நாகர்கோவில்: நாகர்கோவில் வடசேரி கிருஷ்ணன்கோவில் பகுதியை சேர்ந்தவர் 12ம் வகுப்பு மாணவி. அவர் குமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு தனது தாயாருடன் வந்து ஒரு புகார் மனு அளித்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது: நான், வடசேரி பகுதியில் உள்ள பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறேன். பள்ளிக்கு செல்லும் போதும், முடிந்து வரும் போதும் வடசேரி பள்ளிவிளையை சேர்ந்த வாலிபர் ஒருவர் என்னை பின் தொடர்ந்து வந்தார். அவர் என்னிடம் சிறந்த நண்பர்களாக இருப்போம் என்றார். நானும், அதை நம்பி அவருடன் பழகினேன். இந்தநிலையில் திடீரென ஒரு நாள் நான் வீட்டில் தனியாக இருக்கும் போது வந்த அந்த வாலிபர், என்னை கட்டிலில் தள்ளி அத்துமீற முயன்றார்.
நான் கூச்சலிட்டதால், படுக்கை அறைக்குள் வைத்து கதவை பூட்டி விட்டு, எனது வீட்டில் இருந்த 10 பவுன் நகைகளை எடுத்து விட்டு தப்பினார். இப்போது நகைகளை தராமல் ஏமாற்றி வருகிறார். விசாரணையில் அவர் ஏற்கனவே வேறொரு பெண்ணை திருமணம் செய்து, கர்ப்பிணியாக்கி இருக்கிறார். வளைகாப்பும் நடந்துள்ளது. இது தொடர்பான போட்டோ ஆதாரங்களும் உள்ளன. அந்த பெண்ணுக்கு 16 வயது தான் இருக்கும். எனவே இது குறித்து விசாரணை நடத்த வேண்டும். என்னுடன் நட்பாக பழகுவது போல் நடித்து, வீடு புகுந்து நகைகளை திருடி சென்ற வாலிபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறி உள்ளார். இந்த புகார் மனு தொடர்பாக வடசேரி போலீசார் விசாரித்து வருகின்றனர்.