புதுடெல்லி; இந்தியாவில் தீங்கு விளைவிக்கும் இரசாயனங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகளைத் தடை செய்வது குறித்து ஒன்றிய அரசுக்கு உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி எழுப்பி உள்ளது. தீங்கு விளைவிக்கும் பூச்சிக்கொல்லிகளால் விவசாயிகள், பண்ணை தொழிலாளர்கள், பண்ணைகள் அருகில் வசிக்கும் பொதுமக்களுக்கு கடுமையான உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்துவதாகக் கூறி அவற்றைத் தடை செய்யக் கோரி ‘வனசக்தி’ என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் தாக்கல் செய்த பொதுநல வழக்குகளை உச்ச நீதிமன்றம் விசாரித்தது. இந்த மனு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட், நீதிபதிகள் பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஒன்றிய அரசுக்கு நீதிபதிகள் சரமாரி கேள்விகள் எழுப்பினர். அவர்கள் கூறியதாவது:
2பூச்சிக்கொல்லி மருந்துகளை தடை செய்ய ஏன் இத்தனை கமிட்டிகளை அமைக்க வேண்டும்? குரானா கமிட்டி 27க்கு தடை விதித்ததன் அடிப்படை என்ன? பிறகு ஏன் ராஜேந்திரன் கமிட்டி 3 பூச்சிகொல்லி மருந்துகளுக்கு மட்டும் தடை விதித்தது. ராஜேந்திரன் கமிட்டி அமைப்பதற்கான தேவை என்ன என்பதை எங்களுக்குக் காட்டுங்கள். ஒவ்வொரு முறையும் நீங்கள் (ஒன்றிய அரசு) ஒரு குழுவிடமிருந்து பாதகமான அறிக்கையைப் பெறும்போது, நீங்கள் ஒரு புதிய குழுவை உருவாக்குகிறீர்கள். உங்களுக்கு சாதகமான முடிவு கிடைக்கும் வரை குழுக்களை நியமிப்பீர்களா?. இவ்வாறு கேள்வி எழுப்பினர். ஒன்றிய அரசின் சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் விக்ரம்ஜித் பானர்ஜி, விரிவான குறிப்பை தாக்கல் செய்ய அவகாசம் கோரினார். இதையடுத்து மீண்டும் ஆகஸ்ட் 1ம் தேதி விசாரிப்பதாக கூறி உச்ச நீதிமன்றம் வழக்கை ஒத்திவைத்தது.