Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

உயிரைக் காப்பாற்றும் எளிய கரைசல்!

நன்றி குங்குமம் டாக்டர்

இன்று ஒவ்வொரு வீட்டிலும் முதலுதவி பெட்டியில் இருக்க வேண்டிய மிக முக்கியமான பொருட்களில் ஒன்று ORS (Oral Rehydration Solution). வயிற்றுப்போக்கால் ஏற்படும் நீரிழப்பைத் தடுத்து, குழந்தைகளின் உயிரைக் காப்பாற்றும் எளிய மற்றும் பயனுள்ள மருத்துவக் கண்டுபிடிப்பாக இது உலகம் முழுவதும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது என்கிறார் குழந்தைகள் நல மருத்துவர் அபர்ணா கி, இது குறித்து அவர் மேலும் நம்முடன் பகிர்ந்து கொண்டவை

50 ஆண்டுகளுக்கு முன்பு, இந்திய குழந்தைகள் நல மருத்துவரான டாக்டர் திலீப் மகாலனாபிஸ், 1971-ஆம் ஆண்டு வங்கதேச அகதிகள் நெருக்கடியின் போது, உப்பு, குளுக்கோஸ் மற்றும் சுத்தமான தண்ணீர் கலந்து தயாரிக்கப்படும் ORS கரைசல் மூலம் ஆயிரக்கணக்கான குழந்தைகளின் உயிரைக் காப்பாற்ற முடியும் என்பதை நிரூபித்தார். அவரது இந்தப் பங்களிப்பு, 20-ஆம் நூற்றாண்டின் மிக முக்கியமான மருத்துவச் சாதனைகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இன்றும் உலகம் முழுவதும் கோடிக்கணக்கான குழந்தைகளின் உயிரைக் காப்பாற்றுவதில் ORS முக்கிய பங்கு வகிக்கிறது.

ஆனால், இவ்வளவு பயனுள்ள ORS குறித்து இன்னும் பல பெற்றோரிடம் ஒரு தவறான புரிதல் உள்ளது. குழந்தைக்கு நீரிழப்பு ஏற்பட்ட பிறகுதான் ORS கொடுக்க வேண்டும் என்று பலர் நினைக்கிறார்கள். உண்மையில், வயிற்றுப்போக்கு அல்லது வாந்தி ஆரம்பித்த உடனேயே ORS கொடுக்கத் தொடங்க வேண்டும். அதுவே நீரிழப்பைத் தடுக்கவும், மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டிய நிலையைத் தவிர்க்கவும் உதவும்.

குழந்தைகளுக்கு ஏன் நீரிழப்பு விரைவாக ஏற்படுகிறது?

உடலில் இருந்து வெளியேறும் நீரின் அளவு, உடலுக்குள் செல்லும் நீரின் அளவை விட அதிகமாகும் போது நீரிழப்பு ஏற்படுகிறது. குழந்தைகளுக்கு இது பெரும்பாலும் வயிற்றுப்போக்கு, அடிக்கடி வாந்தி, அதிக காய்ச்சல் அல்லது சோர்வு காரணமாக போதுமான அளவு திரவ உணவுகளை எடுத்துக்

கொள்ளாததால் ஏற்படுகிறது.

குறிப்பாக, கைக்குழந்தைகள் மற்றும் சிறிய குழந்தைகளுக்கு நீரிழப்பு மிக வேகமாக ஏற்படும். காரணம், அவர்களின் உடலில் நீர்ச்சத்தின் அளவு அதிகமாக இருப்பதுடன், உடலில் இருந்து இழக்கும் நீர் மற்றும் உப்புச் சத்துகளை அவர்களால் தாங்களாகவே ஈடுசெய்ய முடியாது. ஒரு சில மணி நேர வயிற்றுப்போக்கே கூட, கவனிக்காமல் விட்டால் ஆபத்தான நீரிழப்பை ஏற்படுத்தலாம்.

நீரிழப்பு வருவதற்கு முன்பே ORS கொடுங்கள்

உலக சுகாதார நிறுவனம் (WHO) பரிந்துரைக்கும் ORS-ஐ, குழந்தைக்கு வயிற்றுப்போக்கு அல்லது வாந்தி ஆரம்பித்தவுடனேயே கொடுக்க வேண்டும். நீரிழப்பு ஏற்பட்ட பிறகு காத்திருக்க வேண்டிய அவசியமில்லை.

ஆரம்பத்திலேயே ORS கொடுப்பதன் மூலம் உடலில் இழக்கும் நீரும், உப்புச் சத்துகளும் ஈடுசெய்யப்படுகின்றன. இதனால் நீரிழப்பு, சிக்கல்கள் மற்றும் மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டிய நிலை போன்றவற்றை பெருமளவில் தவிர்க்க முடியும்.

ORS எப்படி செயல்படுகிறது?

வயிற்றுப்போக்கு ஏற்படும்போது குடலில் உள்ள கிருமிகள், குடலின் இயல்பான செயல்பாட்டை பாதிக்கின்றன. இதனால் உடலிலிருந்து தண்ணீர், சோடியம், குளோரைடு போன்ற முக்கிய உப்புச் சத்துகள் அதிக அளவில் வெளியேறுகின்றன.

இந்த இழப்பை ஈடுசெய்யும் வகையில் ORS தயாரிக்கப்படுகிறது. இதில் சரியான அளவில் சோடியம் குளோரைடு, குளுக்கோஸ், பொட்டாசியம் குளோரைடு மற்றும் டிரைசோடியம் சிட்ரேட் ஆகியவை கலந்துள்ளன. இந்தச் சரியான விகிதமே குடலில் நீர் விரைவாக உறிஞ்சப்பட உதவுகிறது.

பல ஆய்வுகள், WHO பரிந்துரைக்கும் குறைந்த ஒஸ்மோலாரிட்டி (Low Osmolarity) ORS பயன்படுத்தும்போது வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தி குறைவதோடு, நரம்பு வழியாக திரவம் (IV Fluids) செலுத்த வேண்டிய அவசியமும், மருத்துவமனையில் சேர்க்கப்படும் நிலையும் குறிப்பிடத்தக்க அளவில் குறைகிறது என்பதை உறுதிப்படுத்தியுள்ளன.

உயிர்களைக் காப்பாற்றும் எளிய கரைசல்

வயிற்றுப்போக்கு என்பது குழந்தைகளுக்கு அடிக்கடி ஏற்படும் உடல்நலப் பிரச்னைகளில் ஒன்றாக இருந்தாலும், அதனால் ஏற்படும் மிகப்பெரிய ஆபத்தான விளைவான நீரிழப்பை சரியான நேரத்தில் தடுப்பது சாத்தியமே.

வயிற்றுப்போக்கு தொடங்கிய உடனேயே அறிகுறிகளை உணர்ந்து, ORS கரைசலை உடனடியாக கொடுப்பது, குழந்தைக்கு வழக்கமான உணவைத் தொடர்ந்து அளிப்பது, ஆபத்தான அறிகுறிகள் தென்பட்டால் தாமதிக்காமல் மருத்துவரை அணுகுவது போன்ற எளிய நடவடிக்கைகளே ஒரு குழந்தையின் உயிரைக் காப்பாற்ற முடியும். சில நேரங்களில், மிகச் சிறந்த மருந்து என்பது மிகவும் எளிமையானதுதான். ORS அதற்கு மிகச் சிறந்த உதாரணம்.

தொகுப்பு: குழந்தைகள் நல மருத்துவர் அபர்ணா