இவ்வையகத்திற்கு தம் “ஹயக்ரீவ ஸ்தோத்திரம்” வழி, ஹயக்ரீவரின் கல்யாண குணங்களை சொல்லி தந்தவர் வைணவ உலகின் சிறந்த ஆசார்யரான ஸ்வாமி நிகமாந்த மஹா தேசிகன்தான். அவர் அருளிய ஹயக்ரீவர் ஸ்தோத்திரம் போன்றே, ஹயக்ரீவ பெருமாள் அவரிடம் வந்து சேர்ந்த விதமும், ஹயக்ரீவ பெருமாளை அவர் தம் ஸ்லோகத்தில் கொண்டாடிய விதமும் அதி அற்புதம். தம் ஆசார்யனான ஸ்ரீ அப்புள்ளாரிடமிருந்து தாம் கற்றுக் கொண்ட கருட மந்திரத்தை ஜபிக்க திருவஹீந்த்ரபுரத்திற்கு வந்தார் ஸ்வாமி நிகமாந்த மகாதேசிகன். அங்கே இருந்த ஔஷதகிரி மலையில் அமர்ந்து அந்த கருட மந்திரத்தை தொடர்ந்து ஜபித்து, கருடனின் கடாட்சத்திற்கு பாத்திரமானார், தேசிகன்.
கருடன், தேசிகருக்கு மிக உயர்வான ஹயக்ரீவ மந்திரோபதேசத்தை உபதேசித்தார். ஹயக்ரீவ மந்திரோபதேசத்தை பெற்ற பிறகு, ஹயக்ரீவ உபாசனையில் இறங்கினார் ஸ்வாமி தேசிகன். ஹயக்ரீவ உபாசனை தொடர்ந்து செய்து, ஹயக்ரீவரின் அருளைப் பெற்று, ஹயக்ரீவரின் லாலாம்ருதத்தை பெற்றார், ஸ்வாமி தேசிகன். அந்த லாலாம்ருதத்தை பெற்ற பிறகு, ஸ்வாமியின் திருவாக்கில் வந்த முதல் ஸ்தோத்திரமே “ஹயக்ரீவ ஸ்தோத்திரம்”.
33 ஸ்லோகங்கள் கொண்ட இந்த கிரந்தத்தின் முதல் ஸ்லோகத்தில், ஹயக்ரீவனை “ஜ்ஞானானந்த மயனாக” நாம் சேவிக்க வேண்டும் என்று அருளிய ஸ்வாமி தேசிகன், தம் இரண்டாவது ஸ்லோகத்தில், ஒளிமயமாகத்தோன்றிய ஹயக்ரீவரை சேவித்தார்.
மூன்றாவது ஸ்லோகத்தில், ஹயக்ரீவரின் கனைப்பொலியே வேதத்தின் சாரம் என்று கொண்டாடுகிறார் தேசிகன். நான்காவது ஸ்லோகத்தில், ஹயக்ரீவர் தம் முன் எப்படி தோன்ற வேண்டும் என்று, தான் பிரார்த்தனை செய்ததை தெரிவிக்கிறார் ஸ்வாமி தேசிகன். இந்த நான்காவது ஸ்லோகத்தை வெகு சிறப்பான ஒரு ஸ்லோகமாக சொல்வார்கள், பெரியோர்கள். ஔஷதகிரியில் நடந்த மிக வியப்பளிக்கும் வரலாற்றை இவ்வுலகமே அறிய வேண்டும். அறிந்து அறிவின் கடவுளான ஹயக்ரீவனை கொண்டாட வேண்டும் என்பதற்காவே செய்த ஸ்லோகம், நான்காவது ஸ்லோகம் என்பர் பூர்வர்.
“வாகீஷாக்யா வாசுதேவஸ்ய மூர்த்தி:” என்று ஹயக்ரீவனை, வாக்குகளின் தலைவனாக, வாகீஷ் என்று பெயரிட்டு முதன் முதலில் இந்த நான்காவது ஸ்லோகத்தின் வழியாக தான் அழைக்கிறார் ஸ்வாமி தேசிகன். எம்பெருமானே வாசுதேவ மூர்த்தியான நீ எப்படி அடியேன் முன் தோன்ற வேண்டும் தெரியுமா? குதிரை முகத்தோடு கூடியவனாக நீர் தோன்ற வேண்டும். வேதங்களை தன் வாக்கினால் சொல்பவராக இருக்க வேண்டும்” என்றே பிரார்த்திக்கும் ஸ்வாமி தேசிகன், தான் பிரார்த்தித்துக் கொண்ட படியே வந்தார் ஹயக்ரீவ பெருமாள் தம் முன் தோன்றினார் என்பதையும் தன் தியான ஸ்லோகமான 32வது ஸ்லோகத்தில் நமக்குக் காட்டித் தருகிறார்.
நளினி சம்பத்குமார்