முதுகில் குத்தப்பட்ட முதல் கத்தியை பிடுங்கிப் பார்த்தேன். ‘நட்பு’ என்ற பெயரில் நாடகமாடியவர்களின் பெயர்கள் எழுதி இருந்தது. இது ஓரளவு நான் யூகித்ததுதான். எனவே, சற்று பொறுத்துக் கொண்டேன்.
இரண்டாம் கத்தியை பிடுங்கிப் பார்த்தேன். ஆபத்திலும் அவசரத்திலும் யாருக்கெல்லாம் விழுந்தடித்து ஓடினேனோ அவர்களின் பெயர்கள் அழகாய் எழுதி இருந்தது. இதனை சற்றும் நான் எதிர்பார்க்கவில்லை. இருப்பினும் இதயத்தின் இரத்த ஓட்டத்தின் வேகத்தைச் சீராக்கி கொண்டேன்.
மூன்றாம் கத்தியை பிடுங்கிப் பார்த்தேன். யாரையெல்லாம் உயரத்திற்கு உயர்த்திப் பார்த்தேனோ அவர்களின் முகத்திரை சிரித்தவண்ணம் அப்படியே என்னை ‘‘நோ ஐயோ, என் இதயமே நொறுங்கிப் போனது.’’
இறைமக்களே, நம் ஒவ்வொருவரையும் குறிவைத்துத் தாக்கும் இந்த மூன்று வகை கத்திகளை குறித்த எச்சரிப்பும் விழிப்புணர்வும் நமக்கு தேவை. சொல்லாலும், செயலாலும் மனதளவில் உணர்ச்சி பூர்வமாக காயப்பட்டவர்கள், தங்கள் மனக் காயங்களுக்கான காரணங்களையும், தான் மனதளவில் காயப்பட்டுள்ளேன் என்பதின் அடையாளங்களையும், அந்த மனக்காயங்களிலிருந்து விடுபடும் வழிமுறைகளையும் அறிய முற்பட வேண்டும். மனக்காயங்களை அறிக்கையிட்டு தேவனுடைய உதவியோடும் இறைவேதம் கூறும் ஆலோசனைகளோடும் அதிலிருந்து வெளியே வந்து ஆறுதலைப் பெற வேண்டியது அவசியமாகும்.
புறக்கணிக்கப்படுதல், பல்வேறு நபர்களால் மனதளவில் ஏமாற்றம், துரோகம், அவமானமடைதல், இழப்புகள், கடும் நஷ்டங்கள், தோல்விகள் மற்றும் கடந்த கால கசப்பான அனுபவங்களால் காயப்பட்ட இறைமக்களே “நான் உனக்கு ஆரோக்கியம் வரப்பண்ணி, உன் காயங்களை ஆற்றுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்” (எரே.30:17). இயேசுவின் மண்ணுலக வாழ்வின்போது அவரோடு உடன் பயணித்த பன்னிரு சீடர்களில் சீமோன் பேதுரு, யூதாஸ் காரியோத்து ஆகிய இரண்டு சீடர்களும் மிக முக்கியமானவர்கள்; கடவுள் இயேசு ஆற்றிய அருஞ்செயல்களை கண்ணாரக் கண்டவர்கள். பஸ்கா விருந்தில் ஒன்றாக பங்குபெற்றவர்கள். நொடிப்பொழுதில் மனம் மாறியது.
தனது ஆதாயத்திற்காக யூதாஸ் காரியோத்தும், தன்னை காப்பாற்றிக்கொள்ள சீமோன் பேதுருவும் இயேசுவுக்கு எதிரான துரோகச் செயலைச் செய்யத் துணிந்ததையும், அந்தத் தருணங்களில் இயேசு கிறிஸ்துவின் அணுகுமுறைகளையும் பாருங்கள். தன்னைக் காட்டிக் கொடுக்கும் தருணத்திலும் யூதாஸை “சிநேகிதனே” என்றழைக்கிறார். மனம் திரும்பி வந்த பேதுருவிடம் தன் சுய இரத்தத்தால் மீட்ட சபையின் திறவுகோலை வழங்கினார்.
இதைத்தான் நாம் பக்குவப்பட்ட மனம் என்கிறோம். சாலையில் பள்ளம் மேடு போன்றதுதான் நம் வாழ்க்கை. இவ்விரண்டையும் ஆரோக்கிய மனநிலையோடும், தெய்வீக எச்சரிக்கையோடும், விழிப்புணர்வோடும் மனதின் உணர்வுகளை வாழ்விலும் தாழ்விலும், சுகத்திலும் துக்கத்திலும் சமநிலையில் கையாள பழகிக் கொள்ள வேண்டும்.
– அருள்முனைவர். பெவிஸ்டன்