சேலம்: சேலம் புதிய பஸ் நிலைய பொருட்காட்சி திடலில், போதையில் படுத்திருந்த திருடன் மீது கார் ஏறியதில் உயிரிழந்தார். சேலம் புதிய பஸ் நிலையத்தில், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நேற்று முன்தினம் இரவு கூட்டம் அளவுக்கு அதிகமாக காணப்பட்டது. நள்ளிரவு 1 மணி அளவில், பஸ் நிலையத்திற்குள் பஸ் வரும் ரோட்டில், சுமார் 27 வயது வாலிபர் ஒருவர் மதுபோதையில் படுத்திருந்தார். அந்நேரத்தில் ரோந்து வந்த போலீசார், அவரை எழுப்பி அங்குள்ள திண்டு பகுதியில் படுக்குமாறு கூறினர். மிதமிஞ்சிய போதையில் இருந்த அவர், திண்டில் ஏறி படுத்து கொண்டார். நேற்று காலை, அருகில் உள்ள பொருட்காட்சி நடக்கும் இடத்தில், வாலிபர் ஒருவர் தலைநசுங்கிய நிலையில் இறந்து கிடப்பதாக பள்ளப்பட்டி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அங்கு சென்று பார்த்தபோது, அது இரவு ரோட்டில் படுத்து கிடந்தவர் என்பது தெரியவந்தது.
இரவு நேரத்தில் தனியார் பஸ்கள், கால் டாக்சிகள் அங்கு நிறுத்தி வைக்கப்படுகிறது. போதையில் அங்கு படுத்திருந்தபோது கார் ஏறியதில் தலை நசுங்கி இறந்திருக்கலாம் என கூறப்படுகிறது. தொடர்ந்து அந்த நபர் வைத்திருந்த பையை போலீசார் சோதனை செய்தனர். அதில், டிரைவிங் லைசென்ஸ் இருந்தது. அதில் கடலூர் மாவட்டம், சிதம்பரம் சம்பந்தக்காரர் தெருவை சேர்ந்த அர்ஜூனன் மகன் சரவணன்(27) என இருந்தது. விசாரணையில், போலீசார் சோதனை செய்த பை, திருடப்பட்ட பை எனவும், இறந்து போன வாலிபர் சரவணன் இல்லை எனவும் தெரியவந்துள்ளது. எனவே அந்த வாலிபர் யார்? என தொடர்ந்து விசாரணை நடக்கிறது.