சென்னை: சென்னை ஐ.ஐ.டி.யில் மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டிகள் நேற்று நடந்தது.சென்னை ஐ.ஐ.டி.யில் (ஸ்போர்ட்ஸ் பார் ஆல்) ‘‘விளையாட்டு எல்லோருக்குமானது” என்ற தலைப்பில் நேற்று விளையாட்டுப் போட்டிகள் நடந்தது. தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு மாவட்டங்களில் இருந்து மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர். இதுகுறித்து மாற்றுத்திறனாளிகளின் பெற்றோர்கள் கூறியதாவது: மாற்றுத்திறனாளிகள் இயல்பாகவே விளையாட வேண்டும் என்கின்ற நோக்கத்துடன் இருப்பர். எல்லோருக்குமே விளையாட்டின் மீது ஆர்வம் இருக்கும். அவர்களுக்காகவே நிறைய விளையாட்டுகள் உருவாக்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகள் தயக்கமின்றி அவர்களுடைய உணர்வுகளை வெளிப்படுத்த வேண்டும். இந்த சமூகம் மாற்றுத்திறனாளிகளை ஏற்றுக் கொள்ளும் சமூகமாக மாறிக் கொண்டு வருகிறது.
மாற்றுத்திறனாளிகளின் பெற்றோர்கள் உண்மையை ஏற்றுக்கொள்ள வேண்டும். தங்களது குழந்தைகளுக்காக தியாகம் செய்ய தயாராக இருக்க வேண்டும். மாற்றுத்திறனாளி குழந்தைகளை வளர்ப்பதற்காக ஒன்றிய அரசின் பல்வேறு திட்டங்கள் உள்ளன. நாம் நமது குழந்தைக்காக நேரத்தை ஒதுக்க வேண்டும். இவர்கள் தான் வாழ்க்கை என்று ஆன பிறகு நாம் அதைதான் செய்யவேண்டும். மாற்றுத்திறனாளி குழந்தைகளின் கற்றல் திறன் மெதுவாக தான் இருக்கும். மாற்றுத்திறனாளிகள் கூறியதாவது:
எங்களை வேறொரு நபராக பார்க்க வேண்டாம். நாங்களும் சாதாரணமானவர்கள் தான். எங்களுக்கு அனுதாபம் காட்டி எங்களை ஓரம் கட்டாதீர்கள். வீடுகளுக்குள்ளேயே அடைந்து கிடந்த நாங்கள் இதுபோன்ற விளையாட்டு போட்டிகளின் மூலமாக நிறைய நண்பர்களை பெற்றிருக்கிறோம். இன்று ஐஐடியில் நடைபெறும் விளையாட்டுப் போட்டி எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நாங்களும் சமுதாயத்தில் சக மனிதர்களாக வாழத்தான் நினைக்கிறோம். இதுபோன்ற விளையாட்டுப் போட்டிகள் மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.