Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

முதுமையில் மறதி இயல்பானதா அல்லது நோயின் அறிகுறியா!

நன்றி குங்குமம் டாக்டர்

முதுமையில் சிறிதளவு மறதி ஏற்படுவது இயல்பான ஒன்றுதான். ஒருவரின் பெயரை நினைவுகூர அதிக நேரம் எடுத்துக்கொள்வது, அவ்வப்போது ஏதேனும் ஒரு பொருளை வைத்த இடத்தை மறந்து விடுவது அல்லது ஒரு நினைவை மீண்டும் கொண்டு வர யாராவது நினைவூட்ட வேண்டியிருப்பது போன்ற மாற்றங்களை வயதான காலத்தில் பலர் கவனிக்கலாம். இது மட்டுமே ஒரு நோய் என்று சொல்லிவிட முடியாது. ஆனால், இந்த மறதி அடிக்கடி நிகழும்போதும், நாளுக்குநாள் அதிகரிக்கும்போதும் அல்லது அன்றாட இயல்பு வாழ்க்கையைப் பாதிக்கும்போதும் தான் கவலை தொடங்குகிறது என்கிறார் மனநல மருத்துவ ஆலோசகர் மருத்துவர் நிவேதா பத்மநாபன். முதியவர்களுக்கு ஏற்படும் மறதி குறித்து அவர் நம்முடன் பகிர்ந்து கொண்டவை.

வயதாகும்போது மூளையின் வேகம் சற்று குறையலாம்; ஆனால் அது ஒருவரின் அன்றாட வாழ்க்கையைத் தாமாகவே நிர்வகிக்கும் திறனை முழுமையாகப் பறித்துவிடக் கூடாது. முதுமையடையும் போது முன்பை விட விஷயங்களை யோசித்துச் செய்ய அதிக நேரம் எடுத்துக்கொள்ளலாம், ஆனால் தங்களின் அன்றாடப் பணிகளைத் தாங்களே தன்னிச்சையாகச் செய்து முடிக்க முடியும். நினைவாற்றல் குறைபாடுகள் எப்போதாவது மட்டுமே நிகழ்ந்து, அது அவர்களின் அன்றாட நடவடிக்கைகளைப் பாதிக்காத வரை, அது இயல்பான முதுமையின் ஒரு பகுதியாகவே இருக்க அதிக வாய்ப்புள்ளது.

மறதி தொடர்பாக நாம் கவனிக்க வேண்டிய முக்கிய அறிகுறிகள்

நம்முடைய நினைவாற்றலில் உண்டாகும் மாற்றம் ஒருவரின் நடவடிக்கைகள் மற்றும் அன்றாட வழக்கத்தையே மாற்றத் தொடங்கும் போது, அதற்கு நாம் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். ஏதேனும் ஒரு சந்திப்பை (Appointment) ஒருமுறை மறந்து விடுவது சாதாரணமானது. ஆனால், ஒரே கேள்வியைத் திரும்பத் திரும்பக் கேட்பது, சமீபத்தில் நடந்த நிகழ்வுகளை நினைவில் வைத்திருக்க முடியாமல் போவது, அடிக்கடி சென்று வந்து பழகிய இடங்களில் வழிகுழம்புவது அல்லது பழக்கமான வேலைகளைச் செய்யச் சிரமப்படுவது ஆகியவை தீவிரமான ஏதோ ஒரு பிரச்சினையைக் குறிக்கின்றன.

அந்தக் கட்டத்தில், இதை வெறும் ‘‘இயல்பான முதுமை” என்று கடந்து செல்லக் கூடாது. இதில் மிக முக்கிய அறிகுறி: அன்றாட செயல்பாட்டுத் திறனை இழப்பதாகும் (Loss of function). வயதான ஒருவர் வழக்கமாக உட்கொள்ளும் மருந்துகளைச் சாப்பிட மறந்தால், பணத்தைச் சரியாகக் கையாளத் தெரியாமல் திணறினால், ஒரு காலத்தில் தங்களுக்கு நன்கு தெரிந்த வேலைகளில் அடுத்தடுத்து பின்பற்ற வேண்டியவற்றை மறந்துப் போனால், அல்லது எளிய அன்றாட வேலைகளுக்குக் கூட பிறரை அதிகளவில் சார்ந்திருக்கத் தொடங்கினால், அது இனி ஆபத்தில்லாத வெறும் மறதி அல்ல! இத்தகைய சூழல்களில், மறதியை அலட்சியப்படுத்தாமல் உடனடியாக பரிசீலிக்க வேண்டும்.

மூளை நமக்கு உணர்த்தும் செய்தி என்ன?

மறதி ஏற்படுவதற்குப் பல காரணங்கள் இருக்கலாம். போதிய தூக்கமின்மை, மன அழுத்தம், உணர்ச்சிப் போராட்டங்கள், சோர்வு அல்லது மருந்துகளின் பக்கவிளைவுகள் போன்ற தற்காலிகக் காரணங்களாலும் மறதி வரலாம். அல்லது மூளையின் உட்பகுதியில் ஏற்படும் பாதிப்புகளினாலும் வரலாம். இதனால்தான், மறதி தொடர்பான பிரச்னைகளை ஏதோ ஒரு குறிப்பிட்ட தருணத்தை மட்டும் வைத்து முடிவெடுக்காமல், ஒட்டுமொத்தப் பின்னணியோடு அணுக வேண்டும்.

‘டிமென்ஷியா’ (Dementia) என்பது ஒரே ஒரு தனிப்பட்ட நோய் அல்ல; அது காலப்போக்கில் ஒருவரின் சிந்தனை மற்றும் நினைவாற்றலைப் பாதிக்கும் பல்வேறு பாதிப்புகளின் தொகுப்பாகும். இது முதலில் சாதாரண மறதி போல மிகவும் மெதுவாகத் தொடங்கலாம். ஆனால் போகப் போக, இதன் கட்டமைப்பு தெளிவாகத் தெரியும். அவர்கள் நேரத்தைக் கணக்கிடத் தவறுவார்கள், ஒரே கதையை மீண்டும் மீண்டும் கூறுவார்கள் அல்லது அன்றாட உரையாடல்களைப் புரிந்து கொள்ளச் சிரமப்படுவார்கள். லேசான குழப்பமாகத் தொடங்குவது காலப்போக்கில் அன்றாட வாழ்க்கையையே மாற்றியமைக்கும் ஒரு பெரிய பாதிப்பாக உருவெடுக்கலாம்.

வெறும் மறதியைத் தாண்டி...

நினைவாற்றல் குறைபாடு என்பது இதன் ஒரு பகுதி மட்டுமே! இத்துடன் ஒருவர் அதிக மனப்பதற்றத்துடனும் (Anxiety), எளிதில் கோபப்படுபவராகவும், வழக்கத்திற்கு மாறாக அமைதியாகவோ அல்லது தங்களைச் சுற்றியுள்ள உலகத்தில் ஆர்வமில்லாமலோ மாறக்கூடும். சில நேரங்களில் ஒருவரின் நினைவாற்றல் இழப்பு அவரது குடும்பத்தினருக்கு தெரியவருவதற்கு முன்பே, இந்த மனநிலை மாற்றங்கள் தான் முதலில் கண்ணில்படும்.

ஒரு காலத்தில் மிகவும் தன்னம்பிக்கையுடன் இருந்த ஒருவர், தங்களால் ஏதேனும் தவறுகள் நடந்துவிடுமோ என்ற பயத்தினால் நாலு பேர் கூடும் இடங்களைத் தவிர்க்கத் தொடங்கலாம், மற்றவர்களுடன் வழக்கமாக மேற்கொள்ளும் கலந்துரையாடல்களில் பங்கேற்பதை நிறுத்தலாம் அல்லது யாரும் இல்லாமல் தனியாக விலகியிருக்கலாம். நோயால் பாதிக்கப்பட்ட நபரும் அவருடைய குடும்பத்தினரும் இந்த நோயை எதிர்கொள்ளும் விதத்தை மாற்றுவதால், இந்த உணர்வுப்பூர்வமான பக்கம் மிகவும் முக்கியமானதாகும். பிடிவாதம், கோபம் அல்லது அலட்சியம் போல வெளிப்புறத்திற்குத் தெரிவது உண்மையில் அவர்களின் பயமாகவோ அல்லது மனக்குழப்பமாகவோ இருக்கலாம். மனதிற்குள் ஏதோ சரியாக இல்லை என்று தோன்றும்போது, ஒரு நபர் பிரச்னையை மறைக்க முயலலாம், அல்லது முன்பைப் போலச் சுதந்திரமாகப் பேசுவதைத் தவிர்க்கலாம்.

யாருக்கு அபாயம் அதிகம்?

நினைவாற்றல் சார்ந்த பிரச்னைகள் அனைவருக்கும் ஒரே மாதிரியாக வருவதில்லை. நீண்ட காலமாக இருக்கும் உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு நோய் (Diabetes), உடல் பருமன், புகைபிடித்தல், உடற்பயிற்சியின்மை, தூக்கமின்மை, காது கேட்கும் திறன் குறைபாடு, பார்வைக் குறைபாடு, தனிமை மற்றும் அதிகப்படியான மதுப்பழக்கம் ஆகியவை இதற்கான அபாயத்தை அதிகரிக்கும். இவை மூளையின் ஆரோக்கியத்திலிருந்து தனித்து நிற்பவை அல்ல; அதனுடன் நேரடித் தொடர்புடையவை என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

நல்ல வேளையாக, இந்த அபாயக் காரணிகளில் பெரும்பாலானவற்றை நம்மால் முறையாக நிர்வகிக்க முடியும். ரத்த சர்க்கரை அளவு, ரத்த அழுத்தம் மற்றும் தூக்கத்தைச் சீராக வைத்திருப்பது காலப்போக்கில் மூளை ஆரோக்கியத்திற்குப் பெரும் பக்கபலமாக இருக்கும். வழக்கமான உடற்பயிற்சி, அன்றாடம் மனிதர்களுடனான தொடர்பு மற்றும் மூளைக்கான பயிற்சிகள் ஆகியவை மனதை எப்போதும் சுறுசுறுப்பாக வைத்திருக்க உதவும். மூளையின் ஆரோக்கியம் வெறும் வயதால் மட்டுமே தீர்மானிக்கப்படுவதில்லை, நமது அன்றாட வாழ்க்கை முறையாலும் தான் தீர்மானிக்கப்படுகிறது

மனதைப் பாதுகாக்க உதவும் வழிகள்

நினைவாற்றல் பிரச்னைகள் அனைத்திற்கும் ஒரே மாதிரியான தீர்வு எதுவுமில்லை என்றாலும், மூளையின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சில நல்ல பழக்கவழக்கங்கள் உள்ளன. தினமும் நடைப்பயிற்சி செய்வது, சத்தான உணவுகளை உண்பது, சரியான தூக்கம், புகைபிடிப்பதைத் தவிர்ப்பது, மதுப்பழக்கத்தைக் கட்டுப்படுத்துவது மற்றும் சமூகத்துடன் இணைந்து இருப்பது ஆகியவை மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். புத்தகம் வாசிப்பது, உரையாடுவது, எளிய புதிர்களை விடுவிப்பது மற்றும் உடலைச் சுறுசுறுப்பாக வைத்திருக்கும் வழக்கமான பணிகள் ஆகியவை மூளையை நீண்ட காலத்திற்கு ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும்.

இதயத்திற்கு எந்தளவிற்கு பராமரிப்பு தேவையோ, அதே போல மூளைக்கும் பராமரிப்பு அவசியம். வயதான காலத்தில் நினைவாற்றல் இழப்பது தவிர்க்க முடியாத ஒன்று என்று முதியவர்கள் பலர் நம்புகிறார்கள், ஆனால் அது எப்போதும் உண்மை அல்ல. பல வாழ்வியல் தேர்வுகள் மூளை எந்த அளவுக்கு வயோதிகத்தைச் சமாளிக்கிறது என்பதைத் தீர்மானிக்கின்றன. ஒரு சீரான, ஆரோக்கியமான அன்றாடப் பழக்கம் மூளையின் அழுத்தத்தைக் குறைத்து, சிலருக்கு நினைவாற்றல் சரிவைத் தள்ளிப்போடவும் உதவும்.

முன்கூட்டியே மருத்துவ உதவி பெறுவது ஏன் முக்கியம்?

மறதி என்பது வயதான காலத்தில் இயல்பாக வருவதுதான் என்று நினைத்து குடும்பத்தினர் பல நேரங்களில் மருத்துவமனைக்கு வர தாமதம் செய்கிறார்கள். இந்தத் தாமதம் பெரும் பாதிப்பை ஏற்படுத்தலாம். ஆரம்பத்திலேயே பரிசோதிப்பது, குணப்படுத்தக்கூடிய பிற காரணங்களைக் கண்டறியவும், ‘டிமென்ஷியா’ பாதிப்பை முன்கூட்டியே அடையாளம் கண்டு திட்டமிடவும் உதவும்.

சரியான நேரத்தில், ஒரு பொது மருத்துவர் (Physician), நரம்பியல் நிபுணர் (Neurologist) அல்லது மனநல மருத்துவரிடம் (Psychiatrist) சென்று ஆரம்பக்கட்ட பரிசோதனை மற்றும் மதிப்பீட்டைச் செய்வது மிக முக்கியம். ஒரு தொழில்முறை மருத்துவ மதிப்பீடு, இயல்பான முதுமையையும் மூளை தொடர்பான பிற கோளாறுகளையும் துல்லியமாகப் பிரித்து அறிய உதவும். இந்த மருத்துவ பரிசோதனைகள் கவனம், அறிகுறிகள் தீவிரமடைவதற்கு முன்பே அந்த நபருக்குச் சரியான ஆதரவைக் கிடைக்கச் செய்கிறது; இது குடும்பத்தினருக்கும் உண்மையில் என்ன நடக்கிறது என்பதைப் பற்றி தெளிவாக புரிந்து கொள்ள உதவுகிறது.

ஆரம்பத்திலேயே உதவி பெறுவது என்றால் நம்பிக்கையை இழந்துவிட்டோம் என்று அர்த்தமல்ல. பல நேரங்களில், அது நமக்கான அவகாசத்தையும் காலத்தையும் அதிகப்படுத்தித் தருகிறது என்பதே உண்மை. நினைவாற்றல் இழப்பை மீண்டும் பழைய நிலைக்குக் கொண்டுவர முடியாது என்றாலும் கூட, முன்கூட்டியே கண்டறிவது அந்த நபரின் நிம்மதி, கண்ணியத்தை நம்மால் பாதுகாக்க முடியும். அதோடு அவர்களது அன்றாட செயல்பாடுகளைச் சிறப்பான முறையில் மேம்படுத்த நம்மால் உதவ முடியும்..

பயமின்றி எதிர்கொள்ளும் முறை

நினைவாற்றல் தொடர்பான மாற்றங்களைப் பயத்துடன் அணுகாமல், பொறுமையுடன் அணுகுவது நல்லது. மறந்துபோன ஏதோ ஒரு சிறு விஷயம் ஒரு மனிதனின் அடையாளத்தை மாற்றி விடாது. இதில் கவனிக்க வேண்டிய விஷயம், அது தொடர்ந்து எப்படி ஏற்படுகிறது, எப்பொழுதெல்லாம் ஏற்படுகிறது (Pattern) என்பதைப் பற்றி தெரிந்து கொள்வதுதான். இந்தப் பிரச்னை எப்போதாவது நடக்கிறதா, அல்லது அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாகவே மாறிவிட்டதா? அந்த நபர் விஷயங்களைச் செய்ய வெறும் தாமதம் மட்டும் செய்கிறாரா, அல்லது ஒரு காலத்தில் மிகச் சுலபமாகக் கையாண்ட விஷயங்களை இப்போது செய்யவே முடியாமல் திணறுகிறாரா?

வழக்கத்திற்கு மாறான இந்த வேறுபாடு மிகவும் முக்கியமானது, ஏனெனில் இது சாதாரண முதுமையையும் சாத்தியமான ஒரு நோயையும் பிரித்துக் காட்டுகிறது. முதுமை என்பது யோசித்து நினைவுக்குக் கொண்டு வரும் வேகத்தைக் குறைக்கலாம், ஆனால் நோய் என்பது ஒருவரின் சுயசார்புத் திறனையே மாற்றியமைக்கிறது. அதனால்தான், தொடர்ச்சியாக ஏற்படும் மறதியை அலட்சியமாகத் தூக்கி எறியவும் கூடாது, அதே நேரம் அதைக் கண்டு பதறவும் கூடாது.

நிதானமான, கவனமான அணுகுமுறையே இதற்குச் சிறந்தது. சரியான நேரத்தில் செய்யப்படும் மருத்துவ மதிப்பீடு, ஆரம்பக்கட்ட நினைவாற்றல் பரிசோதனை மற்றும் தேவைப்படும்போது சரியான மனநல ஆலோசனைகள் ஆகியவை பிரச்சனை தீவிரமடைவதற்கு முன்பே அதற்கான காரணத்தைக் கண்டறிந்து, உரிய சிகிச்சையைத் தொடங்க பெரிதும் துணைபுரியும்.

முதுமையின் போது அவர்களுக்கு தேவை கண்ணியம், அன்பு, ஆதரவு. இதை உறுதி செய்ய அவர்களது நினைவாற்றல் மற்றும் மறதியை கவனத்துடன் கையாள வேண்டியது அவசியம்

என்பதை உணர்வோம்.

தொகுப்பு: மனநல மருத்துவர் நிவேதா பத்மநாபன்