புதுடெல்லி: மகாராஷ்டிரா மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல் அறிவிக்கப்படுவதற்கு முன்பாக அதானி குழுமத்திற்கான திட்டங்களுக்கு மகாராஷ்டிரா பாஜ கூட்டணி அரசு அவசரமாக ஒப்புதல் அளிப்பதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது. காங்கிரஸ் பொது செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் பதிவில், அக்டோபர் 15ம் தேதி தேர்தல் ஆணையம் மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தல் தேதியை அறிவித்தது. இதற்கு முந்தையநாள் வரை பாஜ கூட்டணியின் மகாயுதி அரசு மோதானிக்கான திட்டங்களுக்கு அனுமதி பெற்று தரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. மகாயுதி அரசு தனது கடைசி சில நாட்களை அதிகாரத்தில் எப்படி செலவிட்டது என்பதை நினைவு கூர்வோம்.
செப்டம்பர் 15: மகாராஷ்டிராவிற்கு 6600 மெகாவாட் மின்சாரம் வழங்குவதற்கான எரிசக்தி ஒப்பந்தத்தை மோதானி வென்றார். செப்டம்பர் 30: 255ஏக்கர் உப்பள நிலம் மோதானியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
அக்டோபர் 10: மத் என்ற இடத்தில் 140 ஏக்கர் நிலம் மோதானிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 14: தியோனார் குப்பை கிடங்கில் இருந்து 124 ஏக்கர் நிலம் மோதானிக்கு வழங்கப்பட்டுள்ளது. ஆனால் மகாராஷ்டிரா மக்கள் ஏற்கனவே இந்த விளையாட்டுக்களை பார்த்து இருக்கிறார்கள். அவர்கள் காங்கிரஸ் அங்கம் வகிக்கும் மகா விகாஸ் அகாதிக்கு தெளிவான மற்றும் தீர்க்கமான ஆணையை வழங்குவார்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.