போதைப்பொருள் ஒழிப்பு கருத்தரங்கில் தகவல்
ஊட்டி: மகிழ்ச்சிக்காக மது அருந்தும் 5 பேர்களில் இருவர் குடிநோயாளியாக மாறுவதற்கான வாய்ப்புகள் உண்டு என அறிவியல் கூறுகிறது. ஒரு குடி நோயாளி தன்னைச் சுற்றி உள்ள அனைவரையும் மனநோயாளியாக மாற்றி விடுவார் என போதைப்பொருள் ஒழிப்பு கருத்தரங்கில் தெரிவிக்கப்பட்டது.கோத்தகிரி அருகேகட்டபெட்டு அரசு உயர்நிலைப்பள்ளியில் போதை ஒழிப்பு குறித்த கருத்தரங்கு நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் காமன் தலைமை வகித்தார்.
தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநில கருத்தாளர் ஓய்வு பெற்ற ஆசிரியர் கே.ஜே.ராஜு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கூறியதாவது: சந்தோசமாக இருப்பது, மகிழ்ச்சியை தேடுதல் ஆகியவை மனித குலத்தின் குண நலன்களாக இருந்து வருகிறது.
இதற்கு முக்கிய காரணம் மனித மூளையில் சுரக்கும் டோபோமைன் என்ற வேதிப்பொருளாகும். குழந்தை பருவத்திலேயே பசித்த குழந்தைக்கு தாய் உணவு ஊட்டும் போதே அதன் மூலையில் டோப்போ மெயின் சுரக்க ஆரம்பித்து விடுகிறது. அதனால் தான் மனிதர்கள் எல்லோரும் சந்தோஷமாக இருப்பதை விரும்புகிறார்கள்.
மனித மூளையில் சுரக்கும் டோபோமின் ஒரு குறிப்பிட்ட அளவு வரை இருந்தால் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். ஆனால், மனித மூளை கிடைத்த அந்த குறைந்த அளவு மகிழ்ச்சியோடு நிறைவடையாது. மேலும் மகிழ்ச்சி வேண்டுமென தேடுகிறது. இந்த தேடலில் தான் போதைப் பொருட்கள் நமது வாழ்வில் நுழைகிறது. சில போதைப்பொருட்கள் மருத்துவத்துறையில் வலி நிவாரணையாக கூட பயன்படுத்தப்படுவது உண்டு.
பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் போதைப் பொருள்கள் உற்பத்தி தான் அந்த நாடுகளில் பொருளாதாரத்தை நிர்ணயிக்கிறது.
கஞ்சா, மார்பின் போன்ற பல போதை பொருட்கள் உலகெங்கிலும் பரவலாக பயன்படுத்தப்படுகிறது. சில சமூக விரோதிகள் மாணவர்களையும் இளைஞர்களையும் போதைப்பழக்கத்திற்கு ஆளாக்குவதற்காக முனைந்து செயல்படுகிறார்கள்.
போதைப் பொருட்களை பயன்படுத்தும்போது ஒவ்வொருவருக்கும் காற்றில் மிதப்பது போன்ற லேசான மனநிலையை உருவாக்குகிறது. நீண்ட கால பயன்பாட்டின் விளைவாக போதைப் பொருளுக்கு அடிமையானவர்களின் மூளை, நரம்பு மண்டலம், கல்லீரல் மற்றும் இதயம் உட்பட பல்வேறு உறுப்புகளும் பாதிக்கப்படுகின்றன. அண்மையில் மாணவர்களை போதை பழக்கத்திற்கு அடிமைப்படுத்தும் வகையில் மும்பையில் பிரவுன் சுகர் என்ற கூடிய போதை பொருளை ஐஸ்கிரீமில் கலந்து விற்பனை செய்தது கண்டு பிடிக்கப்பட்டது.
ஒரு முறை அதை பயன்படுத்தியவர்கள் அதற்கே அடிமையாகி விடும் அபாயம் உள்ளது. ஒரு தனிநபரின் போதைப் பழக்கம் அவரை மட்டுமல்ல சமுதாயத்தையும் பல வழிகளில் பாதிக்கிறது. நாட்டில் கரைபுரண்டு ஓடும் மதுவும் ஒரு போதை பொருள் தான். அனைத்து வகையான மதுவிலும் உள்ள அடிப்படை வேதிப்பொருள் எத்தனால் எனப்படும் எத்தில் ஆல்கஹால் என்ற வேதிப்பொருளாகும்.
இந்த எத்தனாலுக்கு எரிக்கும் தன்மை, அரிக்கும் தன்மை, மரத்துப்போகும் தன்மை என்னும் மூன்று பண்புகள் உண்டு. முதன் முதலில் குறைந்த அளவே மது உட்கொண்டாலும் அதிக அளவிலான போதை மயக்கம் உண்டாகும். நாளாக நாளாக அதே அளவு போதை உண்டாக அதிக அளவு மதுவை எடுத்துக் கொள்ள வேண்டி வரும்.
ஏனெனில் உடல் செல்கள் மதுவிற்கு மரத்துப்போவதால் அதிக அளவு மது தேவைப்படுகிறது. மது குடித்தவுடன் போதை உண்டாவதற்கு காரணம் அது எத்தகைய மாற்றத்தையும் அடையாமல் நேரடியாக ரத்த ஓட்டத்தில் கலந்து மூளையின் செல்களை அரிப்பதால் போதை உண்டாகிறது. நாட்பட்ட பழக்கத்தால் மூளையில் உள்ள செல்கள் பாதிப்படுகிறது.
இவ்வாறு பாதிக்கப்பட்ட மூளை செல்கள் மீண்டும் குணப்படுத்த முடியாது. மேலும் அது குடிப்பவரை மட்டுமல்ல அவரது சந்ததியினரும் போதை பழக்கத்திற்கு எளிதில் ஆளாகும் வகையில் மரபணுவில் மாற்றத்தை ஏற்படுத்துகிறது.
சந்தோஷத்திற்காக இன்று மது அருந்தும் ஐந்து பேர்களில் இருவர் குடிநோயாளியாக மாறுவதற்கான வாய்ப்புகள் உண்டு என அறிவியல் கூறுகிறது. ஒருவர் எப்பொழுது மாலை நேரம் வரும் எங்கு போய் குடிக்கலாம் என்ன குடிக்கலாம் என்று மதுவை பற்றி சிந்திக்க ஆரம்பிக்கும் போது அவர் ஒரு குடி நோயாளியாக மாறி விடுகிறார்.
குடிநோயானது இளநிலை, இடைநிலை, கடைநிலை என 3 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. இளநிலையில் ஒருவர் குடிப்பழக்கத்தை பெருமையாக நினைத்துக் கொள்வார். நேற்று இரவு என்ன பேசினோம் என்பதை மறந்துவிடும் பிளாக் அவுட் என்ற நிலை முதல் கட்ட குடிநோயின் இறுதி ஆகும்.
இடைநிலையில் தினமும் மது அருந்தும் பழக்கம் ஒருவருக்கு வந்து விடும். பொருளாதார சிக்கல், வீட்டில் குடும்பத்தில் அமைதியின்மை போன்ற பல சிக்கல்கள் தோன்றும். அந்த சமயத்தில் ஒரு குடி நோயாளி குடிப்பழக்கத்தை விட்டு விடலாம் என்ற நோக்கத்துடன் கோவிலுக்கு செல்லுதல் என்ற பல விரதங்களை மேற்கொள்வார். இருந்தாலும் அது பயன் தராது. மூன்றாவது கடைநிலையில் மது இல்லாமல் ஒருவருக்கு வாழவே முடியாது என்ற நிலை ஏற்படும். சில குடி நோயாளிகள் இந்த நிலையில் கௌரவமாக பிச்சை எடுத்தல், சொந்த வீட்டிலேயே திருடுதல் போன்ற செயல்களை மேற்கொள்வார்கள்.
அவர்களுக்கு தற்கொலை எண்ணமும் தோன்றும். ஆனால் மீண்டும் மீண்டும் மதுவை அருந்தி குடும்ப பொறுப்புக்கள் ஏராளமாக உள்ள சமயத்தில் அவர் இறந்து விடுவார். நரகம் என்று ஒன்று இருந்தால் அது ஒரு குடி நோயாளியின் வீடு தான். ஒரு குடி நோயாளி தன்னைச் சுற்றி உள்ள அனைவரையும் மனநோயாளியாக மாற்றி விடுவார். அகால மரணம் என்பது குடி நோயாளியின் இறுதி கட்டமாகும். உலகப் புகழ்பெற்ற நாடக ஆசிரியர் சேக்ஸ்பியர் விதியே உன் பெயர் என்ன மதுவா என்று கேட்பார்.
ஓர் அறிஞர் கூறுவது போல ஒருவரை அடிமைப்படுத்த வேண்டும் எனில் அவரது மூளையை எடுத்து விட வேண்டும் என்று கூறுவார். நமது மூளையை பாதிக்கும் அனைத்து போதை பொருட்களும் நம்மை புதை குழியில் கொண்டு போய் தள்ளி விடும். மாணவர்கள் போதைப்பொருட்களை பொருத்த வரையில் மிக கவனமாக இருக்க வேண்டும் என்பன போன்ற பல கருத்துக்களை கூறினார்.
பின்னர் மாணவர்கள் போதை பொருள்களை வாழ்நாளில் தொடுவதே இல்லை என்று உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். முன்னதாக ஆசிரியர் விஜயகுமார் அனைவரையும் வரவேற்றார். ஆசிரியர் சுரேஷ் நன்றி கூறினார். உடற்கல்வி ஆசிரியர் டிக்ஸன் நிகழ்ச்சி ஏற்பாடுகளை செய்திருந்தார். மாணவர்களுக்கு போதைப்பொருட்கள் மற்றும் புகைப்பிடித்தலின் தீமை குறித்த துண்டு பிரசுரங்கள் விநியோகம் செய்யப்பட்டது.