Wednesday, June 25, 2025
Home செய்திகள்Showinpage வெறுப்பு அரசியலை விரட்டியடித்து திராவிட மாடல் அரசை மீண்டும் ஆட்சியில் அமர்த்திட ஒன்றுபட்டு நிற்போம்: கி.வீரமணி

வெறுப்பு அரசியலை விரட்டியடித்து திராவிட மாடல் அரசை மீண்டும் ஆட்சியில் அமர்த்திட ஒன்றுபட்டு நிற்போம்: கி.வீரமணி

by Lavanya

வெறுப்பு அரசியலை விரட்டியடித்து திராவிட மாடல் அரசை மீண்டும் ஆட்சியில் அமர்த்திட ஒன்றுபட்டு நிற்போம் என திராவிட கழக தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆர்.எஸ்.எஸ். என்பது ஆரிய கலாச்சாரமான, ஜாதி, வருண தர்ம, மனுவாத, மதவாதத்தைப் பரப்புவதோடு, சமஸ்கிருத வர்க்கத்தின் பேதத்தை, தங்களது பிடிவாதமான வேத கலாச்சாரம், ஸநாதன தர்மம் என்ற பெயராலும் ஆன்மிகப் போர்வையைப் போர்த்திக் கொண்டு, பெரும்பாலானவரது மதம் என்று ஹிந்து மதவெறித்தனத்தைப் பரப்பி, ‘ஒரே மதம் (ஹிந்து மதம்), ஒரே மொழி (சமஸ்கிருதம்), ஒரே கலாச்சாரம் (ஆரிய கலாச்சாரம்)’ என்பதைப் பரப்புவதற்காகவே, நூறாண்டுக்குமுன் தோற்றுவிக்கப்பட்ட ஓர் இயக்கம்.

புனேவில் உள்ள ‘சித்பவன்’ பிரிவு பார்ப்பனர்களே இதற்கு நிறுவன மற்றும் நியமனத் தொடர் தலைவர்களாக இன்றுவரை இருந்து வருகின்றனர். இரகசியமில்லா வெளிப்படைத் தன்மை கொண்ட ஓர் அமைப்பு அல்ல அது!ஆர்.எஸ்.எஸ். என்பது பேசுவது ஒன்று; செய்வது மற்றொன்று என்ற இரட்டை வேடதாரி! வெளியில் பேசுவது ஒன்று, மாற்றாக செய்கையில் மற்றொன்று திரைமறைவில் (Open Agenda, Hidden Agenda) என தனது திட்ட நடைமுறையாகக் கொண்டு, மூன்று முறை தடை செய்யப்பட்ட இயக்கமான பிறகும் கூட, பலவித தந்திரங்களால் இரட்டை வேடத்தினால் ஆட்சியைப் பிடித்து அமர்ந்து, அதன் கொள்கைகளை, திட்டங்களை செயலுரு கொள்ளச் செய்யும் ஒன்று!

சமத்துவத்திற்கும், சமூகநீதிக்கும் எதிரான நிலைப்பாடுதான் அவர்கள் கொள்கை என்றா லும், வெளியில் ஏதோ தாங்கள்தான் அதற்காக ‘நெக்குருகும் நேர்மையாளர்களாக’ தங்களை சித்தரித்துக் கொள்வார்கள்!வெளிப்படையாக அமைப்பின் பெயரில், ‘மதம்’ சார்ந்தது என்ற குறிப்பை மறைத்து, ‘தொண்டு’ முகமூடி அணிந்து காலூன்ற திட்ட மிடும் கைதேர்ந்த ‘நடிப்புச் சுதேசிகள்’ அவர்கள்!

ஆர்.எஸ்.எஸ். ஒரு ‘டிரோஜன் குதிரை’ (‘Trojan Horse’) என்று கூறுவதற்குப் பல சான்றும், நடைமுறைகளும் உண்டு.

திருவிழாக்களை கலவரக் களமாக்கும் யுக்தி!

முதலில் பார்ப்பனர் அமைப்பு என்று தங்களை வெளிப்படையாக அறிவிக்காததுடன், பெரும்பான்மையைக் காட்டி வளைக்க, ஹிந்து மதம் என்பதையே தங்களது பிரச்சார சரக்காக்கி, கால் பதித்து, அதன் வெறிக்கு, பாமர மக்களின் கடவுள், பக்தி, மத பக்தி, கோவில், திருவிழா மோகம் என்பவற்றைத் தங்களது வியூகங்களாக்கி பலமாகக் காலூன்றி, ஆங்காங்கு கிராமங்களில் திருவிழாக்களைப் பயன்படுத்தி, கலவரங்களை உருவாக்குதலே அவ்வமைப்பின் உள்ளார்ந்த அணுகுமுறை.

அண்மையில், மதுரை, திருப்பரங்குன்றத்தில் உள்ள முருகன் கோவிலுக்கு ஏதோ ஆபத்துபோல, இஸ்லாமியச் சிறுபான்மையினருக்கு எதிராக ஆதாரமற்ற அபாண்டக் குற்றச்சாட்டுகளை வைத்து, ஒரு பெரிய கூட்டம் கூட்டி, ஆளும் ‘திராவிட மாடல்’ ஆட்சிக்கு எதிராக வாக்காளர்களைத் திரட்ட பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். செய்த முயற்சி படுதோல்வி அடைந்தது, ‘ரெடிமேட் கூட்டங்கள்‘ என்று தயாராக வைத்திருப்பர், ஹிந்து முன்னணி, ஆர்.எஸ்.எஸ். அமைப்புகள் மதக் கலவரங்களை ஏற்படுத்த முயன்று, அங்கு பெருந்தோல்வி அடைந்தன.

அங்குள்ள மக்கள், ‘‘எங்களுக்குள் ஹிந்து, முஸ்லீம், கிறித்தவர் என்ற பேதமோ, பொருமலோ, பிரிவினையோ இல்லை; சகோதரர்களாக கைகோர்த்து வாழுகிறோம்; இந்த அமைதிப் பூங்காவை அமளிக்காடாக்க ஒருபோதும் இடந்தரோம்’’ என்று அறிவித்தனர் – பாராட்டத்தக்க செய்தி! இப்போது அதையே, திடீர் முருக பக்தர்களாகி, ஒரு முருக பக்தர்கள் மாநாடு கூட்டுகிறார்களாம்! அதற்கு அத்துணைக் கட்சி பக்த கோடிகளும் வரவேண்டுமாம்! இது ஒரு புது ‘‘வித்தை, வியூகம்!’’ என்னே, மத விஷத்தை, பக்தி போதையை மயக்க மருந்தாக்கித் தரும் வேலையில் ஈடு பட்டுள்ளனர்.

ஹிந்துக் கோவில்கள் –ஆர்.எஸ்.எஸ்.சின்கிளைக் கழகங்கள்!

இதன் முழு நோக்கம் என்ன, எது?

வருகிற 2026 ஆம் ஆண்டு நடைபெற விருக்கின்ற சட்டப்பேரவைப் பொதுத் தேர்தலில், மீண்டும் தி.மு.க., அதன் ஒப்பற்ற தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சிக்குப் பதிலாக, பா.ஜ.க. தலைமையிலான ஆட்சியை அமைப்பதுதான்!

இதற்காக ‘அண்ணா’ பெயர் தாங்கிய ஒரு கட்சியை அடமானப் பொருளாக்கியதோடு, மேலும் தங்களது கொள்கையைக் குத்தகை விட்டவர்கள் வரிசையைப் பெருக்க எண்ணி, அதற்கு வழி கிட்டாது, கைபிசைந்து நிற்கின்றனர்!

ஆர்.எஸ்.எஸ்., விஸ்வ ஹிந்து பரிஷத், ஹிந்து முன்னணி போன்றவற்றிற்கு – ஒவ்வொரு ஹிந்து கோவிலையும் தங்களது கிளைக் கழகங்கள்போல எண்ணியும், அதன் திருவிழாக்களையே தங்களது போராட்டக் களங்களாக்கி, தாங்கள் காலூன்றிட திட்டமிட்டு, பக்திப் போதையைப் பரப்பி, மயக்கத்தினை ஏற்படுத்தி, ஜாதிக் கலவரங்களை உருவாக்கி, தமிழ் மண்ணை தங்களது ஆரிய மயமாக்கிடலாம்; இளைஞர்களை ஆர்.எஸ்.எஸ். வசப்படுத்தலாம் என்று வியூகம் வகுக்கின்றன!

எச்சரிக்கை! எச்சரிக்கை!!

‘‘பக்தியினால் வேற்றுமையும், கலவரமும்!

புத்தியினால் மட்டுமே ஒற்றுமையும், அமைதியும்!’’

தமிழ்நாட்டு வாக்காளப் பெருமக்களே,

மானுடத்தை நேசிக்கும் மகத்தான பெரு மக்களே!,

வெறுப்பு அரசியலை விரட்டியடிப்போம்!

வெறுப்பு அரசியலை விரட்டியடித்து – ‘அனை வரும் உறவினர்’ என்ற மானுடத் தத்துவத் தாலாட்டுத் தொட்டில் இத்தமிழ்நாடு என்பதை உலகுக்கு அறிவிக்க,

கடவுள் பக்தியையும், ஜாதி வெறி, மதவெறி, பதவி வெறியையும் தமிழ்நாட்டு மண்ணிலிருந்து விரட்டியடிக்க ஆயத்தமாவோம்!

இடையில் சில மாதங்களே!

ஏமாந்தால், இதுவரை பெற்ற வெற்றிகளையும், பல தலைமுறைகள் மான உரிமை வாழ்வை இழக்கவேண்டிய இழிநிலையும் ஏற்படும்!

மக்களைப் பிரித்ததுபோன்று, (முருகன் கடவுள்) கடவுள்களுக்கு காவிச் சாயம் பூசி, கையில் உள்ள ‘ஓட்டைப்’ பறிக்க வருகிறார்கள், எச்சரிக்கை! எச்சரிக்கை!! இவ்வாறு தெரிவித்தார்.

 

You may also like

Leave a Comment

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi