சென்னை: கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், பொங்கல் 2025 திருநாளையொட்டி, தமிழ்நாட்டில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு இலவசமாக வழங்குவதற்கான வேட்டி சேலை முழுவதையும் விசைத்தறி நெசவாளர்களிடம் இருந்து வாங்கி இருப்பதாகவும், இதனால் கைத்தறி நெசவாளர்கள் பெருமளவில் வேலையிழப்பர் எனவும் தெரிவித்துள்ளார்.
கைத்தறி துறையால் செயல்படுத்தப்பட்டு வரும் வேட்டி சேலை வழங்கும் திட்டம், பொங்கல் 2024ன் கீழ் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களை சார்ந்த 12,831 கைத்தறி நெசவாளர்களுக்கு உற்பத்தி திட்டம் வழங்கப்பட்டு 46.43 லட்சம் சேலைகளும், 20.86 லட்சம் வேட்டிகளும் நெசவாளர்களிடம் இருந்து கொள்முதல் செய்து வருவாய் துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
எனவே, இவரது அறிக்கையில் கடந்த ஆண்டு 73 லட்சம் வேட்டிகள், 50 லட்சம் சேலைகள் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது உண்மைக்கு புறம்பானதாகும். மேலும், நடப்பாண்டில் தீபாவளி மற்றும் பொங்கல் பண்டிகைக்கு, முதியோர் ஓய்வூதியம் திட்டத்திற்கென கைத்தறி நெசவாளர்களுக்கு ஆண்டு முழுவதும் தொடர் வேலை வாய்ப்பு வழங்கப்படுகிறது. எனவே அடிப்படை ஆதாரமற்ற உண்மைக்கு புறம்பான செய்திகளை வெளியிடுவது மூத்த அரசியல் தலைவருக்கு அழகல்ல.