ஹாம்பர்க்: ஹாம்பர்க் ஓபன் டென்னிஸ் இறுதிப் போட்டியில் நேற்று, ரஷ்ய வீரர் ஆண்ட்ரே ரூப்லெவை வீழ்த்தி இத்தாலி வீரர் ஃப்ளேவியோ கோபோலி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். ஜெர்மனியின் ஹாம்பர்க் நகரில் ஹாம்பர்க் ஓபன் டென்னிஸ் போட்டிகள் நடந்து வந்தன. இதன் தொடர்ச்சியாக நேற்று நடந்த இறுதிப் போட்டியில் ரஷ்யாவை சேர்ந்த உலகின் 17ம் நிலை வீரர் ஆண்ட்ரே ரூப்லெவ், இத்தாலி வீரர் ஃப்ளேவியோ கோபோலி மோதினர்.
போட்டியின் துவக்கம் முதல் அபாரமாக ஆடிய ஃப்ளேவியோ முதல் செட்டை 6-2 என்ற புள்ளிக் கணக்கில் கைப்பற்றினார். தொடர்ந்து 2வது செட்டையும், 6-4 என்ற புள்ளிக் கணக்கில் அவர் வசப்படுத்தினார். அதனால், 2-0 என்ற கணக்கில் வென்ற அவர் சாம்பியன் பட்டத்தை பெற்றார். ஃப்ளேவியோவுக்கு ரூ. 3.90 கோடி பரிசுத் தொகை வழங்கப்பட்டது. இரண்டாம் இடம் பிடித்த ரூப்லெவிற்கு ரூ.2.10 கோடி பரிசுத் தொகை கிடைத்தது.