திருவனந்தபுரம்: கோவையிலிருந்து காரில் மறைத்து கடத்தப்பட்ட ரூ.2 கோடி ஹவாலா பணத்தை போலீசார் கைப்பற்றினர். இது தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர். தமிழ்நாட்டில் இருந்து கேரளாவுக்கு ஒரு காரில் போதைப் பொருள் கடத்தப்படுவதாக எர்ணாகுளம் எஸ்பி விவேக் குமாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கமாலி பகுதியில் ரகசிய கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை போலீசார் நிறுத்த முயன்றனர். ஆனால் அந்தக் கார் நிற்காமல் வேகமாக சென்றது. இதையடுத்து போலீசார் காரை விரட்டினர். பல கிலோமீட்டர் பின் தொடர்ந்து சென்று போலீசார் காரை மடக்கி சோதனை நடத்தினர். அப்போது காருக்குள் ரகசிய அறை இருந்தது தெரியவந்தது. அதில் போதைப் பொருள் தான் இருக்கும் என்று கருதிய நிலையில் அதற்கு பதிலாக ரூ.2 கோடி பணம் பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
விசாரணையில் அது ஹவாலா பணம் என்றும், கோவையில் இருந்து கோட்டயத்திற்கு கடத்தி செல்லப்படுவதும் தெரியவந்தது. காரில் இருந்த கோட்டயத்தைச் சேர்ந்த அமல் மோகன் மற்றும் அகில் கே. சஜீவ் ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். ஹவாலா பணத்தை கொடுத்து விட்டது யார்? யாருக்கு கொண்டு செல்லப்படுகிறது என்பது குறித்து போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.