வாஷிங்டன்: ஹமாஸ், ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர்கள் அடுத்தடுத்து கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, ஈரான் – இஸ்ரேல் இடையே போர் மூளும் அபாயம் அதிகரித்துள்ளது. இதனால், இஸ்ரேலுக்கு உதவும் வகையில் மத்திய கிழக்கில் அமெரிக்கா தனது ராணுவ இருப்பை அதிகரிக்கிறது. அமெரிக்க போர்க்கப்பல்கள் மத்திய கிழக்கு நோக்கி நகர்த்தப்பட்டிருப்பது போர் பதற்றத்தை அதிகரித்துள்ளது. காசாவை ஆளும் ஹமாஸ் படையினர் கடந்த ஆண்டு அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேலில் புகுந்து நடத்திய கொடூர தாக்குதலில் பொதுமக்கள், ராணுவத்தினர் என 1,200 பேர் கொல்லப்பட்டனர். 200க்கும் மேற்பட்டோரை பிணைக் கைதிகளாக ஹமாஸ் படையினர் பிடித்துச் சென்றனர். இதற்கு பதிலடியாக இஸ்ரேல் ராணுவம் காசா மீது போர் தொடுத்தது.
கடந்த 10 மாதத்திற்கு மேலாக நடக்கும் இப்போரில் காசாவில் சுமார் 40,000 பாலஸ்தீன மக்கள் பலியாகி உள்ளனர். ஹமாஸ் மீதான போரை கண்டித்துள்ள ஈரான் தனது ஆதரவு படைகளான ஹிஸ்புல்லா மூலமாக லெபானானிலும், ஹவுதி மூலமாக ஏமன் வளைகுடா பகுதியிலும், சிரியாவிலும் இஸ்ரேலுக்கு குடைச்சல் தருகிறது. இந்த விவகாரத்தில் இஸ்ரேலுக்கு அமெரிக்கா தொடர்ந்து பக்கபலமாக இருந்து வருகிறது. சிரியாவில் கடந்த ஏப்ரல் 13ம் தேதி ஈரான் தூதரகம் மீதான வான்வழி தாக்குதலைத் தொடர்ந்து இஸ்ரேலை நோக்கி ஈரான் ராணுவம் 300 ஏவுகணை, டிரோன்களை ஏவி முதல் முறையாக நேரடி தாக்குதல் நடத்தியது. இதில் அனைத்து டிரோன்களை சுட்டு வீழ்த்த அமெரிக்கா உதவி செய்தது. அப்போதே உலக நாடுகள் வலியுறுத்தியதைத் தொடர்ந்து ஈரான் மீது தாக்குதல் நடத்தாமல் இஸ்ரேல் அமைதி காத்தது.
ஆனாலும், இந்த சம்பவத்தை தொடர்ந்து ஈரான் ஆதரவு பெற்ற ஹமாஸ், ஹிஸ்புல்லா, ஹவுதி அமைப்பின் தலைவர்களை இஸ்ரேல் குறிவைத்தது. அதன்படி, கடந்த சில நாட்களுக்கு முன், ஈரான் தலைநகர் டெஹ்ரானில் ஹமாஸ் அமைப்பின் அரசியல் பிரிவு தலைவர் இஸ்மாயில் ஹனியே படுகொலை செய்யப்பட்டார். ஹிஸ்புல்லாவின் முக்கிய தளபதி புவாத் ஷுக்ரை கொன்றதாக இஸ்ரேல் ராணுவம் அறிவித்த சில மணி நேரத்தில் ஹனியே கொல்லப்பட்டார். ஆனாலும் ஹனியே கொல்லப்பட்டது குறித்து இஸ்ரேல் எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை.
இது ஈரானை மேலும் ஆத்திரமூட்டி உள்ளது. காசா போர் நிறுத்த பேச்சுவார்த்தையில் முக்கிய நபராக இருந்தவர் ஹனியே. எனவே அவரது படுகொலைக்காக இஸ்ரேலுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும் என ஈரான் உச்ச தலைவர் காமனேயி சூளுரைத்திருந்தார். இதன் காரணமாக, ஈரான், இஸ்ரேல் இடையே போர் மேகங்கள் சூழ்ந்துள்ளன. இந்நிலையில், போர் பதற்றத்தை மேலும் அதிகரிக்கும் வகையில் மத்திய கிழக்கில் அமெரிக்கா தனது ராணுவ இருப்பை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. மத்திய கிழக்கு நோக்கி பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் விமானம் தாங்கி போர்க்கப்பல்களை நிலைநிறுத்த அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் நேற்று உத்தரவிட்டுள்ளது.
நேற்று முன்தினம் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, அமெரிக்க அதிபர் பைடனுடன் தொலைபேசியில் உரையாடினார். அப்போது, ஈரான் தாக்குதல் நடத்தும் சாத்தியக்கூறுகள் குறித்தும், போர்க்கப்பல்கள் நிலைநிறுத்துவது குறித்தும் இரு தலைவர்கள் விவாதித்தாக வெள்ளை மாளிகை தெரிவித்தது. அதைத் தொடர்ந்து, மத்திய கிழக்கில் ஆயுதம் தாங்கிய பயங்கரமாக போர்க்கப்பல்கள் அனுப்பப்படுவது பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. விமானப்படைகள், போர்க்கப்பல்கள் எங்கு நிலைநிறுத்தப்படும் என்பது குறித்த தகவல்களை பென்டகன் வெளியிடவில்லை. அதே சமயம், குறைந்தபட்சம் அடுத்த ஆண்டு வரை ஈரானுக்கு எதிரான மத்திய கிழக்கில் அதிகரிக்கப்பட்ட படைபலத்தை நிலைநிறுத்த பென்டகன் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அமெரிக்க போர்க்கப்பல்களின் நகர்வு ஈரான், இஸ்ரேல் இடையே எந்த நேரத்திலும் போர் மூளலாம் என்பதை குறிப்பிடுவதாக இருப்பது பதற்றத்தை அதிகரித்துள்ளது.
* இந்தியர்களுக்கு எச்சரிக்கை
இதற்கிடையே, இஸ்ரேலில் உள்ள இந்தியர்களுக்கு அங்குள்ள இந்திய தூதரம் மூலமாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, அவசியமற்ற நோக்கத்திற்காக யாரும் லெபனான் நாட்டிற்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இஸ்ரேலின் டெல் அவிவ்வுக்கு செல்லும் ஏர் இந்தியா விமானம் வரும் 8ம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது.
* ஹமாஸ் தலைவரை கொன்றது குறுகிய தூர ஏவுகணை
இதனிடையே ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே குறுகிய தூர ஏவுகணை மூலம் கொல்லப்பட்டதாக ஈரான் குற்றம்சாட்டி உள்ளது. ‘‘ஹமாஸ் தலைவரின் குடியிருப்பு மீது ஏழு கிலோகிராம் கொண்ட ராக்கெட் வீசப்பட்டுள்ளது. இந்த தாக்குதல், அமெரிக்காவின் உதவியுடன் இஸ்ரேலால் நடத்தப்பட்டது. இதற்கான தண்டனை நிச்சயம் கிடைக்கும்” என ஈரான் தெரிவித்துள்ளது.