டெல்லி: அரியானா சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும் தேதி அக்.1-ல் இருந்து அக்.5-க்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. பிஷ்னோய் சமூக மக்களின் கோரிக்கையை ஏற்று தேர்தல் தேதி மாற்றப்படுவதாகவும், அரியானா, ஜம்மு காஷ்மீர் தேர்தல் வாக்கு எண்ணிக்கை அக்.8-ல் நடைபெறும் எனவும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
செப்டம்பர் 18, 25 மற்றும் அக்டோபர் 1ம் தேதி என 3 கட்டங்களாக ஜம்மு காஷ்மீரில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளதாகவும் அக்டோபர் 1ம் தேதி அரியானாவில் சட்டசபைத் தேர்தல் நடைபெறும் என இந்திய தலைமைத் தேர்தல் ஆணைய ஆணையர் ராஜ்குமார் தெரிவித்திருந்தார். மேலும் 2 மாநிலங்களில் பதிவாகும் வாக்குகள் அக்டோபர் 4ம் தேதி எண்ணப்படும் எனவும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் அரியானா மாநில சட்டசபைத் தேர்தல் அக்டோபர் 1ம் தேதி நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்ட நிலையில் குரு ஜம்பேஸ்வரரின் அசோஜ் அமாவாசை திருவிழாவையொட்டி தேர்தல் அக்டோபர் 5ம் தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
மேலும் அரியானாவிலும், ஜம்மு காஷ்மீரிலும் பதிவாகும் வாக்குகள் அக்டோபர் 4ம் தேதி எண்ணப்படும் என தெரிவித்திருந்த நிலையில் வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 8ம் தேதி என அறிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 1ம் தேதி ஜம்மு காஷ்மீரில் நடைபெறும் சட்டமன்றத் தேர்தல் தேதியில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை.