புதுடெல்லி: என் மண் என் தேசம் இயக்கத்தின் நிறைவு நாள் நிகழ்ச்சி டெல்லியில் உள்ள கடமைப் பாதையில் இன்று நடக்கிறது. இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டு உரையாற்றுகிறார். கடந்த ஜூலையில் மன் கி பாத் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, நாட்டின் விடுதலைக்காக பாடுபட்ட தியாகிகளுக்கு மரியாதை செலுத்தும் வகையில் என் மண் என் தேசம் என்ற இயக்கம் தொடங்கப்படுவதாக அறிவித்தார். இதையொட்டி அமிர்த கலச யாத்திரை தொடங்கப்பட்டு மண்ணுடன் செடிகள், மரக்கன்றுகளும் கொண்டுவரப்படும். அவற்றைக் கொண்டு டெல்லி, தேசியப் போர் நினைவுச் சின்னத்திற்கு அருகிலேயே அமிர்த பூங்காவனம் உருவாக்கப்படும். இந்த அமிர்த பூங்காவனம், ‘ஒரே பாரதம் உன்னத பாரதம்’ என்ற முழக்கத்தின் மிக உன்னதமான அடையாளமாக இருக்கும் என்று தெரிவித்தார்.அதன்படி, நாட்டின் பல்வேறு கிராமங்களில் இருந்து 7500 கலசங்களில் மண் எடுக்கப்பட்டு, தலைநகர் டெல்லியை வந்தடைந்துள்ளன.
என் மண் என் தேசம் இயக்கத்தின் 2 நாள் நிறைவு நிகழ்ச்சி டெல்லியில் நேற்று தொடங்கியது. இந்த விழாவிற்காக, 36 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 766 மாவட்டங்களை சேர்ந்த 25 ஆயிரம் பேர் ரயில்கள், பேருந்துகள் மூலம் டெல்லி வந்துள்ளனர். இவர்கள் குர்கானில் உள்ள தஞ்சிரி முகாம் மற்றும் டெல்லியில் உள்ள ராதா சோமி சத்சங் பியாஸ் முகாம் ஆகிய முகாம்களில் தங்கியுள்ளனர். கடமைப் பாதையில் இன்று நடக்கும் என் மண் என் தேசம் இயக்கத்தின் நிறைவு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரையாற்றுகிறார். இதில் நாடு முழுவதும் 7000 க்கும் மேற்பட்ட வட்டாரங்களைச் சேர்ந்த அமிர்தக் கலச யாத்ரிகர்கள் கலந்து கொள்வார்கள்.தேசபக்தி பாடல்கள் மற்றும் நடன நிகழ்ச்சிகளும் மாநில வாரியாக நடத்தப்பட உள்ளன.