‘‘நான் பேசினா இலைகட்சிக் காரங்க ஓடீருவாங்கனு.. ஒரு கட்சிக்காரர் சொன்னாராமே..’’ என்று கேட்டார் பீட்டர் மாமா. ‘‘தாமரையை கூட்டணியில் இருந்து கழற்றிவிட்ட சேலத்துக்காரரு, அடுத்த கட்டமாக புதிய கூட்டணிக்கான ஆயத்தப்பணிகளில் ஈடுப்பட்டிருக்காராம். இதில் அவரும் இலைக்கட்சியின் இரண்டாம் கட்ட தலைகளும் முதல் சாய்சாக செலக்ட் பண்ணி வச்சிருக்கிறது பார்மர் சின்னக்கட்சியாம். இதுக்கான தூது விடப்பட்டு, பேச்சுவார்த்தைகள் நடந்ததாகவும் நியூஸ் லீக் ஆச்சு. இப்படிப்பட்ட நிலையில் சேலத்துக்காரரின் சொந்த ஊருக்கு பார்மர் சின்ன கட்சியின் ஹெட் வந்தாராம். அப்போது இலையோடு கூட்டணி சரிப்பட்டு வராதுன்னு ஒரு குண்டை தூக்கி போட்டிருக்காராம்.
தமிழன் என்ற முறையில் எனக்கு சேலத்துக்காரரை ரொம்ப புடிக்கும். நான் சொன்ன சில கோரிக்கைகளை சேலத்துக்காரரு அதிகாரத்தில் இருந்தப்போ நிறைவேத்தினாரு. ஆனா அந்த கட்சியிலிருக்கும் தமிழர்களை வச்சிக்கிட்டு என் ெகாள்கையை பேச முடியாது. அப்படி நான் பேசினாலும் அவுகளுக்கு புரியாது. நான் பேசும் போதே எல்லாரும் ஓட்டம் பிடிச்சிருவாங்க. அப்புறம் எப்படீங்க கூட்டணி சாத்தியமாகும் என்று ஏகத்துக்கும் பொங்கினாராம். அப்புறம் நாங்க கூட்டணிக்கு யாரையும் தேடிப்போக மாட்டோம். இன்னொரு 5 பர்சென்ட் ஓட்டு எங்களுக்கு சேர்ந்தா அவுகளே கூட்டணிக்கு தேடி வருவாக என்றும் கொளுத்திப் போட்டாராம் பார்மர் சின்னம் கட்சியின் ஹெட்டு…’’ என்றார் விக்கியானந்தா.
‘‘கால்நடை டாக்டர்ஸ் பத்தி புகார் வருதே.. என்னா மேட்டர்..’’ என்று ஆர்வத்தோடு கேட்டார் பீட்டர் மாமா. ‘‘மக்களுக்கு உடல்நிலை பாதிச்சா உடனே சிகிச்சை அளிக்க எப்படி அரசு மருத்துவமனைகள் தயார் நிலையில இருக்குதோ, அதேபோல கால்நடைகளுக்கு பாதிப்பு ஏற்பட்டா சிகிச்சை அளிக்க கால்நடை மருத்துவமனை அனைத்து மாவட்டங்கள்லயும் இருக்குது. அதேபோல கிரிவலம் மாவட்டத்துலயும் இயங்கிவருது. இதுல, அந்த மாவட்டத்தோட ஒரு தாலுகாவான தண்டத்துல தொடங்குற ஊர் இருக்குது. இந்த ஊரை சுற்றி இருக்குற ஊர்களான பெரு என்று தொடங்குற ஊர், சா என்று தொடங்குற ஊர்கள்லயும் இயங்கி வருது. இங்க மாடுகளுக்கு பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சைக்காக விவசாயிகள் வந்தா காலையில வர வேண்டிய டாக்டர்ஸ் வருவதே இல்லையாம். 5 மாடுகள், 10 மாடுகள்னு, மாட்டுப்பண்ணை வெச்சிருக்குறவங்களோட வீட்டுக்கு போய் சிகிச்சை அளிச்சுட்டு பீஸ் வாங்கிட்டு, எல்லா வேலையும் முடிச்சிட்டு மதியத்துக்கு மேல வர்றாங்களாம். அப்படியே சில நேரத்துல வரமுடியலைன்னா, அவங்க உதவியாளர் தான் சிகிச்சை அளிக்குறாராம். இப்படி மருத்துவமனை இருந்தும் இல்லாத நிலையாக இருக்குதேன்னு கால்நடை வெச்சிருக்குற விவசாயிங்க கதை, கதையாக சொல்றாங்க. சம்மந்தப்பட்ட அதிகாரிங்க என்னன்னு விசாரிச்சு நடவடிக்கை எடுக்கணும்னு கோரிக்கை குரல் ஒலிக்குது’’ என்றார் விக்கியானந்தா.
‘‘நெல்லையில் நடந்த விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டத்தில் பொதுப்பணித் துறை அதிகாரியை மாவட்ட கலெக்டர் வறுத்து எடுத்து விட்டாராமே..’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘அந்த மாவட்டத்தில், ராதாபுரம் சிற்றாறு பட்டணம் கால்வாயை தூர் வாருமாறு கோதையாறு வடிநிலக் கோட்டத்திடம் அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்தனராம். இந்த பிரச்னை கடந்த 6 மாதங்களுக்கு முன்பே எதிரொலிக்க, மழைக் காலத்திற்கு முன்பு கால்வாயை தூர் வார கலெக்டர் உத்தரவிட்டாராம். ஆனால் அதிகாரிகள் தயாரித்த மதிப்பீடு செயற்பொறியாளர் அலுவலகத்தில் பல மாதங்களாக தூங்கிக் கொண்டிருக்கிறதாம். அதற்குள் மழைக்காலம் வந்து விட குறை தீர்க்கும் கூட்டத்திற்கு வந்திருந்த உதவி பொறியாளரை கலெக்டர் லெப்ட் ரைட் வாங்கி விட்டாராம். விவசாயிகள் குறை தீர்க்கும் முக்கிய கூட்டத்திற்கு தாமிரபரணி, சிற்றாறு செயற்பொறியாளர்கள் எல்லாம் வந்திருந்தும் கோதையாறு செயற்பொறியாளர் மட்டும் டிமிக்கி கொடுத்து விட இது தொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறு அரசுக்கு அறிக்கை அனுப்பப் போவதாக கலெக்டர் எச்சரித்தாராம். ஒரே பதிலை திரும்பத் திரும்பக் கூறும் இந்த அதிகாரிகளை எங்காவது மாற்றி விடுங்கள் என கலெக்டரிடம் விவசாயிகளும் ஒரு சேர கோரிக்கை வைத்துள்ளனர்’’ என்றார் விக்கியானந்தா.
‘‘முதல்வரின் கேள்விக்கணை களால் திண்டாடிப் போனார்களாமே அதிகாரிகள்..’’ என்று கேட்டார் பீட்டர் மாமா. ‘‘இரு நாட்களுக்கு முன்னர் செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகரில் போலீஸ் அதிகாரிகளின் ஆய்வுக் கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டத்தில் தாம்பரம் மற்றும் ஆவடியில் முதல்வர் அலுவலகத்திற்கு வந்த புகார்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் இருப்பது தெரியவந்துள்ளது. நீதிமன்றம் வாரன்ட் பிறப்பித்து தேடப்பட்டு வரும் குற்றவாளிகளை பிடிக்காமல் இருக்கிறீர்கள், கண்ணகி நகர் போலீஸ் பூத்தில் சிலர் மது அருந்துவதாக புகார்கள் வந்துள்ளன என்று சரமாரியாக கேள்விகளை முதல்வர் கேட்டாராம். புள்ளி விவரங்களுடன் முதல்வர் கேள்விகளை கேட்டதால் அதிகாரிகள் கலக்கத்தில் உள்ளார்களாம். இதனால் முதல்வர் எதிர்பார்க்கும் பணிகளை விரைந்து முடிக்க மற்ற மாவட்ட அதிகாரிகள் எல்லாம் மீட்டிங் முடிந்தவுடன் தீவிரம் காட்டத் தொடங்கி விட்டார்களாம்’’ என்றார் விக்கியானந்தா.