துபாய்: 9வது சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் துபாயில் நேற்று நடந்த 2வது லீக் போட்டியில் ஏ பிரிவில் இந்தியா-வங்கதேசம் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த வங்கதேசம் ஒரு கட்டத்தில் 35 ரன்னுக்கு 5 விக்கெட் இழந்த நிலையில், டவ்ஹித் ஹிர்தாய்-ஜாக்கர் அலியின் சிறந்த பார்ட்னர் ஷிப்பால் (154 ரன்) மீண்டு 49.4 ஓவரில் 228 ரன் எடுத்தது. ஹிர்தாய் 100, ஜாக்கர் அலி 68 ரன் எடுத்தனர். இந்திய பவுலிங்கில், முகமது ஷமி 5, ஹர்சித் ரானா 3 விக்கெட் வீழ்த்தினர். பின்னர் களம் இறங்கிய இந்திய அணியில் ரோகித்சர்மா 41, கோஹ்லி 22, ஸ்ரேயாஸ் 15 ரன்னில் அவுட்டாக, சுப்மன்கில் நாட்அவுட்டாக 101, கே.எல்.ராகுல் 41 ரன் விளாசினர். இதனால் 46.3 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 231 ரன் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
கில் ஆட்டநாயகன் விருது பெற்றார். வெற்றிக்கு பின் இந்திய அணி கேப்டன் ரோகித்சர்மா கூறியதாவது: இன்றைய ஆட்டத்தில் நாங்கள் பலவிதமான எமோஷன்களில் இருந்தோம். இதுபோன்ற சூழ்நிலையை எதிர்கொள்ள எப்போதும் தயாராக இருக்க வேண்டும். அணியில் பல அனுபவசாலிகள் உள்ளனர். கேஎல் ராகுல், கில் ஆகியோர் கடைசி கட்டத்தில் நிதானமாக விளையாடி கரை சேர்த்தனர். ஒரு போட்டி தான் நடந்திருக்கிறது. இதனால் ஆடுகளம் எவ்வாறு இருக்கும் என்பதை கணிக்க முடியாது. ஆடுகளத்தில் புற்கள் அதிக அளவு இல்லாததால், போட்டி செல்ல செல்ல பவுலிங்கிற்கு சாதகமாக மாறும் என தெரியும். இதனால்தான் பவர் பிளேவில் அதிரடியாக ஆட முயற்சி செய்தோம். ஷமியின் வருகை மகிழ்ச்சியை கொடுத்திருக்கிறது.
உலகத்தரம் வாய்ந்த வீரராக அவர் விளங்குகிறார். அவரை போல பவுலர்கள் எங்களுக்கு நிறைய தேவை. கில், கடந்த சில காலமாக சிறப்பாக பேட்டிங் செய்து வருகிறார். இதனால் அவரின் ஆட்டம் குறித்து எனக்கு எதுவும் ஆச்சரியம் இல்லை. நான் கேட்சை மிஸ் செய்ததால் அக்சர் பட்டேலுக்கு ஹாட்ரிக் சாதனை போனது. இதனால் அவரை நாளை டின்னருக்கு அழைத்து சென்று மன்னிப்பு கேட்க போகிறேன். அந்த கேட்சை நான் கண்டிப்பாக பிடித்து இருக்க வேண்டும். பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் எப்படி ஆடுகளம் இருக்கும் என்று எனக்குத் தெரியாது. பொறுத்திருந்து பார்ப்போம்.இவ்வாறு அவர் கூறினார். இந்திய அணி அடுத்ததாக நாளை மறுநாள் பாகிஸ்தானுடன் மோத உள்ளது.
திருப்திகரமான இன்னிங்சில் ஒன்று
ஆட்டநாயகன் கில் கூறுகையில், “நான் ஆடிய மிகவும் திருப்திகரமான இன்னிங்ஸ்களில் இதுவும் ஒன்று. ஐசிசி தொடரில் நான் அடித்த முதல் சதம் இது. ஆடுகளம் தோய்வாக இருந்ததால் அடித்து ஆட பந்து வரவில்லை. எனவே கொஞ்சம் இறங்கி வந்து விளையாடினேன். சுழற்பந்து வீச்சிலும் பேட் செய்ய கடினமாக இருந்தது. இதனால் பேக் புட்டில் விளையாடுவதில் கவனம் செலுத்தினோம். ஒரு கட்டத்தில் எங்கள் மீது கடும் நெருக்கடி இருந்தது. ஆனால் ட்ரெஸ்ஸிங் ரூமில் இருந்து ஏதேனும் ஒரு பேட்ஸ்மேன் கடைசி வரை களத்தில் நின்று போட்டியை முடிக்க வேண்டும் என சொல்லி அனுப்பினர், அதன்படியே நடந்தோம்’’ என்றார்.
ஹாட்ரிக் போனதால் கோபம் இல்லை
ஹாட்ரிக் வாய்ப்பு பறிபோனது குறித்து அக்சர் படேல், கூறுகையில், ‘‘ரோகித் சர்மாவுக்கு நேராக பந்து செல்ல ஆரம்பித்த உடனே, நான் கொண்டாட தயாராகிவிட்டேன். ஆனால், அந்த கேட்சை அவர் பிடிக்கவில்லை எனத் தெரிந்ததும் அமைதியாகிவிட்டேன். இது அனைத்து வீரர்களுக்கும் நடக்க கூடியதுதான். ஒருசில நேரம், கேட்சை தவறவிடுவது இயல்புதான். இப்படிப்பட்ட சமயத்தில், நான் எப்போதும் அமைதியாகதான் இருப்பேன். இதில், கோபப்பட ஒன்றுமே இல்லையே’’ என்றார்.