ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை அருகே, ஆந்திர அரசு பேருந்து மூலம் சென்னைக்கு குட்கா கடத்தி வந்தவரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து 6 கிலோ குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர். ஊத்துக்கோட்டை அருகே, ஆந்திர மாநிலத்தில் இருந்து அரசுப்பேருந்து மூலம் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்கள் கடத்தி வரப்படுவதாக நேற்று முன்தினம் மாலை ஊத்துக்கோட்டை டிஎஸ்பி சாந்திக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதுகுறித்து தகவலறிந்ததும், ஊத்துக்கோட்டையில் தமிழக-ஆந்திர எல்லைப் பகுதியில் உள்ள போலீஸ் சோதனைச்சாவடியில் நேற்று முன்தினம் இரவு மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு சிறப்பு எஸ்ஐ ஏழுமலை தலைமையில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியே திருப்பதியில் இருந்து சென்னை வந்த ஆந்திர அரசுப் பேருந்தை நிறுத்தி, பயணிகளிடம் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அதில், சீட்டுக்கு அடியில் குட்கா பொருட்களை பதுக்கி கடத்தி வந்தவரை போலீசார் மடக்கி பிடித்து விசாரித்தனர். அவர் முன்னுக்குபின் முரணாக பதிலளித்ததால் அவரை காவல் நிலையம் கொண்டு வந்து விசாரித்தனர்.
விசாரணையில், அவர் காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகே இளமையின்கோட்டூர் கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணன் (50) என்பது தெரியவந்தது. மேலும், இவர் ஆந்திர மாநிலத்துக்கு அடிக்கடி சென்று, அரசுப் பேருந்து மூலம் குட்கா, போதை பொருட்களை கடத்தி வந்து, சென்னை புறநகர் பகுதிகளில் சில்லறை விற்பனையில் ஈடுபட்டு வந்திருப்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து, அவரை ஊத்துக்கோட்டை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதுகுறித்து, ஊத்துக்கோட்டை போலீசார் கிருஷ்ணனை கைது செய்தனர். அவரிடம் இருந்து 6 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.