சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்ப்புத்தாண்டு மற்றும் பொங்கல் திருநாளையொட்டி தமிழக மக்களுக்கு வழங்குவதற்காக ஒரு கோடியே 77 லட்சத்து 64,476 புடவைகளும், ஒரு கோடியே 77 லட்சத்து 22,995 வேட்டிகளும் உற்பத்தி செய்யப்பட உள்ளன. வழக்கமாக, பொங்கல் திருநாளுக்கு தேவைப்படும் வேட்டி – சேலைகளின் ஒரு பகுதி கைத்தறி நெசவாளர்களிடமிருந்தும், இன்னொரு பகுதி விசைத்தறியாளர்களிடமிருந்தும் கொள்முதல் செய்யப்படும்.
ஆனால், இந்த முறை ஒட்டுமொத்த வேட்டி மற்றும் சேலைகளை விசைத்தறியாளர்களிடமிருந்து வாங்குவதற்கு தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இந்த அறிவிப்பு, கைத்தறி நெசவாளர்களின் நலனுக்காக கொண்டு வரப்பட்ட திட்டத்தின் நோக்கத்தை சிதைப்பதாகும். கடந்த சில ஆண்டுகளாக விசைத்தறிகளிடமிருந்து தான் அதிக வேட்டி – சேலைகள் வாங்கப்பட்டு வருகின்றன என்றாலும் கூட, கைத்தறி நெசவாளர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்படவில்லை. நடப்பாண்டில்தான் முதன் முறையாக கைத்தறியாளர்கள் புறக்கணிக்கட்டுள்ளனர். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.