சென்னை: தமிழகம் முழுவதும் கடந்த 3 மாதங்களில் 40 டன் குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது. பள்ளி, கல்லூரிகளுக்கு அருகே விற்பனை செய்யப்பட்டதன் அடிப்படையில் அதிரடி நடவடிக்கை மேற்கோடனுள்ளது.
உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிலைச் சட்டம் 2006 படி புகையிலை பொருட்களால் ஏற்படும் கடுமையான பாதிப்புகளைக் கருத்தில் கொண்டு, குட்கா, பான் மசாலா மற்றும் இதர புகையிலை பொருட்களின் விற்பனையைத் தமிழக அரசு தடை செய்துள்ளது. இது தொடர்பாக கல்வி நிலையிங்களுக்கு அருகில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனைக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க அனைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் காவல் ஆணையர்களுக்கு காவல்துறை தலைமை இயக்குநர் படைத்தலைவர் அறிவுறுத்தியுள்ளார்.
ஜூன் 2024 முதல் கடந்த 3 மாதங்களில் 40730 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும் குற்றவாளிகளுக்கு எதிராக 5006 வழக்குகள் பிரத்யேகமாக காவல்துறையால் பதிவு செய்யப்பட்டுள்ளன.
மேலும் காவல்துறை அளித்த அறிக்கையின் அடிபடையில் உணவுப் பாதுகாப்புத் துறையால் ரூபாய் 7.26 கோடி அபராதம் விதிக்கப்பட்டது மற்றும் 2997 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது. இது தவிர கல்வி நிலையங்களுக்கு அருகே மணவர்களிடையே தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை ஒழிக்க காவல்துறை, உணவு பாதுகாப்பு துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகளை சேர்ந்த 391 குழுக்கள் இணைந்து சோதனைகள் நடத்தி வருகின்றன.
தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை தொடர்பான தகவல்களை 10581 கட்டணமில்லா இலவச தொலைபேசி எண் மூலம் பகிருமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறர்கள். மேலும் 9498410581 என்ற வாட்ஸ்அப் எண்ணில் அல்லது spnibcid@gmail.com என்ற மின்னஞ்சல் மூலம் செய்தி அனுப்பலாம்.