மும்பை: உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் வங்கதேசத்திற்கு எதிரான போட்டியின் போது கணுக்காலில் காயம் அடைந்த இந்திய அணியின் ஆல்ரவுண்டரும் துணை கேப்டனுமான ஹர்திக் பாண்டியா ஓய்வில் உள்ளார். பெங்களூரில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் (என்சிஏ) நிதின் படேலின் தலைமையிலான மருத்துவக் குழு அவரை கண்காணித்து வருகிறது. ஆனால் காயம் முதலில் உணரப்பட்டதை விட சற்று தீவிரமாக உள்ளது. அவர் சிறிய தசைநார் கிழிவால் பாதிக்கப்பட்டிருப்பது போல் தெரிகிறது. அது குணமடைய குறைந்தது இரண்டு வாரங்கள் ஆகும். அவரது காயம் குணமாகும் முன் என்சிஏ அவரை விடுவிக்காது.
விரைவில் அவரை மீண்டும் ஆடுகளத்தில் பார்ப்போம் என்று நம்புவதாக மருத்துவக் குழு அணி நிர்வாகத்திடம் தெரிவித்துள்ளது. இதனால் மாற்று வீரரை அணியில் சேர்க்க விரும்பவில்லை. பாண்டியாவுக்காக காத்திருக்க அணி நிர்வாகம் தயாராக உள்ளது. அரையிறுதி போட்டிக்கு முன் அவர் அணிக்கு திரும்புவார் என தெரிகிறது. ஒருவேளை அவர் விளையாட முடியாமல் போனால் அக்சர் பட்டேல் சேர்க்கப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது.