அங்கக வேளாண்மை குறித்து தற்போது அதிகளவில் விழிப்புணர்வு ஏற்பட்டு வருகிறது. இதை மெய்ப்பிக்கும் வகையில் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் நடத்தப்படும் விதைத்திருவிழா, இயற்கை உணவுத்திருவிழா உள்ளிட்ட விழாக்களுக்கு பொதுமக்களின் ஆதரவு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இந்த வகையில் கடலூர் மாவட்டம் பெண்ணாடம் அருகே உள்ள முருகன்குடி என்ற கிராமத்தில் செந்தமிழ் வேளாண் நடுவம் என்ற அமைப்பு சார்பில் நடத்தப்பட்ட 9ம் ஆண்டு அறுவடைத் திருவிழாவை விவசாயிகள் மட்டுமின்றி பொதுமக்களும் அதிகளவில் கலந்துகொண்டு சிறப்பித்து இருக்கிறார்கள்.
இந்த விழா குறித்த சில துளிகள்:
*தமிழர்களுக்கு பெருமை தருகிற, உலகப் பொதுமறை எனப் போற்றப்படுகிற திருக்குறளைப் பாடி நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து புதிய தமிழர் மரபு வேளாண் நடுவன் குழுவினரின் குழந்தைகள் கலந்துகொண்ட சிலம்ப விளையாட்டு அனைவரையும் கவர்ந்தது.
*இயற்கை வேளாண் அறிஞர் நம்மாழ்வார், இயற்கை ஆர்வலர் கரும்பு கண்ணதாசன், தற்சார்பு வாழ்வியலை வலியுறுத்தியதோடு, பல இளைஞர்களை அந்தப் பாதையில் அழைத்துச் சென்ற இன்பவடிவி குழந்தைவேலனார் ஆகியோரின் உருவப்படங்களுக்கு மாலை அணிவித்து மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.
*கடந்த ஆண்டு அறுவடைத் விழாவில் கலந்து கொண்டு தென்னை விதைத்த குழந்தைகளுக்கு ஹீலர் பாஸ்கர், காரைக்கால் பாஸ்கர் ஆகியோர் தென்னங்கன்றுகள் வழங்கினர். குழந்தைகளுக்கான மரபு விளையாட்டுகளின் முக்கியத்துவம் பற்றி கருத்துரை நிகழ்த்தப்பட்டதோடு, பல்லாங்குழி, ஏழாங்கல், ஆடு புலி ஆட்டம் உள்ளிட்ட மரபு விளையாட்டுகள் குழந்தைகளுக்காக நிகழ்த்தப்பட்டது. நிகழ்ச்சியில் கலந்துகொண்ட குழந்தைகளும் இந்த விளையாட்டுகளை ஆர்வத்தோடு விளையாடினர்.
*குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு இளவட்டக்கல் தூக்குதல், பலாப்பழம் உண்ணும் போட்டிகள் நடத்தப்பட்டது.
*விழாவில் முத்தாய்ப்பாக தஞ்சாவூர் வேளாண் கல்லூரி மாணவர்கள் முருகன்குடி கிராமத்தின் மாதிரி வரைபடத்தை வரைந்து, அங்கு நடைபெறும் வேளாண்மைத் தொழில், வணிகம், பொது நிறுவனங்கள், நூலகங்கள், பள்ளிக்கூடம், கோயில்கள் உள்ளிட்டவற்றை தத்ரூபமாக காட்சிப்படுத்தி அசத்தினர். விழாவுக்கான ஏற்பாடுகளை அமைப்பின் நிர்வாகிகள் தங்க.பன்னீர்செல்வம், கனகசபை, முருகன்குடி முருகன் உள்ளிட்டோர் நேர்த்தியாக செய்திருந்தனர்.