திண்டுக்கல்: இளம்பெண்ணிடம் உல்லாசமாக இருந்ததற்கு கூடுதல் பணம் தராததால் திண்டுக்கல் நிதி நிறுவன அதிபரை அடித்து கொலை செய்ததாக, கைதான தம்பதி உள்பட 3 பேர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளனர்.
திண்டுக்கல் வஉசி காலனியை சேர்ந்தவர் குபேந்திரன் (58). தனியார் நிதி நிறுவன அதிபர். இவர் கடந்த 18ம் தேதி பழநி பைபாஸ் ரோட்டில் தரைப்பாலம் அருகே அட்டை பெட்டியில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்தார். திண்டுக்கல் தாலுகா போலீசார் வழக்குப்பதிந்து, குபேந்திரனின் செல்போன் அழைப்புகள், அப்பகுதி சிசிடிவி பதிவுகளை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.இதில் 2 பெண்கள் உள்பட 3 பேர் டூவீலரில் தரைப்பாலம் அருகே வந்து கயிற்றால் கட்டப்பட்ட அட்டை பெட்டியை வீசி செல்வதும், அந்த டூவீலர் திண்டுக்கல் என்எஸ்.நகர் முனியப்பன் கோயில் தெருவை சேர்ந்த கண்ணன் (54) என்பவருக்கு சொந்தமானது என்பதும் தெரியவந்தது.
இதையடுத்து அவரை பிடித்து தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இதில், தனது மனைவி சாந்தி (59) மற்றும் திருப்பூர் மாவட்டம், அவிநாசி மடத்துப்பாளையம் பகுதியை சேர்ந்த 26 வயது பெண் ஆகியோருடன் சேர்ந்து குபேந்திரனை அடித்து கொன்றதை கண்ணன் ஒப்பு கொண்டார். இதையடுத்து போலீசார் தம்பதி உள்பட 3 பேரையும் நேற்று முன்தினம் கைது செய்தனர். அவர்கள் பயன்படுத்திய டூவீலரையும் பறிமுதல் செய்தனர். கைதான தம்பதி போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில், ‘‘நாங்கள் வீட்டில் இளம்பெண்களை வைத்து பாலியல் தொழில் செய்து வந்தோம். குபேந்திரன் அடிக்கடி எங்கள் வீட்டுக்கு வந்து இளம்பெண்களிடம் உல்லாசம் அனுபவித்து செல்வார்.
அவருக்காக கோவை, திருப்பூரில் இருந்து இளம்பெண்களை வரவழைப்போம். கடந்த 18ம் தேதி திருப்பூரில் இருந்து வரவழைக்கப்பட்ட 26 வயது பெண்ணுடன் குபேந்திரன் உல்லாசம் அனுபவித்தார். அவரிடம் பேசிய தொகையை விட சற்று கூடுதலாக பணம் கேட்டோம். அதற்கு அவர் மறுப்பு தெரிவிக்கவே, தகராறு ஏற்பட்டது. தகராறு முற்றி, அவரை அடித்து கீழே தள்ளினோம். எதிர்பாராதவிதமாக தலையில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டார். அதிர்ச்சியடைந்த நாங்கள், அவருடைய உடலை கட்டி அட்டை பெட்டியில் அடைத்து தரைப்பாலம் அருகே வீசி விட்டு வெளியூர் தப்பி செல்ல முடிவு செய்தோம். அதற்குள் போலீசார் எங்களை பிடித்து விட்டனர்’’ என்று தெரிவித்தனர்.