Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

சிறுநீரக ஆரோக்கியத்தின் பொன்னான 8 விதிகள்!

நன்றி குங்குமம் டாக்டர்

சிறுநீரகம்: கழிவுத் தொழிற்சாலை

கடந்த அத்தியாயங்களில் சிறுநீரகப் பாதை தொற்று (UTI), சர்க்கரை நோயினால் ஏற்படும் சிறுநீரகப் பாதிப்பு (Diabetic Nephropathy), உயர் ரத்த அழுத்தமும் சிறுநீரகமும், வடிகட்டி வீக்கம் (Glomerulonephritis), பரம்பரை காரணமாக வரும் மரபுவழி நீர்க்கட்டிகள் (Polycystic Kidney Disease), சிறுநீரகச் செயலிழப்பின் (CKD) வெவ்வேறு நிலைகள் மற்றும் அதற்கான தீர்வுகள், டயாலிசிஸ் முறை மற்றும் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை எனப் பல அத்தியாவசியமான சிறுநீரக ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பு குறித்த தலைப்புகளைப் பற்றி மிகச் சுருக்கமாகப் பார்த்திருந்தோம். நோய்களைப் பற்றிய தேவையில்லாத அச்சத்தைப் போக்கி, சிறுநீரகம் தொடர்பான சரியான புரிதலையும் விழிப்புணர்வையும் உரிய காலத்தில் மருத்துவ அணுகுமுறையைப் பெறுவதன் அவசியத்தை உணர்த்துவதே அந்தப் பகுதிகளின் முக்கிய நோக்கமாக இருந்தது.

இந்த விழிப்புணர்வுத் தொடரின் நிறைவுப் பகுதியான இந்த இதழில், நாம் அனைவரும் நமது அன்றாட வாழ்க்கையில் மிக எளிதாகப் பின்பற்றக்கூடியதும், வாழ்நாள் முழுமைக்கும் சிறுநீரக ஆரோக்கியத்தை பாதுகாப்பதுமான பொன்னான எட்டு விதிகளைப் (Golden Rules) பற்றி விரிவாகவும் தெளிவாகவும் தெரிந்து கொள்வோம்.

முதலாவது மற்றும் முதன்மையான விதி, உடலுக்குப் போதுமான அளவு நன்னீர் அருந்துவது. நீர் என்பது நமது உடலின் ஜீவநாடி. நாம் குடிக்கும் தண்ணீர்தான் சிறுநீரகத்திற்குள் சென்று ரத்தத்தில் உள்ள யூரியா, யூரிக் அமிலம், கிரியேட்டினின் போன்ற கழிவுகளையும் அதிகப்படியான நச்சுகளையும் கரைத்து, சிறுநீராக வெளியேற்ற உதவுகிறது.

ஒரு ஆரோக்கியமான மனிதன் நாள்தோறும் சராசரியாக இரண்டரை முதல் மூன்று லிட்டர் வரை நீர் பருக வேண்டும். கோடைகாலங்கள், அதிக உடலுழைப்பு உள்ள நேரங்களில் இதன் அளவு இன்னும் சற்றே அதிகரிக்கலாம். போதுமான அளவு தண்ணீர் குடிக்கும்போது சிறுநீரகத்தில் கற்கள் உருவாகும் அபாயம் பெருமளவு குறைகிறது. மேலும் சிறுநீரகப் பாதையில் பாக்டீரியாக்கள் தங்கித் தொற்றுகளை ஏற்படுத்துவதும் தவிர்க்கப்படுகிறது.

காலையில் எழுந்தவுடன் நீர் அருந்துவது தொடங்கி, நாள் முழுவதும் சீரான இடைவெளியில் தண்ணீர் குடிப்பதை ஒரு தினசரிப் பழக்கமாகவே நாம் மாற்றிக்கொள்ள வேண்டும். அதே சமயம், ஏற்கனவே சிறுநீரக நோய் முற்றிய நிலையில் உள்ளவர்கள் தங்கள் மருத்துவர் பரிந்துரைத்த குறிப்பிட்ட அளவிலான தண்ணீரை மட்டுமே குடிக்க வேண்டும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இரண்டாவது விதி, உணவில் உப்பின் அளவைக் குறைத்து ஆரோக்கியமான உணவு முறையைக் கையாள்வது. நமது சமையலில் நாம் பயன்படுத்தும் சாதாரண உப்பில் சோடியம் நிறைந்துள்ளது. அளவுக்கு அதிகமான சோடியம் உடலுக்குள் செல்லும்போது, அது ரத்தக் குழாய்களில் அழுத்தத்தை அதிகரித்து உயர் ரத்த அழுத்தத்தை உருவாக்குகிறது. இந்த உயர் ரத்த அழுத்தம் சிறுநீரகத்தின் நுட்பமான வடிகட்டிகளை நேரடியாகப் பாதித்து, அவற்றின் திறனைக் குறைத்துவிடும். எனவே, நாளொன்றுக்கு ஐந்து கிராமிற்கும் குறைவான உப்பையே பயன்படுத்த வேண்டும்.

ஊறுகாய், கருவாடு, பதப்படுத்தப்பட்ட பாக்கெட் உணவுகள், சிப்ஸ், உடனடி உணவுகள் மற்றும் அடைக்கப்பட்ட நொறுக்குத் தீனிகளில் அதிக அளவு உப்பு மறைந்திருப்பதால் அவற்றை முற்றிலுமாகத் தவிர்க்க வேண்டும். உணவில் செயற்கை சுவையூட்டிகளுக்குப் பதிலாக இயற்கை மூலிகைகள், எலுமிச்சைசாறு போன்றவற்றைச் சேர்த்துச் சுவையை அதிகரிக்கலாம். மேலும் காய்கறிகள், பழங்கள், நார்ச்சத்து மிகுந்த தானியங்கள் ஆகியவற்றை நாள்தோறும் உணவில் சேர்த்துக்கொள்வது சிறுநீரகத்தின் இயக்கத்திற்குப் பெரும் துணையாக இருக்கும்.

மூன்றாவது விதி, ரத்த சர்க்கரையின் அளவையும் ரத்த அழுத்தத்தையும் எப்போதும் கட்டுக்கோப்பாக வைத்திருப்பது. உலகளவில் சிறுநீரகச் செயலிழப்பிற்கு முதன்மை உந்து சக்தியாக இருப்பது கட்டுப்பாடற்ற நீரிழிவு நோயும், உயர் ரத்த அழுத்தமும்தான். ரத்தத்தில் சர்க்கரையின் அளவு தொடர்ந்து அதிகமாக இருக்கும்போது, அது சிறுநீரகத்தில் உள்ள மில்லியன் கணக்கிலான நுண் ரத்த நாளங்களைச் சேதப்படுத்துகிறது.

அதேபோல, உயர் ரத்த அழுத்தமானது சிறுநீரக வடிகட்டிகளின் மீதான அழுத்தத்தை அதிகரித்து அவற்றைச் செயலிழக்கச் செய்கிறது. எனவே, நாற்பது வயதைக் கடந்த அனைவரும் அல்லது குடும்பத்தில் நீரிழிவு, ரத்த அழுத்தப் பின்னணி கொண்ட அனைவரும் தவறாமல் குறிப்பிட்ட இடைவெளிகளில் பரிசோதனைகள் செய்துகொள்ள வேண்டும். ஏற்கனவே இப்பாதிப்புகள் உள்ளவர்கள், மருத்துவர் அறிவுறுத்திய மாத்திரைகளைத் தவறாமல் உட்கொண்டு, உணவுப் பழக்கத்தையும் சீராக வைத்துக்கொண்டு, சர்க்கரையையும் ரத்த அழுத்தத்தையும் இயல்பு நிலையில் வைத்திருக்க வேண்டும்.

நான்காவது விதி, சுய மருத்துவத்தையும் தன்னிச்சையான வலி நிவாரணி மாத்திரைப் பயன்பாட்டையும் முற்றிலும் தவிர்ப்பது. இன்றைக்குப் பலரிடமும் காணப்படும் ஒரு தவறான பழக்கம், சிறிய தலைவலி, உடல் வலி, காய்ச்சல் அல்லது மூட்டுவலி வந்தாலும் உடனே மருத்துவரை அணுகாமல் மருந்துக்கடைகளுக்குச் சென்று தாங்களாகவே வலி நிவாரணி மாத்திரைகளை (Painkillers) வாங்கி உட்கொள்வதாகும்.

ஸ்டீராய்டு அல்லாத வீக்க எதிர்ப்பு மருந்துகள் (NSAIDs) எனப்படும் வலி நிவாரணிகளைத் தொடர்ந்து அல்லது அதிகளவில் எடுத்துக்கொள்ளும்போது, அவை சிறுநீரகத்திற்குச் செல்லும் ரத்த ஓட்டத்தை உடனடியாகக் குறைக்கின்றன. இது நாளடைவில் நிரந்தர சிறுநீரகச் செயலிழப்பிற்கு வழிவகுக்கும். எந்த ஒரு மருந்தையும், அது எளிய வலி நிவாரணியாக இருந்தாலும் சரி அல்லது பாரம்பரிய மருந்தாக இருந்தாலும் சரி, தகுதியான மருத்துவ ஆலோசனையின்றி உட்கொள்ளவே கூடாது.

ஐந்தாவது விதி, சுறுசுறுப்பான வாழ்க்கை முறையைப் பேணுதலும் உடல் எடையைச் சீராக வைத்திருத்தலும். நவீன டிஜிட்டல் யுகத்தில் நமது உடல் உழைப்பு பெருமளவு குறைந்துவிட்டது. ஒரே இடத்தில் மணி கணக்கில் அமர்ந்து பணியாற்றுவது சிறுநீரகப் பாதிப்பு உள்ளிட்ட பல நோய்களுக்கு வித்திடுகிறது. தினமும் குறைந்தது முப்பது நிமிடங்கள் மிதமான நடைபயிற்சி, ஓட்டம், நீச்சல் அல்லது எளிய உடற்பயிற்சிகளை மேற்கொள்வது உடலின் ரத்த ஓட்டத்தைச் சீராக்கும்.

உடற்பயிற்சி செய்வது ரத்த அழுத்தத்தைக் குறைப்பதோடு, இன்சுலின் உணர்திறனை அதிகரித்துச் சர்க்கரையையும் கட்டுப்பாட்டில் வைக்கிறது. மேலும், அதிக உடல் எடை சிறுநீரகத்தின் மீது கூடுதல் வேலைப் பளுவை ஏற்படுத்துகிறது. உயரத்திற்கு ஏற்ற உடல் எடையைப் (BMI) பராமரிப்பது சிறுநீரகத்தின் ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியமாகும்.

ஆறாவது விதி, புகைப்பிடித்தல் மற்றும் மது அருந்துதல் போன்ற பழக்கங்களை முற்றிலுமாக விட்டுவிடுவது. புகையிலையில் உள்ள நச்சுப் பொருட்கள் ரத்தக் குழாய்களைச் சுருங்கச் செய்து, சிறுநீரகத்திற்குச் செல்லும் ரத்தத்தின் அளவைக் கணிசமாகக் குறைக்கின்றன. இதனால் சிறுநீரகம் தனது வடிகட்டும் பணியைச் சரியாகச் செய்ய முடியாமல் திணறுகிறது. மேலும், புகைப்பிடிப்பவர்களுக்குச் சிறுநீரகப் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு மற்றவர்களை விட இரண்டு மடங்கு அதிகம். அதேபோல, அதிகப்படியான மது அருந்துதல் உடலின் நீர்ச் சமநிலையைக் குலைத்து, ரத்த அழுத்தத்தை உயர்த்தி சிறுநீரகத்தைச் சீரழிக்கும். எனவே இந்த நச்சுக் பழக்கங்களிலிருந்து விடுபடுவது சிறுநீரகத்திற்கு நாம் செய்யும் மிகப்பெரிய நன்மையாகும்.

ஏழாவது விதி, மன அழுத்தத்தைக் குறைத்து நல்ல உறக்கத்தைப் பெறுவது. இன்றைய வேகமான உலகில் மன அழுத்தம் என்பது தவிர்க்க முடியாத ஒன்றாக மாறியுள்ளது. ஆனால், நாள்பட்ட மன அழுத்தம் உடலில் சில ஹார்மோன் மாற்றங்களை ஏற்படுத்தி ரத்த அழுத்தத்தையும் சர்க்கரை அளவையும் உயர்த்துகிறது. இது மறைமுகமாகச் சிறுநீரகத்தைப் பாதிக்கிறது. தினமும் ஏழிலிருந்து எட்டு மணி நேரச் சீரான உறக்கம் உடலின் அனைத்து உறுப்புகளுக்கும் புத்துணர்ச்சி அளிக்கும். தியானம், யோகா, இசை கேட்டல் அல்லது பிடித்த பொழுதுபோக்குகளில் ஈடுபடுவதன் மூலம் மன அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்திருக்க முடியும்.

எட்டாவது விதி, வழக்கமான முன்பாகவே கண்டறியும் மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொள்ளுதல். சிறுநீரக நோய்களின் மிகப்பெரிய ஆபத்தே, அவை எண்பது சதவீதத்திற்கும் மேல் பாதிப்படையும் வரை பெரிய அளவிலான எந்த அறிகுறிகளையும் வெளியில் காட்டாது என்பதுதான். இதனால்தான் சிறுநீரக நோயை சைலன்ட் கில்லர் என்று அழைக்கிறார்கள். எனவே, நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், உடல் பருமன் அல்லது குடும்பத்தில் சிறுநீரக நோய் வரலாறு உள்ளவர்கள் ஆண்டுக்கு ஒருமுறை எளிய சிறுநீர் பரிசோதனை (Routine Urine Analysis) மற்றும் ரத்தத்தில் கிரியேட்டினின் (Serum Creatinine), உரியா அளவைப் பரிசோதிக்கும் சிறுநீரகச் செயல்பாட்டுப் பரிசோதனையை (RFT) செய்துகொள்ள வேண்டும். ஆரம்பத்திலேயே சிறுநீரகப் பாதிப்பைக் கண்டறிந்தால், எளிய மருந்துகள் மற்றும் வாழ்வியல் மாற்றங்கள் மூலமே நோயின் தீவிரத்தைத் தடுத்து முழுமையான ஆரோக்கியத்தைப் பெற முடியும்.

நன்றி.

அன்பான வாசகர்களே, ஒரு மருத்துவராக இந்தத் தொடரின் வாயிலாக நான் உங்களுக்கு வழங்க விரும்பும் மிக முக்கியமான செய்தி இதுதான். நமது உடல் இயற்கை நமக்கு அளித்த மிக அரிய கொடை. அதில் சிறுநீரகம் என்பது இரவும் பகலும் ஓய்வின்றி, நாம் தூங்கும்போது கூட நமக்காக உழைத்து உடலைத் தூய்மைப்படுத்தும் ஒரு அற்புதம். அந்த உறுப்பைப் பாதுகாப்பது என்பது ஏதோ சவாலான, செலவு பிடிக்கும் காரியமோ அல்லது எட்டாத இலக்கோ அல்ல.

நாம் தினமும் எடுக்கும் சிறிய நல்ல முடிவுகளும், உணவுக் கட்டுப்பாடும், நேர்மறையான வாழ்வியலுமே நமது சிறுநீரகத்தை வாழ்நாள் முழுவதும் பாதுகாப்பாக வைத்திருக்கும். அதனால், சிறுநீரக நோய்கள் குறித்த தேவையில்லாத பயமும் கவலையும் நமக்கு இனி தேவையில்லை. முறையான விழிப்புணர்வும், சரியான முன்னெச்சரிக்கையும், நேர்மறையான சிந்தனையும் இருந்தால் நாம் எந்தவொரு நோயையும் எளிதில் வெல்ல முடியும். நோய் வந்த பின் சிகிச்சை தேடுவதை விட, நோய் வராமல் தடுப்பதே புத்திசாலித்தனம்.

அடுத்த இதழில், புதிய தொடரில் சந்திப்போம்!

தொகுப்பு: பொதுநல மருத்துவர் சுதர்சன் சக்திவேல்