நெல்லுக்கு அடுத்தபடியாக காய்கறிப் பயிர்கள்தான் பெருமளவில் பயிரிடப்படுகின்றன. குறு விவசாயிகள் முதல் பெரு விவசாயிகள் வரை காய்கறிப் பயிர்களால் பலன் அடைகிறார்கள். குறுவிவசாயிகளுக்கு பலன் தரும் வகையில் சில பிரத்யேக பயிர்கள் இருக்கின்றன. அவற்றில் ஒன்றுதான் காராமணி. சிறிய இடத்தில், அதிக பராமரிப்பு இல்லாமல் அறுவடை எடுக்கிறார்கள். அந்த வகையில் குறைந்த இடத்தில் காராமணி பயிரிட்டு வருமானம் பார்த்து வருகிறார் வேலூர் ஓட்டேரியைச் சேர்ந்த சுவாமிநாதன். இவரது சொந்த ஊர் தற்போது இவர் வசித்து வரும் ஓட்டேரியில் இருந்து 5 கி.மீ தள்ளியுள்ள குளவிமேடு கிராமம். அங்கிருந்து வேலூர் ஓட்டேரிக்கு இடம்பெயர்ந்து இப்போது விவசாயம் செய்கிறார். அவரைச் சந்தித்துப் பேசினோம்.
“ எங்களுக்கு ஒரு காலத்தில் சொந்தமாக விவசாய நிலம் இருந்தது. அங்குதான் விவசாயம் செய்து வந்தோம். பிறகு நிலம் கைவிட்டுப் போனபோது அங்கு என்னால் விவசாயம் செய்ய முடியவில்லை. அதனால், இப்போது குத்தகைக்கு இடம் வாங்கி விவசாயம் செய்து வருகிறேன். இந்த நிலத்தில் பல வகையான காய்கறிகள் பயிரிட்டு வருகிறேன். நிலமும், மழையும் சரியாக இருக்கும் பட்சத்தில் சுழற்சி முறையில் பருவத்திற்கு தகுந்தபடி விவசாயம் செய்து வருகிறேன். இப்போது காய்கறி பயிர்களுக்குதான் நல்ல மவுசு. அதேபோல ஒரு நாள் விலை குறைவாக இருந்தாலும் இன்னொரு நாள் விலை அதிகம் கிடைக்கும் வாய்ப்பும் இருக்கிறது. இப்போது குத்தகைக்கு எடுத்த நிலத்தில் 10 சென்ட் அளவில் காராமணி விதைத்து அறுவடை செய்து கொண்டிருக்கிறேன்.
காராமணியைப் பொருத்தவரை விளைச்சல் நன்றாக இருப்பதோடு, நோய்த் தாக்குதலும் குறைவாக இருக்கிறது. இதனால் இந்தப் பயிரை சாகுபடி செய்து, விளைச்சல் எடுத்து வருகிறேன். காராமணியை விதைப்பதற்கு முன்பு இரண்டு முறை மண்ணை நன்றாக உழுதேன். முதல் தடவை உழும்போது ஆழமாக உழுது மண்ணை மேல் கீழாக மாற்ற வேண்டும். பிறகு இரண்டாவது உழவின்போது தொழுஉரத்தைக் கொட்டி அதன்மேல் உழ வேண்டும். தொழு உரம் கொடுத்தால்தான் செடிகள் நன்றாக வளரும். உழுது முடித்தபிறகு இரண்டு பாத்திகளுக்கு நடுவே 5 அடி இடைவெளி இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும். அதில் வரிசையாக விதைகளை நடவு செய்தேன். விதைத்து நான்கு நாட்களில் விதைகள் முளைத்து விடும். இதற்கு மூன்று நாட்களுக்கு ஒருமுறை பாசனம் செய்கிறோம். செடிகள் வளர்ந்து ஒரு மாதத்தில் களை எடுப்போம். இவ்வாறு பராமரித்து வருவதன் மூலம் 2 மாதத்தில் காய்ப்பு காய்க்க ஆரம்பித்துவிடும். விளைச்சல் வந்த பிறகு எந்த நோய்த்தாக்குதலும் இல்லாமல் இருந்தால் அடுத்த மூன்று மாதங்களுக்கு அதே விளைச்சல் தொடரும். இரண்டு நாட்களுக்கு ஒருமுறை காய்களைப் பறித்து நானே மார்க்கெட்டில் விற்கிறேன்.
ஒரு அறுவடையின்போது குறைந்தபட்சம் 50 கிலோவில் இருந்து 100 கிலோ வரை கிடைக்கிறது. சராசரியாக ஒரு கிலோ காராமணி 40 ரூபாய்க்கு விற்று வருகிறேன். சில நாட்களில் விளைச்சல் குறைந்து லாபமும் இல்லாமல் போகும். அனைத்தையும் சமாளித்துதான் இந்த விவசாயத்தை செய்து வருகிறேன். செடிகள் விளைச்சல் கொடுக்க தொடங்கிய பிறகு வாரம் ஒருமுறை கலப்பு மருந்துகளை தூவி வருகிறேன். மண்வளம் நன்றாக இருக்கும்போதும், மழை சரியாக பெய்யும்போதும் மகசூல் நல்ல முறையில் கிடைக்கும். இந்த காய்கறி சாகுபடியைப் பொறுத்தவரை நானே கஷ்டப்பட்டு நானே பலனடைகிறேன். அதாவது தினசரி வருமானமாக இந்த காய்கறி பலன் கொடுப்பதால் வேறெங்கும் பணிக்கு செல்லாமல் இந்த விவசாயத்தை கையில் எடுத்து பலனடைந்து வருகிறேன்.
அதோடு எனது உழைப்பையும், பயிர்களின் மீதான அக்கறையான கண்காணிப்பையும் நாள்தோறும் வழங்குவதால் தேவையான மகசூலை திருப்தியாக பெற்று வருகிறேன். காரணம், நானே நேரடியாக இதனை விற்பனை செய்து விடுகிறேன். அதேநேரத்தில் இயற்கை விவசாயத்தின் மீது நாட்டம் இருந்தாலும், அதை சொந்த நிலமாக ஏக்கர் கணக்கில் இருந்தால் அதை செய்யலாம்.ஆனால் குத்தகை நிலம் என்பதால் இயற்கையுடன் கொஞ்சம் செயற்கையையும் கலப்பதுபோல உரங்களை அளவோடு பயன்படுத்துகிறேன். அதனால் மிககுறுகிய காலத்தில் அறுவடை செய்கிறேன். இன்னொன்றையும் சொல்ல வேண்டும். எனக்கு விவசாயத்தை தவிர வேறு ஒன்றும் தெரியாது. ஒரு பக்கம் விவசாயம், மறுபக்கம் கறவை மாடு வளர்ப்பு என்று வாழ்க்கை செல்கிறது. என்றாலும் விவசாயி என்று சொல்வதில் எனக்கு எப்போதும் சந்தோசம்தான்’’ என்கிறார் சுவாமிநாதன்.
ெதாடர்புக்கு:
சுவாமிநாதன்:
96982 06072