புதுடெல்லி: குடியரசு முன்னாள் துணைதலைவர் ஹமீத் அன்சாரியை விமர்சித்து பேசிய பிரதமர் மோடிக்கு எதிராக உரிமை மீறல் தீர்மானம் கொண்டு வர வேண்டுமென காங்கிரஸ் நோட்டீஸ் கொடுத்துள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஜெய்ராம் ரமேஷ் மாநிலங்களவை தலைவர் ஜெகதீப் தன்கருக்கு கடிதம் எழுதி உள்ளார். ஜெய்ராம் ரமேஷ் எழுதியுள்ள கடிதத்தில், “ கடந்த ஜூலை 2ம் தேதி மாநிலங்களவையில் குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் பேசிய பிரதமர் மோடி, கடந்த 2014ல் நாங்கள்(பாஜ) ஆட்சிக்கு வந்தபோது மாநிலங்களவையில் எங்கள் பலம் குறைவாக இருந்தது. ஆனால் அவைத்தலைவரின் ஆதரவு எதிர்புறத்துக்கு இருந்தது.
இதில் ஹமீத் அன்சாரியின் பெயரை பிரதமர் குறிப்பிடவில்லை என்ற போதிலும், பிரதமரின் இந்த இழிவான கருத்துகள் மாநிலங்களவை முன்னாள் தலைவர் மீது கூறப்பட்டவை என்று குறிப்பிட தேவையில்லை. பிரதமரின் இந்த விமர்சனத்தை ஏற்று கொள்ள முடியாது. தற்செயலாக குடியரசு முன்னாள் துணைதலைவர் அன்சாரியை பிரதமர் மோடி விமர்சிப்பது இது முதன்முறை அல்ல. பிரதமர் மோடியை போல் வேறெந்த பிரதமரும் மக்களவை தலைவரையோ, மாநிலங்களவை தலைவரையோ இப்படி விமர்சித்து பேசியதில்லை. மோடி அனைத்து விதிமுறைகளையும் மீறி விட்டார். பிரதமர் மோடிக்கு எதிராக உரிமை மீறல் தீர்மானம் கொண்டு வர நோட்டீஸ் தந்துள்ளேன்” என குறிப்பிட்டுள்ளார்.