திண்டிவனம்: தைலாபுரம் கூட்டத்திற்கு வந்த பாமக கவுரவத் தலைவர் ஜி.கே. மணி கூறியதாவது: ஒருவாரத்திற்கு முன்னதாக ராமதாஸ் சென்னை வந்தார். அவரது சின்னப்பெண் கவிதா வீட்டில் அய்யாவும் நானும் பேசினோம். அப்போது காலம் தாழ்த்தாமல் சுமூகமான தீர்வுக்கு வரவேண்டும் என்று கூறினோம். சரி என்று ஒப்புக்கொண்டார். அவரும் அன்றே சுமூகமான தீர்வு வரும் என்று ராமதாஸ் கூறினார். இதற்கிடையில் பாமகவில் ஒருவார நிகழ்வுகளில் மிகவும் கவலை அளிப்பதாகவும் மிகவும் வேதனை அளிக்க கூடிய செய்தியாக தான் வந்தது. நாங்களும் எவ்வளவோ முயற்சி எடுத்து ஒரு நல்ல தீர்வு ஏற்படும் என நினைத்தோம்.
ஆனால் காலம் தாழ்த்தி போய்க்கொண்டே இருக்கிறது. இருவரும் உட்கார்ந்து மனம்விட்டு பேச வேண்டும். அப்படி பேசினால் தான் சுமூகமான தீர்வு ஏற்படும். இது என்னுடைய விருப்பம். எங்கள் இயக்கத்தில் இருக்கும் எல்லோருடைய விருப்பமும் அதுதான். ஏனென்றால் இது தேர்தல் வருகின்ற காலம். அதனால் அனைவரும் ஒற்றுமையாக இருந்து செயல்பட்டு விரைந்து செயல்பட்டு எங்கள் பலத்தை மேலும் பலமாக்கி தேர்தல் வெற்றிக்கு அடித்தளமாக்க வேண்டும். எனக்கு ஒருவார காலமாக உடல்நிலை சரியில்லை. சிகிச்சை பெற்று வருகிறேன். ராமதாஸ் அழைத்ததின் பேரில் இங்கு வந்திருக்கிறேன். அவரிடம் பேசிவிட்டு எதுவாக இருந்தாலும் சொல்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.