Tuesday, June 24, 2025
Home செய்திகள்Banner News நலம் காக்கும் ஸ்டாலின் “ எனும் திட்டத்தை விரைவில் தொடங்கி வைக்கிறார் ஸ்டாலின்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

நலம் காக்கும் ஸ்டாலின் “ எனும் திட்டத்தை விரைவில் தொடங்கி வைக்கிறார் ஸ்டாலின்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

by Arun Kumar

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மிக விரைவில் “நலம் காக்கும் ஸ்டாலின் “ எனும் திட்டத்தை தொடங்கி வைக்கிறார்கள். நீடித்த நுரையீரல் அடைப்பு நோய், கொழுப்பு மிகு கல்லீரல் நோய் – விழிப்புணர்வு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் மானியக்கோரிக்கை அறிவிப்புகளை தொடங்கி வைத்து விழா பேரூரையாற்றினார்கள்.

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் இன்று (04.06.2025) சென்னை, தேனாம்பேட்டையில் உள்ள டிஎம்எஸ் வளாகத்தில், 2025-26 ஆம் ஆண்டு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை மானியக்கோரிக்கை அறிவிப்பு, நீடித்த நுரையீரல் அடைப்பு நோய் மற்றும் கொழுப்புமிகு கல்லீரல் நோய் விழிப்புணர்வு பயிற்சி முகாமினை தொடங்கி வைத்து விழா பேரூரையாற்றினார்கள்.

பிறகு அமைச்சர் அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலோடு, மக்கள் நல்வாழ்வுத்துறையில் பல்வேறு சிறப்பு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மக்களைத் தேடி மருத்துவம், இன்னுயிர் காப்போம் நம்மைக்காக்கும் 48, இதயம் காப்போம், நடப்போம் நலம் பெறுவோம், சிறுநீரகம் பாதுகாக்கும் சீர்மிகு திட்டம், மக்களைத் தேடி மருத்துவ ஆய்வக திட்டம், தொழிலாளர்களை தேடி மருத்துவம் திட்டம் என்று பல்வேறு திட்டங்கள் தமிழ்நாட்டில் புகழ்பெற்று விளங்கி வருகிறது.

இந்தியாவில் 3வது பொதுவான இறப்பிற்கு காரணமாக விளங்குகின்ற ஒரு பெரிய நோய், நீடித்த நுரையீரல் அடைப்பு நோய் என்பதாகும். COPD என்று சொல்லக்கூடிய Chronic obstructive pulmonary disease எனும் நோயினால் உயிரிழப்புகள் அதிகம் ஏற்பட்டு வருகிறது. கோவிட் பாதிப்பிற்கு பிறகு இதயம் பாதிப்புகள் நுரையீரல் பாதிப்புகள் என்பது கூடுதலாகி வருகிறது. 3வது நோய் என்று சொல்லும்போது முதலில் இதய பாதிப்புகளுக்கான மரணங்கள், பக்கவாத பாதிப்புகளுக்கான மரணங்கள், தொடர்ந்து 3வது நோய் பாதிப்பு என்றால் நுரையீரல் அடைப்புக்கான மரணங்கள் என்று அதிக அளவில் மரணங்களை சந்திக்கின்ற நோயாக இருப்பது COPD ஆகும்.

இந்த நோய்க்கு முற்றுப்புள்ளி வைக்கின்ற வகையில் மக்களிடையே போதுமான அளவிற்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதும், முதியவர்கள் நெடுங்காலம் புகை பிடிப்பவர்கள், நுரையீரல் தாக்கம் அதிகம் ஏற்படுபவர்கள் என்று கண்டறிந்து நுரையீரல் தாக்குவதற்குரிய காரணங்களை கண்டறிந்து சரி செய்வதற்குரிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும், பொதுமக்களுக்கு நீடித்த நாள்பட்ட நுரையீரல் தொற்றிற்கு முக்கிய காரணிகளாக விளங்குகின்ற நெடுங்காலம் புகைப் பிடிக்கும் பழக்கம், காற்று மாசு, தொழில் சார் நோய் பாதிப்புகள் போன்றவை குறித்த விழிப்புணர்வும் ஏற்படுத்தப்படவிருக்கிறது. எனவே இந்த திட்டத்தை இன்றைக்கு தொடங்கி வைத்திருக்கிறோம்.

* கொழுப்பு கல்லீரல் நோய்

அதேபோல் நிதிநிலை அறிக்கையில் அறிவித்த இன்னொரு சிறப்பான திட்டம் கொழுப்பு மிகு கல்லீரல் நோய். இதுவும் கூட அதிகம் உயிரிழப்புகளை தருகின்ற ஒரு நோயாகும். எனவே கொழுப்பு மிகு கல்லீரல் நோய் குறித்த விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்தி, ஆரம்ப நிலை பரிசோதனைகளை மேற்கொள்வது போன்ற பல்வேறு திட்டங்கள் இன்றைக்கு தொடங்கப்பட்டிருக்கிறது.

இந்த கால வாழ்க்கை முறையில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்களினால் உலகெங்கும் சுமார் 30% மக்கள் கொழுப்பு மிகு ஈரல் நோய் பாதிப்புகளுக்கு உள்ளாகிறார்கள். இதை கருத்தில் கொண்டு களப்பணியாளர்கள் மூலம் நோய் குறித்தான விழிப்புணர்வை ஏற்படுத்துவது, அறிகுறிகள் உள்ளவர்களை அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு உரிய மருத்துவ பரிசோதனைகளுக்காக கல்லீரல் பாதிப்புக்கான இரத்த பரிசோதனைகளை மேற்கொள்ள வழிவகை செய்வது போன்ற பல்வேறு விஷயங்களை மேற்கொள்வது போன்ற திட்டங்கள் குறித்து பயிற்சி முகாம் இன்று தொடங்கி வைக்கப்பட்டிருக்கிறது. இந்த பயிற்சியில் மக்களைத் தேடி மருத்துவம் எனும் மகத்தான திட்டத்தை மக்களிடையே சென்று சேர்த்த மாவட்ட திட்ட அலுவலர்கள் அனைவருமே இங்கே பங்கேற்றிருக்கிறார்கள்.

மாவட்ட பயிற்சி மருத்துவ அலுவலர்கள் அனைவரும் பங்கேற்றிருக்கிறார்கள். தமிழ்நாடு முழுவதிலும் இருக்கின்ற சுகாதார மாவட்டங்கள் 45 இலிருந்து மாவட்ட சுகாதார அலுவலர்கள் காணொளி வாயிலாகவும் பங்கேற்று இருக்கிறார்கள். ஆக மிக முக்கியத்துவம் வாய்ந்த பயிற்சி பயிலரங்கத்தை இன்று தொடங்கி வைக்கப்பட்டிருக்கிறது.

* நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம்

இது மட்டுமல்லாமல் இந்த துறையில் இன்னொரு மகத்தான சாதனையாக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்னமும் நோயற்ற தமிழ்நாடு, நோய் பாதிப்புகள் அற்ற தமிழ்நாட்டு மக்கள் என்கின்ற வகையில் பல்வேறு புதிய திட்டங்களை கொண்டு வர அறிவுறுத்தியிருக்கிறார்கள்.

அந்தவகையில் இன்றைக்கு தமிழ்நாட்டில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் மனதிற்கு மிகவும் நெருக்கமான ஒரு சிறப்பான திட்டம் ஒன்று மிக விரைவில் சென்னையில் தொடங்கி வைக்கப்படவிருக்கிறது. இந்த திட்டத்தின் பெயர் “நலம் காக்கும் ஸ்டாலின்“. ஏற்கெனவே மக்களைத் தேடி மருத்துவம், இன்னுயிர் காப்போம், பாதம் பாதுகாப்போம் போன்ற பல்வேறு திட்டங்களின் வரிசைகளுக்கு இந்த திட்டம் முன்னோடியாக நலம் காக்கும் ஸ்டாலின் எனும் திட்டம் தொடங்கி வைக்கப்பட உள்ளது.

இந்த திட்டத்தினால் பயன்பெற இருப்பவர்கள் ஏராளமான நன்மைகளை பெற இருக்கிறார்கள். பொதுவாக முழு உடற் பரிசோதனை என்று தனியார் மருத்துவமனை மற்றும் அரசு மருத்துவமனைகளுக்கு எங்கே சென்றாலும் பொருட் செலவாகும். ஆனால் பொருட் செலவு இல்லாமல் முழு உடற் பரிசோதனைகள். அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளின் சிறப்பு மருத்துவர்கள் சிறப்பு மருத்துவ வசதிகளோடு பெரிய அரங்குகள் அமைக்கப்படவிருக்கிறது.

அதில் பொது மருத்துவம், பொது அறுவை சிகிச்சை, எலும்பியல் மருத்துவம், மகப்பேறியியல் மருத்துவம் மற்றும் மகளிர் மருத்துவம், குழந்தை மருத்துவம், இருதயவியல் மருத்துவம், நரம்பியல் மருத்துவம், தோல் மருத்துவம், பல் மருத்துவம், கண் மருத்துவம், மனநல மருத்துவம், இயன்முறை மருத்துவம், நுரையீரல் மருத்துவம், இந்திய முறை மருத்துவம் என்று பல்வேறு மருத்துவ முறைகள் இதில் ஒருங்கிணைய இருக்கின்றது.

Master Health Check up என்று சொல்லக்கூடிய முழு உடற் பரிசோதனை மக்களைத் தேடி, மக்கள் இருக்கும் இடங்களுக்கே சென்று பரிசோதனைகள் செய்யும் திட்டம் மிக விரைவில் தொடங்கப்பட உள்ளது. இந்த திட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு அவர்களின் மாற்றுத்திறன் சதவிகிதம் கண்டறிந்து சான்றிதழ் தருகின்ற திட்டம் இந்த முகாம்களில் தரவிருக்கிறது. புற்றுநோய்க்கான பரிசோதனைகள் இந்த திட்டத்தில் செயல்படுத்தப்படவிருக்கிறது.

முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தில் இதுவரை தமிழ்நாட்டில் 1 கோடியே 44 இலட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் பயன்பெற்றிருக்கிறார்கள் என்றாலும் இன்னமும் புதிதாக தனிக் குடும்பங்கள் அமைத்துக் கொண்டவர்களுக்கு விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தில் சேர்ப்பதற்கு ஏதுவாக அவர்களுக்கு முகாம்கள் நடத்தப்பட்டு சேர்க்கப்பட்டு வருகிறது என்றாலும் நலன் காக்கும் ஸ்டாலின் எனும் திட்டத்தில் புதிய பயனாளர்களுக்கு காப்பீடு அட்டையும் வழங்கப்படவிருக்கிறது.

எனவே ஒருங்கிணைந்த சுகாதார முகாமாக இந்த முகாம் அமையவிருக்கிறது. நோய் பாதிப்புகள் கண்டறிதல், தொடர் சிகிச்சை செய்தல், வரையறுக்கப்பட்ட பரிசோதனைகள் செய்தல், நோயறிதல் மற்றும் பரிந்துரைக்கு முன்னுரிமை என்கின்ற வகையிலான இந்த மகத்தான திட்டம் மிக விரைவில் சென்னையில் தொடங்கி வைக்கப்பட உள்ளது. இந்த முகாம் வருகின்ற டிசம்பர் இறுதிக்குள் 1256 இடங்களில் நடத்துவதற்கு முடிவெடுக்கப்பட்டிருக்கிறது.

அதாவது தமிழ்நாட்டில் இருக்கின்ற வட்டாரங்களின் எண்ணிக்கை 388, ஒவ்வொரு வட்டாரத்திற்கும் 3 வீதம் 1164 முகாம்களும், சென்னையில் 15 மண்டலங்களில் மண்டலத்திற்கு 1 என்கின்ற வகையில் 15 முகாம்களும், தமிழ்நாட்டில் 10 இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் தொகை கொண்ட மாநகராட்சிகள் 5, இந்த 5 மாநகராட்சிகளில் தலா 4 முகாம்களும், 10 இலட்சம் மக்கள் தொகைக்கு குறைவான 19 மாநகராட்சிகளில் தலா 3 முகாம்களும், ஒட்டுமொத்தமாக 1256 முகாம்கள் நடத்தப்படவிருக்கிறது.

* கோவிட் தொடர்பான கேள்விக்கு

கோவிட் பாதிப்புகள் என்பது பெரிய அளவில் பயப்பட வேண்டியதில்லை என்று தொடர்ந்து தெரிவித்து வருகிறோம். தற்போது தமிழ்நாட்டில் ஒட்டுமொத்தமாக கண்காணிப்பில் உள்ளவர்கள் எண்ணிக்கை 216. இவர்களுக்கு 3 நாட்களாக சளி, இருமல், தொண்டை வலி, காய்ச்சல் போன்ற பாதிப்புகளோட குணமடைந்து விடுகிறார்கள்.

தொடர்ந்து இந்த பாதிப்புகளுக்கு உள்ளானவர்களை அந்தந்த மாவட்ட சுகாதார அலுவலர்கள் கண்காணித்துக் கொண்டிருக்கிறார்கள். எனவே பெரிய அளவில் பதட்டப்படத் தேவையில்லை. மேலும் நோய் எதிர்ப்புச் சக்தி குறைவாக இருப்பவர்கள், வயது மூத்தவர்கள், இணை நோய் பாதிப்பு இருப்பவர்கள் பொது இடங்களுக்கு செல்லும்போது நோய் பாதிப்பு உள்ளவர்கள் யாராவது இருமினாலோ, தும்மினாலோ அவர்களுடைய எச்சில் துகள் இவர்கள் மீது பட்டு இவர்களுக்கும் நோய் பாதிப்புகள் வர வாய்ப்பு இருக்கிறது.

எனவேதான் ஒன்றிய அரசின் சுகாதாரத்துறை சார்பில் ஒரு அறிவுறுத்தல் வெளியிடப்பட்டிருக்கிறது. பொது இடங்களுக்கு செல்லும் கர்ப்பிணித் தாய்மார்கள், வயது மூத்தவர்கள், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்கள் போன்றவர்கள் முக கவசம் அணிந்து செல்ல அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.

இதுமட்டுமல்லாமல் ஒட்டு மொத்தமாக 2019 கோவிட் பாதிப்புகளுக்கு பிறகு தனிமனித இடைவெளி கடைபிடிப்பது, அடிக்கடி சோப்பு போட்டு கைகளை கழுவிக் கொள்வது போன்று சுத்தமாக இருப்பது நல்லது. மேலும் இணை நோய் உள்ளவர்கள் மருத்துவமனைகளில் பரிசோதனைகள் செய்யும்போது கோவிட் Package என்று உள்ளடக்கி பரிசோதனை செய்யப்படுகிறது. இதனால் அவர்கள் இறக்கும்போது கோவிட் இருப்பது கண்டறியப்பட்டால் அது கோவிட் இறப்பாக கருதப்படாது என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் தெரிவித்தார்கள்.

You may also like

Leave a Comment

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi