சண்டிகர்: அரியானா மாடல் அழகி ஷீத்தல் சவுத்திரி(24). ஒரு ஆல்பம் படப்பிடிப்பிற்காக பானிபட்டில் உள்ள அஹார் கிராமத்திற்கு சென்று இருந்தார். கடந்த சனிக்கிழமை இரவு 10:30 மணியளவில், அவரது காதலன் சுனில் அங்கு சென்றார். படப்பிடிப்பு முடிந்ததும் ஷீத்தலை தனது காரில் ஏற்றிக்கொண்டு சென்றார். பின்னர் அவர்கள் மது அருந்தினர். அதன்பின் அவர்களுக்குள் மோதல் ஏற்பட்டது. அதிகாலை 1:30 மணியளவில், ஷீத்தல், பானிபட்டில் உள்ள தனது சகோதரி நேஹாவுக்கு வீடியோ அழைப்பு செய்து, சுனில் தன்னை அடிப்பதாகத் தெரிவித்தார்.
இந்த நிலையில் அரியானா காவல்துறையினர் ஞாயிற்றுக்கிழமை பானிபட்டிற்கு அருகிலுள்ள கால்வாயில் சுனிலின் காரைக் கண்டுபிடித்தனர். ஆனால் ஷீத்தலைக் கண்டுபிடிக்க முடியவில்லை. இதற்கிடையில், காயங்களுடன் மருத்துவமனைக்கு சென்ற சுனில், தனது கார் கால்வாயில் விழுந்துவிட்டதாகக் கூறி அட்மிட் ஆனார். அவரிடம் விசாரித்த போது நான் நீச்சலடித்து தப்பி விட்டேன். ஷீத்தல் தண்ணீரில் மூழ்கி விட்டார் என்று கூறினார். இதையடுத்து ஷீத்தலை தேடும் பணி முடுக்கி விடப்பட்டது.
திங்கட்கிழமை சோனிபட் அருகே உள்ள கார்கோடாவில் உள்ள கால்வாயில் இருந்து கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் ஒரு பெண் உடலை போலீசார் மீட்டனர். கை மற்றும் மார்பில் பச்சை குத்தப்பட்டு இருந்ததன் மூலம் அந்த சடலம் ஷீத்தல் என்று அடையாளம் காணப்பட்டது. ஷீத்தலின் உடலில் பல கத்திக்குத்து அடையாளங்களும் இருந்தன. கார் கவிழ்ந்து கிடந்த பகுதியில் இருந்து 80 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கார்கோடா பகுதியில் சடலம் மீட்கப்பட்டது.
இதையடுத்து போலீசாரின் சந்தேகம் சுனில் மீது திரும்பியது. உரிய விசாரணைக்கு பிறகு மாடல் அழகியை கொன்றது நான் தான் என அவர் ஒப்புக்கொண்டார். சுனில் ஓட்டலில் 6 ஆண்டுகளுக்கு முன்பு ஷீத்தல் வேலை செய்து வந்தார். அப்ேபாது முதல் இருவரும் நெருக்கமாக இருந்து வந்துள்ளனர். ஷீத்தலுக்கு திருமணமாகி 5 மாத குழந்தை உள்ளது. கணவரை பிரிந்து வாழ்ந்து வந்தார். இந்த நிலையில் சுனிலும் திருமணம் செய்து, அவருக்கும் 2 குழந்தைகள் உள்ளனர்.
ஆனால் முதல் திருமணத்தை மறைத்து, தன்னை திருமணம் செய்யும்படி ஷீத்தலை வற்புறுத்தி உள்ளார். ஆனால் சுனிலுக்கு ஏற்கனவே திருமணம் நடந்து இருப்பதை அறிந்ததும் இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. கடந்த சனிக்கிழமை திருமணம் தொடர்பாக ஏற்பட்ட மோதலில் ஷீத்தலை சரமாரியாக குத்திக்கொன்று, கழுத்தை அறுத்து கால்வாயில் வீசியதை சுனில் ஒப்புக்கொண்டார். இதையடுத்து போலீசார் சுனிலை கைது செய்தனர்.