வாஷிங்டன்: போர் நிறுத்தத்திற்கு உடன்படவில்லை என்றால் நிலைமை மோசமாகும் என்று ஹமாஸுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். கடந்த 2023ம் ஆண்டு அக்டோபர் 7ம் தேதி, ஹமாஸ் போராளிகள் இஸ்ரேல் மீது நடத்திய திடீர் தாக்குதலில் 1,200 பேர் கொல்லப்பட்டனர்; 251 பேர் பிணையக்கைதிகளாகப் பிடிக்கப்பட்டனர். இதற்குப் பதிலடியாக, காசா மீது இஸ்ரேல் கடுமையான ராணுவத் தாக்குதலைத் தொடங்கியது. இந்தத் தாக்குதலில் இதுவரை 56,000க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதாகவும், காசா பகுதி முழுவதும் இடம்பெயர்வு, பசி, பட்டினி போன்ற பெரும் மனிதாபிமான நெருக்கடியை சந்தித்து வருவதாகவும் காசாவின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
போரை முழுமையாக முடிவுக்குக் கொண்டுவந்தால் மட்டுமே பிணையக்கைதிகளை விடுவிப்பதாக ஹமாஸ் கூறிவரும் நிலையில், ஹமாஸ் ஆயுதங்களை கைவிட்டு சரணடைந்தால் மட்டுமே போர் நிற்கும் என இஸ்ரேல் உறுதியாக உள்ளது. இரு தரப்பும் தங்களது நிலையில் இருந்து பின்வாங்காததால், போர் நிறுத்தம் தொடர்பான பேச்சுவார்த்தைகளில் தொடர்ந்து தேக்கநிலை நீடித்து வந்தது. இந்தச் சூழலில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், காசாவில் 60 நாட்கள் போர் நிறுத்தத்தை ஏற்படுத்துவதற்கான இறுதி முன்மொழிவை ஹமாஸ் ஏற்க வேண்டும் என கடுமையாக வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக இஸ்ரேலிய அதிகாரிகளுடன் அமெரிக்க பிரதிநிதிகள் நீண்ட நேரம் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், இந்த நிபந்தனைகளுக்கு இஸ்ரேல் ஒப்புக்கொண்டுள்ளதாகவும் டிரம்ப் தெரிவித்துள்ளார். கத்தார் மற்றும் எகிப்து நாடுகளின் பிரதிநிதிகள், இந்த இறுதி முன்மொழிவை ஹமாஸிடம் சொல்வார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் தனது பதிவில், ‘மத்திய கிழக்கின் நலனுக்காக ஹமாஸ் இந்த ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்வதே நல்லது; இதை விட சிறந்த வாய்ப்பு அவர்களுக்கு கிடைக்காது. இல்லாவிட்டால் நிலைமை இன்னும் மோசமாகும்’ என்று நேரடியாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பாம்பின் தலையை நசுக்குவது போல்…
காசாவில் ஹமாஸ் அமைப்புக்கு எதிராக இஸ்ரேல் போர் தொடுத்ததைத் தொடர்ந்து, பாலஸ்தீனர்களுக்கு ஆதரவாக ஈரானின் ஆதரவு பெற்ற ஏமனின் ஹவுதி தீவிரவாத அமைப்பினர், இஸ்ரேலை நோக்கித் தொடர்ந்து ஏவுகணை மற்றும் டிரோன் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே 12 நாட்கள் நடந்த போருக்குப் பிறகு, ஹவுதிகள் தங்கள் தாக்குதல்களை மீண்டும் தீவிரப்படுத்தியுள்ளனர். இதற்குப் பதிலடியாக இஸ்ரேலும் ஏமனில் உள்ள ஹவுதிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் பதிலடித் தாக்குதல்களை நடத்தியுள்ளது.
இதுகுறித்து ஹவுதி அமைப்பின் ராணுவ செய்தித் தொடர்பாளர் யாஹ்யா சரீ கூறுகையில், ‘பாலஸ்தீன் – 2 என்ற ஹைப்பர்சோனிக் பாலிஸ்டிக் ஏவுகணை மூலம் இஸ்ரேலின் லோட் விமான நிலையத்தை வெற்றிகரமாகத் தாக்கினோம். இதனால் விமான நிலையச் செயல்பாடுகள் முடங்கியது’ என்றார். இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து கடும் கண்டனம் தெரிவித்துள்ள இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ், ‘தெஹ்ரானில் (ஈரான்) பாம்பின் தலையை நசுக்கியது போல, ஏமனில் உள்ள ஹவுதிகளையும் தாக்குவோம். இஸ்ரேலுக்கு எதிராக கையை உயர்த்துபவர்களின் கை துண்டிக்கப்படும்’ என்று மிகக் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார்.