டாக்கா: வங்கதேச இடைக்கால அரசு தலைவர், அமெரிக்காவுக்கு வங்கதேசத்தை தாரைவார்த்துவிட்டார் என்று முன்னாள் பிரதமர் ஷேக் ஹசினா குற்றம்சாட்டி உள்ளார். இந்தியாவில் தஞ்சமடைந்து இருக்கும் வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசினா, தனது அவாமி லீக் கட்சியின் அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில் வெளியிடப்பட்ட செய்தியில், ‘வங்கதேச இடைக்கால அரசின் தலைவரான முகமது யூனுஸ், பல்வேறு தீவிரவாத குழுக்களின் ஆதரவுடன் எனது தலைமையிலான ஆட்சியைக் கைப்பற்றினார். அவரது இடைக்கால ஆட்சியில் தீவிரவாதிகளுக்கு ஆதரவான முடிவுகள் எடுக்கப்பட்டன. நாட்டில் இருக்கும் சிறைகள் காலியாக்கப்பட்டன.
எங்களது அவாமி லீக் கட்சியை தடை விதித்தது, வங்கதேச அரசியலமைப்பிற்கு விரோதமானது. இடைக்கால தலைவரான யூனுஸுக்கு மக்களின் தீர்ப்பின் மீதோ, அரசியலமைப்பின் மீதோ நம்பிக்கையில்லை. வங்கதேச அரசின் இடைக்கால ஆலோசகராக இருக்கும் அவர், அந்த பதவியில் இருப்பதற்கான எந்த சட்டப்பூர்வ அடிப்படையும் இல்லை. அவர் வங்கதேசத்தை அமெரிக்காவிற்கு விற்றுவிட்டார். எனது தந்தை ஷேக் முஜிபுர் ரஹ்மான், அமெரிக்காவின் கோரிக்கையான செயின்ட் மார்ட்டின் தீவை வழங்க மறுத்ததால் உயிரிழந்தார். ஆனால் முகமது யூனுஸ் நாட்டின் இறையாண்மையை அமெரிக்காவிற்கு தாரைவார்த்துவிட்டார்’ எனவும் தெரிவித்தார்.
முன்னாள் பிரதமர் ஹசினாவின் இந்த குற்றச்சாட்டுகள், முகமது யூனுஸ் மற்றும் ராணுவத் தலைவர் வாக்கர்-உஸ்-ஜமான் இடையே சமீபத்தில் நடந்த மோதலின் வெளிப்பாடாக உள்ளது. வங்கதேசத்தில் பொதுத் தேர்தல்கள் வரும் டிசம்பரில் நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையால் ஏற்பட்ட பதற்றங்களுக்கு மத்தியில் இந்த மோதல்கள் வந்துள்ளன. ஹசினாவின் தற்போதைய பதிவு, இந்தியாவுடனான உறவுகளில் ஏற்பட்டுள்ள பதற்றங்களுக்கு மத்தியில் வங்கதேச அரசியல் மற்றும் பாதுகாப்பு நிலைமைகளை மேலும் சிக்கலாக்கியுள்ளது.