Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

குழந்தைகளுக்கான பருவகால காய்ச்சல் தடுக்கும் வழிகள்!

நன்றி குங்குமம் டாக்டர்

பருவநிலை மாற்றத்தால் அதிகம் பாதிக்கப்படுவது குழந்தைகள்தான். காய்ச்சல், சளி, இருமல் என அடுத்தடுத்து வரும் உடல்நலப் பிரச்னைகள் பெற்றோரை கவலையில் ஆழ்த்தும். இதைச் சாதாரண பருவகால காய்ச்சல் என்று அலட்சியப்படுத்துவது சரியா? குழந்தைகளுக்கு பருவகால காய்ச்சல் ஏன் ஏற்படுகிறது, எந்த அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும், வீட்டில் என்னென்ன தற்காப்பு நடவடிக்கைகள் அவசியம் என்பதை நம்முடன் பகிர்ந்து கொள்கிறார் குழந்தைகள் நல மருத்துவர் டி. சிவராமன்.

குழந்தைகளுக்கு பெரும்பாலும் இந்தப் பருவத்தில் ஃப்ளூ காய்ச்சல் மற்றும் சாதாரன சளி பிடித்தல் அதிகமாக இருக்கும்.

ஃப்ளூ காய்ச்சல்

மழை மற்றும் வெயில் மாறி மாறி வரும் காலங்களில் வைரஸ் தொற்றால் ஃப்ளூ காய்ச்சல் பரவுகிறது.

அறிகுறிகள்

ஃப்ளு காய்ச்சலின் அறிகுறிகள் என்றால் காய்ச்சல், கடுமையான உடம்பு வலி, தொண்டை வலி, வரட்டு இருமல் மற்றும் சோர்வு ஆகும். இது தானாகவே சரியாகக்கூடிய ஒரு தொற்று ஆகும்.

ஃப்ளூ காய்ச்சலின் ஆபத்து அறிகுறிகள்

ஒரு வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு மூச்சுத் திணறல் அல்லது மூச்சு வாங்குதல், குழந்தையால் பால் குடிக்கவோ அல்லது சாப்பிடவோ முடியாமல் போவது.குழந்தை மிகவும் சோர்வாகத் தொடர்ந்து தூங்கிக்கொண்டே இருப்பதுரத்த ஓட்டம் குறைவதால் கை மற்றும் கால்கள் சில்லென்று ஆவது தொடர்ந்து வாந்தி எடுப்பது மற்றும் 6-7 மணி நேரமாக சிறுநீர் கழிக்காமல் இருப்பது.

அதிகப்படியான இருமல் அல்லது காய்ச்சலினால் ஜன்னி, பிட்ஸ் (Fits) வருவது போன்றவை ஏற்பட்டால் உடனடியாக குழந்தைகள் நல மருத்துவரை அணுகி சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும்.

காய்ச்சலின்போது செய்ய வேண்டியவை & தவிர்க்க வேண்டியவை

பூரண ஓய்வு (Rest): காய்ச்சல் உள்ள குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பவோ, பயணங்கள் மேற்கொள்ளவோ அல்லது கூட்ட நெரிசல் மிகுந்த இடங்களுக்கு அழைத்துச் செல்லவோ கூடாது.

நீர்ச்சத்து பராமரிப்பு: காய்ச்சலின் போது உடலின் நீர்ச்சத்து குறையும் (Dehydration) என்பதால் நிறைய தண்ணீர், இளநீர் அல்லது வீட்டில் தயாரித்த பழச்சாறுகளைக் கொடுக்க வேண்டும்.

எளிமையான உணவு: செரிமான சக்தி குறைவாக இருக்கும் என்பதால் ரசம் சாதம், கஞ்சி, வேகவைத்த காய்கறிகள் மற்றும் சூப் கொடுக்கலாம். எண்ணெயில் பொரித்த உணவுகள், காரமான உணவுகள், மாமிசம் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.

சாதாரண சளி

காற்றில் உள்ள ஈரப்பதத்தினாலும், மழையில் குழந்தைகள் நனைவதாலும் சளி பிடித்தல் ஏற்படுகிறது.

அறிகுறிகள்

சாதாரண சளி பிரச்னையில் லேசான மூக்கு ஒழுகுதல் மற்றும் மிதமான காய்ச்சல் மட்டுமே இருக்கும்; குழந்தை சுறுசுறுப்பாக விளையாடும் மற்றும் வழக்கம் போல் உணவு உட்கொள்ளும். எனவே, இதற்கு பயப்பட வேண்டிய அவசியமில்லை.

வருமுன் காக்கும் தடுப்பு முறைகள்

சுத்தமான சுற்றுப்புற சூழ்நிலை, சத்தான உணவு, ஆரோக்கியமான நல்ல பழக்கவழக்கங்கள் கடைபிடிக்க வேண்டும். சத்தான உணவு எனும் போது வீட்டில் சமைத்த உணவுகள், பழங்கள் மற்றும் காய்கறிகள் உணவுகள் அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டும். இது குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும். ஆனால், இன்றைய உணவு பழக்கத்தில் பானிபூரி, சமோசா, பிஸ்கட் போன்ற நொறுக்குத் தீனிகள் மற்றும் பாக்கெட்டில் அடைக்கப்பட்ட உணவுகள், பாட்டில் பழச்சாறுகள், ஐஸ்க்ரீம், இனிப்புகள் போன்றவற்றை குழந்தைகளுக்கு அதிகமாக வாங்கித் தருகிறார்கள். குழந்தைகளும் இதை அதிகம் விரும்பி உண்கிறார்கள். இந்த பழக்கத்தை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

அதற்கு மாற்றாக வீட்டில் தயாரித்த உணவுகள், எலுமிச்சைசாறு, ப்ரஷ்ஷாக தயாரித்த பழச்சாறுகள், இளநீர், ஆப்பிள், மாதுளை போன்றவற்றை கொடுக்கலாம். மேலும், நமது தாத்தா பாட்டிகள் அந்தக் காலத்தில் சாப்பிட்ட உணவுகளை சமைத்துக் கொடுக்கலாம். அதுவே ஆரோக்கிய உணவாக இருந்தது. அதுபோன்று, இப்போது பெரும்பாலான குழந்தைகள் காலை 7 மணிக்கு எல்லாம் பள்ளிக்கு கிளம்பிவிடுகிறார்கள். இதனால், காலை உணவை உட்கொள்ளாமலே சென்று விடுகின்றனர். இது முற்றிலும் தவறானது. அப்படி குழந்தை சாப்பிடாமல் போகும்போது, அன்றைய நாளுக்கு தேவையான எனர்ஜி குழந்தைக்கு கிடைக்காது.

எனவே, ஏதாவது ஒரு உணவை கட்டாயம் குழந்தையை சாப்பிட வைத்துதான் பெற்றோர் பள்ளிக்கு அனுப்ப வேண்டும். இதனால்தான் உணவே மருந்து என்று நமது முன்னோர்கள் சொல்லி வைத்தார்கள். அதையெல்லாம் கடைப்பிடித்தாலே நாம் ஆரோக்கியமாக வாழலாம். இதுபோன்ற உணவுகளை கொடுக்கும்போது குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். இதனால், பெரும்பாலும் நோய் வராது. அப்படியே வந்தாலும் பெரிய பாதிப்புகள் இருக்காது.

அடுத்து சுற்றுப்புற சூழ்நிலை: சுத்தம் மற்றும் சுகாதாரம் இருப்பது. உதாரணமாக சாப்பிடும் முன்பு கை கழுவுதல், தினமும் குளிப்பாட்டுதல் போன்ற தன் சுத்தத்தைப் பராமரிக்க வேண்டும். சுற்றுப்புறத்தையும் தூய்மையாக வைக்க வேண்டும்.அதுபோன்று வீட்டில் ஒரு குழந்தைக்கு காய்ச்சல் வந்தால் குழந்தையைத் தனி அறையில் பராமரிப்பது மற்றவர்களுக்குப் பரவாமல் தடுக்கும்.

காய்ச்சல் வந்தால் என்ன செய்யவேண்டும்?

குழந்தைக்கு தேவையான ஓய்வு கட்டாயமாக கொடுக்க வேண்டும். காய்ச்சி ஆறிய வெந்நீர் நிறைய குடிக்க கொடுக்க வேண்டும். இதனால், நீர்ச்சத்து குறைந்து குழந்தை சோர்வாகாமல் இருக்கும். வேக வைத்து மசித்த உணவுகளை கொடுக்க வேண்டும். ஏனென்றால் காய்ச்சல் இருக்கும்போது செரிமான சக்தி குறைவாகத்தான் இருக்கும். அதனால், ரசம் சாதம், அரிசி கஞ்சி, வேக வைத்த காய்கறிகள் சூப் போன்றவற்றை கொடுக்க வேண்டும். அசைவ உணவுகளை தவிர்க்க வேண்டும்.

திரை நேரம் (Screen Time): காய்ச்சலின்போது மொபைல் போன் மற்றும் டிவி பார்ப்பதைக் கட்டுப்படுத்த வேண்டும். இதனால் சோர்வு அதிகரிக்கும்.

சுய மருத்துவம் தவிர்க்கவும்: மருத்துவரின் ஆலோசனையின்றி மருந்துக் கடைகளில் தானாக மருந்து வாங்கித் தருவதையும் (Self-medication), இணையத்தைப் பார்த்து சிகிச்சை அளிப்பதையும் கட்டாயமாக தவிர்க்க வேண்டும். மருத்துவர் ஆலோசனையுடன்தான் மருந்துகள் தரவேண்டும்.

கொசுக்கடி தடுப்பு: டெங்கு போன்ற பாதிப்புகளில் இருந்து தப்ப பகல் நேரத்தில் குழந்தைகள் முழு கை சட்டை மற்றும் முழு பேன்ட் அணியச் செய்ய வேண்டும்

ரத்தப் பரிசோதனை: குழந்தைக்கு இரண்டு நாளுக்கு மேல் காய்ச்சல் இருக்கிறது என்றால் உடனடியாக மருத்துவ பரிசோதனை செய்து என்ன மாதிரியான காய்ச்சல் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். இரண்டு நாட்களுக்கு மேல் அலட்சியப்படுத்தக் கூடாது. அது போன்று காய்ச்சல் வந்த முதல் நாளிலேயே பதற்றத்தில் பிளட் டெஸ்ட் எடுப்பதைத் தவிர்க்க வேண்டும்; சரியான நேரத்தில் மருத்துவர் பரிந்துரைக்கும் போது பரிசோதனை செய்வதே நோயைக் கண்டறிய உதவும்.

காய்ச்சலுடன் குழந்தைகளை வெளியில் அழைத்துச் செல்வதை தவிர்க்க வேண்டும். பெரிய மருத்துவ வசதிகள் இல்லாத அந்தக் காலத்திலேயே காய்ச்சல் வந்தால் ஓய்வு தேவை என்று பெரியவர்கள் அறிந்திருந்தார்கள். ஆனால் அதையெல்லாம் நாம் இப்போது மறந்துவிட்டோம். வெளியிடங்களுக்கு அழைத்து செல்கிறோம். காய்ச்சலுடனே பள்ளிக்கு பரீட்சை எழுத அனுப்பி வைக்கிறோம். இந்நிலையில் குழந்தை பரீட்சையை நன்றாக எழுதவும் செய்யாது. மேலும், உடலும் மிகவும் சோர்வாகிவிடும்.

அதுபோன்று குழந்தைக்கு ஏற்கெனவே வேறு ஏதுவும் உடல் ரீதியான பிரச்னைகள் இருந்தால், அதைப்பற்றி டீச்சரிடம் சொல்லி வைக்க வேண்டும். அப்போதுதான் அவர்கள் முன்னெச்சரிக்கையாக இருப்பார்கள்.

பிற தொற்றுகள்

கை, கால், வாய்த்தொற்று (Hand, Foot, mouth disease): இந்த தொற்றுகள் குழந்தைகளை தாக்குகிறது. 6-7 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு வரும் இந்த வைரஸ் தொற்று சின்னம்மை (Chickenpox) போன்று இருக்கும். ஆனால் அது சின்னம்மை இல்லை. இது ஒரு வாரத்தில் தானாகச் சரியாகிவிடும்

டைபாய்டு (Typhoid): அசுத்தமான தண்ணீர் மற்றும் உணவால் பரவும் பாக்டீரியா தொற்று. சுடவைத்த நீர் மற்றும் சுத்தமான உணவை வழங்குவதன் மூலம் இதைத் தடுக்கலாம்.

இந்த சீதோஷ்ண நிலையில், இந்தப் பருவ காலத்தில் குழந்தைகளை தாக்கும் நோய்கள் இவைகள்தான். எனவே, பெற்றோர் தக்க தற்காப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு குழந்தைகளை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டும். நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் ஆகும்.

தொகுப்பு:- ஸ்ரீ தேவி