இந்தியாவில் 10 ஆண்டுகளாக சில முதலாளித்துவ நிறுவனங்களே ஆட்சி செலுத்தி வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. விலைவாசி உயர்வால் சாமானிய மக்கள் வாழ முடியாத நிலையில், அதானி, அம்பானி உள்ளிட்ட கார்ப்பரேட் குழுமங்களே நாட்டின் பெரும்பான்மையான துறைகளை சுவீகாரம் செய்து வருகிறது. பங்குசந்தையில் குறிப்பிடத்தக்க பங்காற்றும் அதானி நிறுவனம், இந்தியா தவிர வெளிநாடுகளிலும் தன் கிளைகளை பரப்பி வருகிறது. அதிலும் வெளிநாடுகளில் போலி நிறுவனங்களை உருவாக்கி, பல நூறு கோடி ரூபாய்க்கு ரகசிய பரிவர்த்தனைகளையும் செய்து வருவதாக குற்றம் சாட்டப்படுகிறது.
அதானி குழுமம் சார்பில் மொரீஷியசில் இயங்கிடும் போலி நிறுவனம், கோடிக்கணக்கில் மோசடியை நடத்தியிருப்பதாக கடந்தாண்டு அமெரிக்காவின் ஹிண்டன்பர்க் ஆய்வு நிறுவனம் ஆதாரங்களை வெளியிட்டு சர்ச்சையை கிளப்பியது. இந்நிலையில் உச்சநீதிமன்றத்தின் உத்தரவின் பேரில், கடந்த ஒன்றரை ஆண்டுகளாக அதானி குழுமத்தின் போலி நிறுவனங்கள் மற்றும் ரகசிய பரிவர்த்தனை குறித்து பங்குசந்தை ஒழுங்காற்று வாரியம் (செபி) விசாரித்தது.
இதில் அதானி குழுமம் எவ்வித தவறும் இழைக்கவில்லை என்றும், இந்த குற்றச்சாட்டை எழுப்பிய ஹிண்டன்பர்க் நிறுவனம் நேரில் ஆஜராகி விளக்கங்களை அளிக்கவும் செபி சம்மன் அனுப்பியது. இந்நிலையில் ஹிண்டர்பர்க் நிறுவனம் தற்போது அடுத்த சர்ச்சையை கிளப்பியுள்ளது. அதில், ‘கார்ப்பரேட் வரலாற்றில் மிகப்பெரிய மோசடியை அதானி குழுமம் செய்து வருவதை கடந்தாண்டு ஜனவரியில் வெளியிட்டிருந்தோம். ஆனால், இதுகுறித்து செபி தரப்பில் எவ்வித ஆக்கபூர்வமான விசாரணையும் நடத்தப்படவில்லை.
அதற்கு பதிலாக எங்களை நேரில் ஆஜராக கடிதம் அனுப்பியிருந்தனர். அதானி குழுமத்தின் முறைகேடு குறித்து செபி முறையாக விசாரணை நடத்தாததற்கு அக்குழுமத்துடன் செபி தலைவர் மாதபி பூரிபுச்சிற்கு தொடர்பு இருப்பதே காரணமாகும். மொரீஷியஸ் மற்றும் பெர்முடா நாடுகளில் அதானி நிறுவனம் மோசடியில் ஈடுபட்டுள்ள போலி நிறுவனங்களில் மாதபியும், அவரது கணவரும் பங்குகள் வைத்துள்ளனர்’ என ஒரே போடாக புதிய குண்டை வீசியுள்ளது.
ஹிண்டன்பர்க் நிறுவனம் இதற்காக சில ஆதாரங்களையும் வெளியிட்டுள்ளது. கடந்த 2017ம் ஆண்டு செபியின் முழுநேர உறுப்பினராக மாதபி பதவியேற்ற நிலையில், 2018ம் ஆண்டு, அவர்களது பங்கின் மதிப்பு 8.72 லட்சம் அமெரிக்க டாலர்களாக உயர்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது. செபி தலைவரின் பங்குகள் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் உச்சம் எட்டிய கதையை ஹிண்டன்பர்க் நிறுவனம் சில ஆதாரங்களோடு சுட்டிக்காட்டியுள்ளது.
செபி தலைவர் மாதபியின் கணவர் தவால்புச் இதற்கு மறுப்பு தெரிவித்திருப்பதோடு, தங்களது நிதி சார்ந்த விவகாரங்கள் அனைத்தும் வெளிப்படை தன்மையோடு இருப்பதாக கூறியுள்ளார். அமெரிக்க நிறுவனம் வெளியிட்டு வரும் தகவல்களை பார்க்கும்போது, அதானி குழுமமும், அவர்களது தவறுகளை விசாரிக்கும் பங்குசந்தை ஒழுங்காற்று நிறுவனமும் கைகோர்த்துக்கொண்டு பங்குசந்தை முதலீடுகளை வாரி சுருட்ட நினைப்பது தெரிய வருகிறது.
மோடியின் கடந்த 10 ஆண்டு கால ஆட்சியில், திருடனை விசாரிப்பவனும் திருடனாகவே இருக்கிற சம்பவங்கள் பலமுறை நிகழ்ந்துள்ளது. அந்தவகையில் அதானி குழுமத்தின் ேபாலி நிறுவனங்களும், அதற்கான செபியின் மேல்பூச்சு விசாரணைகளும் பங்குசந்தை வரலாற்றில் நிச்சயம் கரும்புள்ளியை ஏற்படுத்தும். இந்த முறைகேடுகளை விசாரிக்க நாடாளுமன்ற கூட்டுக் குழு அமைப்பதே சிறந்தது. நாட்டின் உயர்பதவிகளில் இருக்கும் அதிகாரிகள் கூட கூட்டுச்சதிகளில் பங்கேற்பது கேலிக்கூத்தாகும்.