைகளுக்கான கருவிகள் இனி எளிதில் கிடைக்கும் வாய்ப்புகள் உருவாகியுள்ளன. இந்தியா இந்த புதிய கண்டுபிடிப்புகளை ஏற்றுக்கொண்டிருப்பதோடு, கோவிட்-19 பெருந்தொற்றின் போது அவற்றை இங்கு நம்முடைய பயன்பாட்டுகளுக்காக மிக வேகமாக அறிமுகப்படுத்தியது. சில மாதங்களிலேயே நாடு முழுவதும் பிசிஆர்/என்ஏஏடி (PCR/NAAT) ஆய்வகங்களின் எண்ணிக்கை வெறும் 14-லிருந்து 1,500 க்கும் அதிகமாக உயர்ந்ததாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இந்த உள்கட்டமைப்பு இப்போது தொற்றுநோய்களைத் தாண்டி பல நோய்களைக் கண்டறிந்து, சிகிச்சை அளிக்க வகை செய்து வருகிறது.

கிராமப்புற மருத்துவமனைகள் கூட மரபணு மூலக்கூறு சோதனைகளைப் பயன்படுத்துகின்றன. மால்பியோஸ் ட்ரூனாட் (Molbio’s Truenat) என்பது இந்தியாவில் உருவாக்கப்பட்ட ஒரு சிறிய பிசிஆர் தளமாகும். இதன் மூலம் காசநோய், கோவிட்-19 மற்றும் பிற தொற்றுகளை உடனடியாக கண்டறிய முடியும். இதற்கான பயிற்சித் திட்டங்களுக்கு அரசு மற்றும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களால் நிதியளிக்கப்படுகின்றன. அதன் மூலம் சிறிய நகரங்களுக்கும் இது தொடர்பான கருவிகள் வழங்கப்படுகின்றன.

வைரஸ் ஆராய்ச்சி மற்றும் நோயறிதல் ஆய்வக (VRDL) கட்டமைப்பு போன்ற திட்டங்கள் நாடு முழுவதும் பிசிஆர் சோதனைகளை எல்லோரும் பெறுவதற்கான வாய்ப்புகளை அதிகரித்து வருகின்றன. இதன் விளைவாக, ஒரு காலத்தில் பெரிய நகரங்களில் உள்ள பெரிய ஆய்வகங்களில் மட்டுமே மேற்கொள்ளப்பட்ட சோதனைகள் இப்போது தொலைதூர மாவட்டங்களிலும் செய்யப்படுகின்றன.

ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது, ​​மரபணு மூலக்கூறு அடிப்படையிலான நோயறியும் முறை இந்தியாவின் சுகாதாரப் பராமரிப்பை மேம்படுத்தும். மரபணு மற்றும் மூலக்கூறு பரிசோதனைகள் நோய் ஏற்படுவதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பே பிரச்னைகளைக் கண்டறிந்து, உண்மையான நோய்த் தடுப்பை செயல்படுத்துகின்றன. புற்றுநோய் அபாயங்கள் அல்லது பரம்பரை பாதிப்புகளை அடையாளம் காண விரைவான மரபணு ஸ்கேன் உள்ளிட்ட வருடாந்திர சோதனைகளை செய்து கொள்ளலாம்.

இது ஆரம்பகால சிகிச்சை மற்றும் மிகவும் தனிப்பயனாக்கப்பட்ட சிகிச்சைகளை திட்டமிட உதவும். மிக வேகமாக விரிவடைந்து வரும் ஆய்வக கட்டமைப்புகள் மற்றும் நவீன சோதனைகள் எல்லா இடங்களிலும் கிடைக்கூடியதாக இருப்பதால், இதன் எதிர்காலம் சிறப்பாக இருக்கும். நோய் கண்டறியப்பட்ட பிறகு எதிர்வினை சிகிச்சை என்ற நிலையிலிருந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நோயறிதலை மாற்ற வேண்டியது அவசியம்.

இதன் மூலம், மரபணு மூலக்கூறு நோய் கண்டறிதல் பரிசோதனை முறைகள் இந்தியாவில் நோய்த் தடுப்பு சுகாதாரப் பராமரிப்பை பலப்படுத்தும். பிரச்னைகள் பெரியதாக அதிகரிப்பதற்கு முன்பே இது நோயாளிகளுக்கு அவர்களின் உடல்நலம் குறித்த நுண்ணறிவை வழங்குகிறது. மிக முக்கியமாக, நம்மிடையே இருக்கும் நிச்சயமற்ற தன்மையையும் பயத்தையும் நீக்கி ஆரோக்கியமான, உறுதித் தன்மை கொண்ட தேசத்திற்கு இது அடித்தளம் அமைக்கும்.