புதுடெல்லி: வெறுப்பு அரசியலை ஆயுதமாக பயன்படுத்தி அதிகாரத்தை கைப்பற்றியவர்கள் என்று பாஜகவை ராகுல்காந்தி கடுமையாக சாடியுள்ளார். காங்கிரஸ் மூத்த தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி வெளியிட்ட பதிவில், ‘வெறுப்பு அரசியலை ஆயுதமாகப் பயன்படுத்தி அதிகாரத்தை கைப்பற்றியவர்கள், நாடு முழுவதும் மக்களை அச்சத்தின் பிடியில் வைத்து ஆட்சியை நடத்தி வருகின்றனர். ஒரு அமைப்பாக செயல்பட்டு வெறுப்பை பரப்பும் அவர்கள், வெளிப்படையாக வன்முறையைப் பரப்புகின்றனர். சட்டத்தின் ஆட்சிக்கே சவால் விடுக்கும் வகையில் செயல்படுகின்றனர்.
பாஜக அரசிடம் இருந்து இந்த அயோக்கியர்களுக்கு சுதந்திரம் கிடைத்துள்ளது. அதனால்தான் அவர்களுக்கு இதுபோன்ற துணிச்சல் கிடைத்துள்ளது. சிறுபான்மையினர், குறிப்பாக முஸ்லிம்கள் மீதான தொடர்ச்சியான தாக்குதல்கள் தொடர்வதையும், அரசு இயந்திரம் பார்வையாளராக மவுனம் சாதித்தும் வருகிறது. இதுபோன்ற கட்டுக்கடங்காத செயல்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்ட வேண்டும். வகுப்புவாதம் மற்றும் மக்களின் உரிமைகள் மீதான எந்தவொரு தாக்குதலும், அரசியலமைப்பின் மீதான தாக்குதலாகும்; அதனை பொறுத்துக்கொள்ள மாட்டோம்.
பாஜக எவ்வளவு முயற்சி செய்தாலும், வெறுப்புக்கு எதிராக இந்தியாவை ஒன்றிணைக்கும் வரலாற்றுப் போரில் வெற்றி பெறுவோம்’ என்று பதிவிட்டுள்ளார். முன்னதாக மகாராஷ்டிராவில் துலே எக்ஸ்பிரஸ் ரயிலில் மாட்டிறைச்சி கொண்டு சென்றதாக கூறி முதியவர் ஒருவர் தாக்கப்பட்டார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதேபோல் அரியானாவில் கும்பல் படுகொலை சம்பவம் நடந்தது. மேற்கண்ட சம்பவங்களை குறிப்பிடும் வகையில், ஒன்றிய அரசுக்கு எதிராக ராகுல்காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.