ஹத்ராஸ்: ஹத்ராஸ் நெரிசலில் 121 பேர் பலியான சம்பவத்தில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் தேவ்பிரகாஷ் மதுகரை உத்தரப்பிரதேச போலீசார் கைது செய்துள்ளனர். உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸில் கடந்த 2ம் தேதி போலே பாபா ஆன்மீக சொற்பொழிவு நிழ்ச்சி நடந்தது. அப்போது கூட்ட நெரிசலில் சிக்கி 121 பேர் உயிரிழந்தனர். இதைத் தொடர்ந்து, சாமியார் போலே பாபா சூரஜ்பாலின் ஆதரவாளர்கள் மற்றும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மீது சிங்கந்ரா ராவ் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக இரண்டு பெண் தன்னார்வலர்கள் உட்பட ஒருங்கிணைப்பு குழு உறுப்பினர்கள் 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
மேலும் சொற்பொழிவு நிகழ்ச்சியின் முக்கிய ஒருங்கிணைப்பாளரான தேவ்பிரகாஷ் மதுகரை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். அவர் டெல்லி தப்பி சென்றதாக கூறப்பட்டது. இந்நிலையில் தேவ்பிரகாஷ் மதுகர் டெல்லியின் நஜாப்கர் பகுதியில் இருந்து ஹத்ராஸ் காவல்துறையின் சிறப்பு குழுவால் கைது செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது குறித்து ஹத்ராஸ் எஸ்பி நிபுன் அகர்வால் கூறுகையில், ‘‘தேவ்பிரகாஷ் போலே பாபாவின் நிகழ்ச்சிகளுக்கு நிதி சேகரிப்பாளராக பணியாற்றி நன்கொடைகளை சேகரித்து வந்துள்ளார். அவரை காவலில் எடுத்து விசாரிக்க விண்ணப்பிக்கப்படும். அவரது நிதி பரிவர்த்தனைகள், பண பரிவர்த்தனைகள் ஆய்வு செய்யப்படும். அவரது செல்போன் பதிவுகளும் சோதனை செய்யப்படும்” என்றார்.
எனினும் தேவ்பிரகாஷ் மதுகரின் வழக்கறிஞர் ஏபி சிங் வெளியிட்டுள்ள வீடியோ செய்தியில், ‘‘ஹத்ராஸ் வழக்கில் எப்ஐஆரில் முக்கிய நபராக குறிப்பிடப்பட்ட தேவ்பிரகாஷ் மதுகர் டெல்லி போலீசில் சரணடைந்துள்ளார். அவர் அங்கு சிகிச்சை பெற்று வந்ததால் சரண் அடைந்தார். நாங்கள் எந்த தவறும் செய்யவில்லை என்பதால் முன்ஜாமீன் கோரி விண்ணப்பிக்க மாட்டோம் என உறுதியளித்தோம். நாங்கள் எந்த தவறும் செய்யவில்லை.என்ன குற்றம் செய்தோம்? அவர் ஒரு என்ஜினியர். இதயநோயாளி. அவரது உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். எனவே விசாரணைக்கு ஒத்துழைப்பு தருவதற்காக சரண் அடைந்தோம். அவர் சமூகவிரோதிகள் குறித்த தகவலை பகிர்ந்து கொள்வார். போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வாக்குமூலத்தை பதிவு செய்யலாம். ஆனால் அவரது உடல்நிலையை கருத்தில் கொள்ள வேண்டும்” என்றார். இதனிடையே தலைமறைவாக இருந்ததால், தேவ்பிரகாஷ் குறித்த தகவல் தெரிவிப்போருக்கு ஒரு லட்சம் ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என்று போலீசார் அறிவித்து இருந்த நிலையில் அவர் சரண் அடைந்துள்ளதாக அவரது வக்கீல் தெரிவித்து உள்ளார்.