நாள் முழுக்க இயந்திரமயமான வாழ்க்கை யில் உழன்று சுழன்றாலும் புத்தாடைகள் அணிந்து பட்டாசுகள் வெடித்து சொந்த ஊரில் தீபாவளி கொண்டாட வேண்டும் என்பது ஒவ்வொரு இதயத்திலும் நிரம்பி நிற்கும் ஆவல். இதற்காக பெருநகரங்களிலும், தலைநகரங்களிலும் வசிக்கும் லட்சக்கணக்கான மக்கள் தீபாவளி நாளில் சொந்த ஊருக்கு பயணம் செய்வதற்கு ஆயத்தமாகின்றனர். இதனால் பஸ், ரயில் நிலையங்கள் என்று காணும் இடங்களில் எல்லாம் அலை அலையாய் மக்கள் தலைகளே தென்படும். இதுபோன்ற பண்டிகைச்சூழலில் பொதுமக்கள் சிரமம் இல்லாமல், பாதுகாப்பான பயணம் செய்வதற்கு அரசு சார்பில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
இந்த வகையில் நடப்பாண்டு தீபாவளியை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் பொதுமக்களின் வசதிக்காக 16,895 சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னையில் இருந்து நவம்பர் 9ம்தேதி முதல் சிறப்பு பஸ்கள் இயக்கம் தொடங்குகிறது. அன்றைய தினம் 3,465 பஸ்களும், 10ம்தேதி 3,395 பஸ்களும், 11ம் தேதி 3,515 பஸ்களும் என்று மொத்தம் 10,975 பஸ்கள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் பிற ஊர்களில் இருந்து செல்வதற்கு 5,920 சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி தமிழகம் முழுவதும் ஒட்டு மொத்தமாக 16,895 பஸ்கள் இயக்கப்படுகிறது. இதேபோல் தீபாவளி முடிந்து மீண்டும் பணிக்கு திரும்பிச் செல்லும் வகையில் நவம்பர் 13ம் தேதி முதல் 15ம்தேதி வரை 13,292 தினசரி பஸ்களுடன் சிறப்பு பஸ்கள் இயக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இது ஒருபுறமிருக்க அரசு பஸ்கள், ரயில்களை கடந்து ஆம்னி பஸ்களில் பயணிக்கவும் அதிகளவில் மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். அதுவும் திருவிழா காலங்களில் ஆம்னி பஸ்களில் பயணம் என்பது ஒரு சவாலாகவே மக்கள் மத்தியில் உள்ளது. வரைமுறை இல்லாத கட்டண உயர்வே இதற்கான முக்கிய காரணம். கடந்த 2 ஆண்டுகளாக இதற்கும் உரிய தீர்வு கண்டு வருகிறது தமிழ்நாடு அரசு.
கடந்தாண்டு தீபாவளி நேரத்தில் ஆம்னி பஸ்களின் உரிமையாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி 25 சதவீதம் கட்டணத்தை குறைத்தது அரசு. நடப்பாண்டும் இதுபோன்ற நடவடிக்கையை அரசு ேமற்கொண்டுள்ளது. இதனால் ஆம்னி பஸ் கட்டணம் 30 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து ஆணையர் தலைமையில், அமைச்சர் முன்னிலையில் நடந்த பேச்சுவார்த்தையில் இந்த கட்டண குறைப்புக்கு ஒப்புக்கொண்டுள்ளனர் ஆம்னி பஸ் உரிமையாளர்கள். குறைக்கப்பட்ட முறையான கட்டண அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படுகிறது. இதை அடிப்படையாக கொண்டு கட்டணம் செலுத்தி மக்கள் பயணிக்கலாம். மேலும் இதில் குறைபாடுகள் இருந்தால் புகார் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுப்பதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
மகிழ்ச்சியும், நிம்மதியும் நிறைந்திருக்கும் மனங்கள் கொண்டாடும் திருவிழாக்களே உண்மையில் முழுமை பெறும். இதற்காக பயணிக்கும் போது சிரமங்கள் எதுவும் இருக்கக்கூடாது. எந்தவழியில் பயணித்தாலும் அது இடைஞ்சல்கள் இல்லாத இனிய பயணமாக இருக்க வேண்டியது மிகவும் முக்கியம். இதை கருத்தில் கொண்டு அரசு சார்பில் அதிகளவில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. அதேநேரத்தில் ஆம்னி பஸ்களில் பயணிப்போரிடமும் இந்த மனநிலை நிறைந்திருக்க வேண்டும் என்று பொறுப்புடன் செயல்பட்டுள்ளது தமிழ்நாடு அரசு. அரசின் இந்த பெரும் பொறுப்பு, அனைத்து தரப்பு மக்களின் இனியதொரு தீபாவளி பயணத்திற்கு வழிவகுக்கும்.