பொன்னை: காட்பாடி அருகே பெண்ணை கொன்ற ஒற்றை யானை திருப்பதி வன பூங்காவில் ஒப்படைக்கப்பட்டது. ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் குடிபாலா அடுத்த ராமாபுரம் தலித் வாடா பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன்(59), விவசாயி. இவரது மனைவி செல்வி(54). இவர்கள் தங்களுக்கு சொந்தமான நிலத்தில் நேற்று முன்தினம் பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த ஒற்றை காட்டு யானை இருவரையும் மிதித்து கொன்றது. நேற்று அதிகாலை வேலூர் மாவட்டம் காட்பாடி தாலுகா வள்ளிமலை அடுத்த பெரியபோடிநத்தம் பகுதிக்கு ஒற்றை யானை வந்தது. அங்குள்ள விவசாயி பாலகிருஷ்ணன், இவரது மனைவி வசந்தா(57) ஆகியோருக்கு சொந்தமான ஆட்டுக்குட்டியை மிதித்து கொன்றது. இதை பார்த்து கூச்சலிட்ட வசந்தாவையும் யானை தூக்கி வீசியது. இதில் அவர் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து தகவலறிந்த வனச்சரகர் சரவணன் தலைமையிலான வனத்துறையினர் விரைந்து வந்து ஒற்றை யானையை பிடிக்க முயற்சி மேற்கொண்டனர். மேல்பாடி எஸ்ஐ தர்மன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். ஆனால் யானை சித்தூர் மாவட்டம் ராமாபுரம் பகுதியில் உள்ள கரும்புத் தோட்டத்தில் பதுங்கியது தெரியவந்தது. வேலூர் மாவட்ட வன அலுவலர் கலாநிதி, சித்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த வன அலுவலர் சைதன்குமார் ஆகியோர் தலைமையில் 100 பேர் கொண்ட வனக்குழுவினர் ஆந்திராவில் இருந்து வரவழைக்கப்பட்ட ஜெயந்த், விநாயகா ஆகிய 2 கும்கி யானைகள் மூலம், ஒற்றை யானையை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
மாலை 3 மணிக்கும் 4.30 மணிக்கும் 2 மயக்க ஊசி செலுத்தி கும்கிகள் உதவியுடன் பிடிக்கப்பட்டது. பிடிபட்ட யானை சித்தூர் மாவட்டம் பலமனேரி பகுதியில் உள்ள யானைகள் முகாமிற்கு லாரி மூலம் கொண்டு சென்றனர். பின்னர் திருப்பதி வனபூங்காவில் விடப்பட்டது.
இதுகுறித்து வேலூர் மாவட்ட வன அலுவலர் கலாநிதி கூறுகையில், ‘துரதிஷ்டவசமாக நடந்த உயிரிழப்புக்கு இறந்த பெண்ணின் குடும்பதினரிடம் முதல்கட்டமாக ₹50 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் அவரது குடும்பத்திற்கு ₹5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. யானைகள் குடியிருப்பு பகுதிகளில் நுழையாதபடி பாதுகாக்க வனத்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர், என்றார்.