நன்றி குங்குமம் டாக்டர்
காய்கறிகள், பழங்கள், தானியங்கள் போன்றவை நமக்கு எப்போதும் பயன்படும் தாவரங்களாகும். முக்கியமாக காய்கறிகள் நமது வாழ்வோடு ஒன்றிவிட்டன. இவைகள் நமது உணவுத் தேவையை நிறைவு செய்கின்றன. ஆரோக்கியத்தை அளிக்கின்றன. மட்டுமின்றி பல்வேறு சத்துகளை ஈந்து, வைட்டமின் குறைபாடுகளை நீக்குவதோடு பலநோய்களையும் தீர்க்கின்றன. இங்கு காய்கறிகளில் ஒன்றான பூசணி பற்றி பார்ப்போம்.
பூசணியில் மாவுச்சத்து, புரதச்சத்து, கொழுப்புச்சத்து, இரும்புச்சத்து, பாஸ்பரஸ், பொட்டாசியம், மெக்னீசியம், துத்தநாகம், சுண்ணாம்பு போன்ற சத்துகள் உள்ளன. மேலும், வைட்டமின் சி, கரோட்டின் போன்றவை உள்ளன. பூசணியிலிருந்து இனிப்புகள் தயாரிக்கப்படுகின்றன. பூசணி சதையிலிருந்து அல்வா தயாரிக்கப்படுகிறது. பூசணி விதைகளிலிருந்து ஒருவகையான எண்ணெய் எடுக்கப்படுகிறது. இந்த எண்ணெய் நரம்பு டானிக்காக பயன்படுகிறது.
குணங்கள்
விஷமிறக்கி, புழுக்கொல்லி, நரம்பு வலுவூட்டி, வலிப்பு நீக்கி, குளிர்ச்சியூட்டி, புண்ணாற்றி ஆகிய குணங்கள் பூசணிக்கு உண்டு.
மருத்துவப் பயன்கள்
பூசணி விதைகளை கைப்பிடி அளவு எடுத்து, அரை லிட்டர் தேங்காய் எண்ணெயிலிட்டு காய்ச்சி வைத்துக்கொண்டு தலையில் தேய்த்து குளித்து வர பேன் ஒழியும், முடி வளரும்.பூசணிச்சதையை மிக்சியிலிட்டு அடித்து, தேவையான பால், சர்க்கரை சேர்த்து அருந்த உடல் வெப்பம் தணிந்து குளிர்ச்சி பெறும். ஒரு கப் நீரில் ஒரு தேக்கரண்டி பூசணிக் சாறு கலந்து வெறும் வயிற்றில் அருந்திவர வயிற்றுப்புண் குணமாகும். உணவுப்பாதையில் ஏற்படும் வீக்கம் குணமாகும். பூசணிச்சதையை சூடாக்கி, பிசைந்து புண்கள் மேல் கட்டிவர புண்கள் ஆறும்.
பூசணிக்காயை அடிக்கடி உணவில் சேர்த்து வர மலச்சிக்கல் தீரும்.பூசணியின் விதைகளை ப் பொடி செய்து ஒரு தேக்கரண்டி பொடியுடன், சிறிதளவு சர்க்கரை சேர்த்து இரவில் தின்று, மறுநாள் காலை அரை தேக்கரண்டி விளக்கெண்ணெய் அருந்த வயிற்றிலுள்ள நாடாப்புழுக்கள் ஒழிந்துவிடும்.பூசணிக்காய் சதையை அரைத்து புண்கள் மேல், தீப்பட்ட மற்றும் சுடுநீர் பட்ட காயம் மேல் பூசிவர புண்கள் ஆறிவிடும்.
பூசணி விதைகளைத் தூளாக்கி, நீரில் குழைத்து பூச்சி, பூரான் கடித்த இடத்தில் பூசிட வலி, விஷம் இறங்கும்.அடிக்கடி பூசணியை உணவில் சேர்த்து வர உடல் மெலியும். உடல் சோர்வு, களைப்பை நீக்கி சுறுசுறுப்பு ஊட்டும். ரத்தசோகை, சிறுநீர்க் கோளாறுகளை தீர்க்கும். நரம்புகளை வலுவூட்டி உறுதியளிக்கும். சிறுநீரை எளிதில் பிரிக்கும். மூலநோய்க்கு நல்ல மருந்தாகும்.
தொகுப்பு: எஸ். அனந்தகுமார்